search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான் எனது கடமையை செய்துள்ளேன் - என் மீது மானநஷ்ட வழக்கு தொடர முடியாது: டி.ஐ.ஜி. ரூபா சிறப்பு பேட்டி
    X

    நான் எனது கடமையை செய்துள்ளேன் - என் மீது மானநஷ்ட வழக்கு தொடர முடியாது: டி.ஐ.ஜி. ரூபா சிறப்பு பேட்டி

    “நான் எனது கடமையை செய்துள்ளேன், என் மீது மானநஷ்ட வழக்கு தொடர முடியாது” என்று டி.ஐ.ஜி. ரூபா கூறினார்.
    பெங்களூரு:

    “நான் எனது கடமையை செய்துள்ளேன், என் மீது மானநஷ்ட வழக்கு தொடர முடியாது” என்று டி.ஐ.ஜி. ரூபா கூறினார்.

    சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.

    ரூபாவின் குற்றச்சாட்டை சத்தியநாராயணராவ் முழுவதுமாக மறுத்தார். இந்த நிலையில் சிறையில் சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்ட 5 அறைகள் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியது.



    இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது. அந்த குழுவினர் பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு சென்று ஆய்வு நடத்தியது. இந்த விசாரணையின் முதல் கட்ட அறிக்கை இன்று (புதன்கிழமை) மாநில அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே சசிகலா பற்றிய குற்றச்சாட்டுகளைக் கூறிய டி.ஐ.ஜி. ரூபா மீது மானநஷ்ட வழக்கு போடப்போவதாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கூறினார்கள்.

    இந்த நிலையில் பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, பெங்களூருவில் நேற்று ‘தினத்தந்தி’ நிருபருக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது:-

    நான் தனிப்பட்ட முறையில் சசிகலாவை இலக்காக கொண்டு செயல்பட்டு இந்த முறைகேடுகளை வெளியே கொண்டு வரவில்லை. இவ்வாறு யாராவது குற்றம்சாட்டினால் அது தவறானது. பரப்பனஅக்ரஹாரா சிறையில் சட்டவிரோதமான செயல்கள் நடப்பதாக எனக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நான் அந்த சிறைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினேன்.

    அப்போது அங்கு சிறை விதிகளுக்கு மாறாக சசிகலாவுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு இருந்ததை நான் கண்கூடாக பார்த்தேன். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவற்றுக்கான ஆதாரங்களை நான் சேகரித்தேன்.

    அதன் அடிப்படையில் முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை தயாரித்து, எனது மேல் அதிகாரியான சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு வழங்கினேன். சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்த முழு விவரங்களையும் அறிக்கையில் கூறி இருக்கிறேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

    முறைகேடுகளை வெளியே கொண்டு வந்த பிறகு எனக்கு எங்கிருந்தும் மிரட்டல் எதுவும் வரவில்லை. சிறைத்துறை அதிகாரியான நான் எனது கடமையை செய்துள்ளேன்.

    அதனால் என் மீது மானநஷ்ட வழக்கு போட முடியாது. இந்த முறைகேட்டில் மாநில அரசுக்கு தொடர்பு இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். எனக்கு தெரிந்தவரையில் மாநில அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவ்வாறு எந்த தகவலும் எனது கவனத்திற்கு வரவில்லை.

    பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், முதலில் தொடர்புடைய சிறை அதிகாரிகள் மீது தான் நடவடிக்கை இருக்கும்.

    சசிகலாவுக்கு கூடுதல் சிறை தண்டனை விதிக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். சிறைத்துறை விதிமுறைகளில் கைதிகள் தவறு செய்தால் என்ன தண்டனை வழங்கப்படும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதை வேண்டுமானால் உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். அதன்படி அவருக்கு தண்டனை கிடைக்கும்.

    இந்த முறைகேடுகள் பற்றி சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று பா.ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது பற்றி என்னால் கருத்து எதுவும் சொல்ல முடியாது. நான் துணிச்சலாக செயல்பட்டதாக சிலர் சொல்கிறார்கள். இதில் துணிச்சலுக்கு இடம் இல்லை. நான் எனது கடமையை செய்துள்ளேன். நான் பணி இடமாற்றம் செய்யப்பட்டேன்.

    தற்போது புதிய பொறுப்பில் பணியாற்றுகிறேன். அரசு சேவையாற்றும் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று தான். இதில் குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் நான் எதற்காகவும் பயப்படவில்லை. என் கடமையை ஆற்றுவதற்கு எதற்காக நான் பயப்பட வேண்டும்? இந்த விவகாரத்தில் எனது நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அதே நேரத்தில் இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. நான் திரும்பவும் சொல்கிறேன், ஒரு அதிகாரியாக நான் எனது கடமையை ஆற்றுகிறேன்.” இவ்வாறு டி.ஐ.ஜி. ரூபா கூறினார். 
    Next Story
    ×