search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு
    X

    திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு

    திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியால் இயங்கும் 2 எலக்ட்ரிக் பஸ்களை இயக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. #Tirupatitemple

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக திருப்பதி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் திருப்பதி வரை வருகின்றன. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏராளமான பக்தர்களும் வாகனங்களில் வருகின்றனர். சாதாரண பக்தர்களுக்காக ஆந்திர மாநில அரசு சார்பில், திருப்பதியில் இருந்து திருமலை வரை பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், திருமலையில் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுப்படுகிறது.

    எனவே திருமலையில் சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தடுக்கவும், பக்தர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கவும் ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியால் இயங்கும் 2 எலக்ட்ரிக் பஸ்களை இயக்க முடிவு செய்தது. அதன்படி, 5-ந்தேதி எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அன்றே அதன் தொடக்க விழா நடக்கிறது. இந்த இரு பஸ்களும் ஒரு மாதம் வரை சோதனை ஓட்டம் அடிப்படையில் இயக்கப்படும்.

    நேற்று முன்தினம் அரசு போக்குவரத்துக்கழக திருப்பதி மண்டல அதிகாரி செங்கல்ரெட்டி தலைமையில் போக்குவரத்து அதிகாரிகள் எலக்ட்ரிக் பஸ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து கரகம்பாடி சாலை வரை ஓட்டிச்சென்று ஆய்வு செய்தனர். அவர்களுடன் எலக்ட்ரிக் பஸ்சை வடிவமைத்த என்ஜினீயர்களும் சென்று பஸ்சின் நிலை, செயல்படும் விதம் ஆகியவை குறித்து விளக்கினர்.

    இந்த எலக்ட்ரிக் பஸ்களை இயக்க 4 டிரைவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இரு பஸ்களுக்கும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பதிவெண் வழங்கி உள்ளனர். ஒரு பஸ்சுக்கு 3 மணிநேரம் முழு சார்ஜ் செய்தால் சுமார் 250 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடும். அதன்படி, திருப்பதியில் இருந்து திருமலை வரை மலைப்பாதையில் 4 முறை ஒரு எலக்ட்ரிக் பஸ் இயக்கப்படும். தற்போது டீசல் மூலம் இயக்கப்படும் பஸ் கிலோ மீட்டருக்கு ரூ.16 வரை செலவாகிறது. ஆனால், எலக்ட்ரிக் பஸ்சை இயக்குவதால் கிலோ மீட்டருக்கு ரூ.3 செலவாகிறது.

    இந்த எலக்ட்ரிக் பஸ்சுக்கு என்ஜின், கியர் கிடையாது. பேட்டரி மட்டுமே பொருத்தப்பட்டு இருக்கும். ஆனால், முன்னும் பின்னும் இயக்க வல்லது. அதிநவீன தொழில் நுட்பம் வாய்ந்ததாகும். ஒரு பஸ்சின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும். இந்தப் பஸ்சை வாங்கினால் மத்திய அரசு 60 சதவீதம் முதல், 70 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. இந்த எலக்ட்ரிக் பஸ்சில் 31 இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தப் பஸ்சை இயக்குவது வெற்றி பெற்றால், தொடர்ந்து இயக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Tirupatitemple #tamilnews

    Next Story
    ×