என் மலர்
இந்தியா
- இது நான்கு இதழ்கள் போன்ற அமைப்புகளைக் கொண்டிருந்தது.
- பல தசாப்தங்களாக அதுகுறித்த எந்த தகவலும் வெளியாகாமல் மர்மமாகவே இருந்தது.
லூனா 9 (Luna 9) என்பது நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய உலகின் முதல் விண்கலமாகும். இது சோவியத் ஒன்றியத்தால் (தற்போதைய ரஷியாவால்) ஏவப்பட்டது. இந்த விண்கலம் 1966-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந்தேதி அன்று நிலவின் 'மழைக்கடல்' (Oceanus Procellarum) பகுதியில் மென்மையாகத் தரையிறங்கியது.
நிலவின் மேற்பரப்பில் இருந்து முதன்முதலில் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது லூனா 9 விண்கலமே ஆகும். நிலவின் மேற்பரப்பு மிகவும் மென்மையானது அல்ல, அதில் விண்கலங்கள் புதையாமல் நிற்க முடியும் என்பதை நிரூபித்தது.
இது நான்கு இதழ்கள் போன்ற அமைப்புகளைக் கொண்டிருந்தது. இவை விரிந்து விண்கலத்தைச் சமநிலைப்படுத்த உதவின.இந்த விண்கலம் தரையிறங்கிய பின் சுமார் மூன்று நாட்களுக்கு இது பூமியுடன் தொடர்பில் இருந்து தகவல்களை வழங்கியது. அதன்பின்னர் பல தசாப்தங்களாக அதுகுறித்த எந்த தகவலும் வெளியாகாமல் மர்மமாகவே இருந்தது.
இந்த நிலையில், லூனா 9 விண்கலத்தை கண்டுபிடிக்க இங்கிலாந்து மற்றும் ஜப்பானில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர்.
நாசாவின் சந்திர மறுமதிப்பீட்டு ஆர்பிட்டர் (LRO) மூலம் சந்திர மேற்பரப்பின் படங்களை ஸ்கேன் செய்ய, அவர்கள் YOLO-ETA (You-Only-Look-Once-Extraterrestrial Artifact) எனப்படும் மேம்பட்ட இயந்திர கற்றல் வழிமுறையைப் பயன்படுத்தினர்.
லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த லூயிஸ் பினால்ட் தலைமையிலான குழு, npj விண்வெளி ஆய்வு இதழில் முடிவுகளை வெளியிட்டது. இந்தியாவின் சந்திரயான்-2 ஆர்பிட்டரில் இருந்து புதிய அவதானிப்புகளைப் பயன்படுத்தி அவர்களின் மாதிரியின் கணிப்புகள் விரைவில் சோதிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
- தீபக் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக ஷிம்ஜிதா என்பவர் வீடியோ வெளியிட்டிருந்தார்
- தற்கொலைக்கு தூண்டியதாக வீடியோ பதிவிட்ட ஷிம்ஜிதாவை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 16ம் தேதி அன்று, ஒரு பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியேவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
சுமார் 18 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், நெரிசலான பேருந்தில் தீபக்கின் கை அந்தப் பெண்ணின் மீது உரசுவது போலக் காட்சிகள் இருந்தன. இது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
இந்த வீடியோ வைரலானதால் தீபக் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபக் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தீபக்கின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து, உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஷிம்ஜிதாவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஷிம்ஜிதாவுக்கு கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. 21 நாட்கள் சிறையில் இருந்ததை கணக்கில் கொண்டு நிபந்தனைகளுடன் கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமின் அளித்தது.
- ராகுல்காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை
- ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யவேண்டும்.
இந்தியா - அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக சமீபத்தில் கூட்டறிக்கை வெளியிடப்பட் டது. இதை சுட்டிக்காட்டி நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவை மத்திய அரசு விற்றுவிட்ட தாக குற்றம் சாட்டினார். இந்தியாவின் நலனில் மத்திய அரசு சமரசம் செய்ததாகவும் கூறினார். இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது. ராகுல்காந்தி தவறான தகவல்களை அளிப்பதாக பதிலடி கொடுத்தது. மேலும் அவருக்கு எதிராக மத்திய அரசு உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வரப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் ராகுல்காந்திக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே நோட்டீஸ் அளித்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எதிர்க் கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை. கோரோஸ் அறக்கட்டளை, போர்டு அறக்கட்டளை மற்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் ஆகியவற்றுடன் அவர் எவ்வாறு தொடர்பு கொள்வார். தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், அமெரிக்கா போன்ற இடங்களுக்கு எவ்வாறு பயணம் செய்கிறார். ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளார் என்பதை குறிப்பிட்டு ஒரு முக்கிய தீர்மானத்தை நான் சமர்பித்துள்ளேன்.
அவரது எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும் என்றும், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் நான் கோரியுள்ளேன்." என நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடி சபாநாயகர் முதுகின் பின்னால் ஒளிந்துகொள்கிறார்.
- பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அங்கு இருந்தனர்
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.
பிபர்வரி 4 ஆம் தேதி குடியரசு தலைவர் உரை மீதான தீர்மானத்தின் மீது பிரதமர் உரையாற்ற இருந்தபோது காங்கிரஸ் எம்.பிக்கள் அவரை தாக்க முயன்றனர் என்றும் பாதுகாப்பு கருதி அடுத்த நாள் அவைக்கு வரவேண்டாம் என்று பிரதமரை கேட்டுக்கொண்டதாகவும் மக்களவை சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இது முற்றிலும் பொய் என மறுத்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி பெண் எம்பிக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல பயந்து சபாநாயகர் முதுகின் பின்னால் ஒளிந்துகொள்வதாக குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் முற்றுகையிடும் வீடியோவை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த 10 ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.
இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறைக்குள் நுழைந்து அவரை அவதூறாகப் பேசி மிரட்டியதாக கிரண் ரிஜிஜு இன்று குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் அறைக்குள் இருக்கும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ரிஜிஜு, "காங்கிரஸ் எம்.பி. ஒருவரால் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், 20-25 காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் அறைக்குள் நுழைந்து அவரை அவதூறாகப் பேசியதும், பிரதமரை மிரட்டியதும் பதிவாகியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் போது பிரியங்கா காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அங்கு இருந்ததாக கூறிய ரிஜிஜு, அவர்கள் நேரடியாகச் சபாநாயகரைத் திட்டவில்லை என்றாலும், மற்ற எம்.பி.க்கள் மிரட்டுவதையும் தாக்குவதையும் அவர்கள் ஊக்குவித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் மக்களவையில், 2020 இந்தியா-சீனா எல்லை மோதல் தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதிய வெளியிடப்படாத சுயசரிதையின் சில பகுதிகளை மேற்கோள் காட்ட ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்தே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று தெரிகிறது.
இதற்கிடையில், சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவரைப் பதவியில் இருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
- இன்று முழு தொழிலாளர் சங்கமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் குற்றச்சாட்டை பிரியங்கா காந்தி மறுத்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது,"சபாநாயகர் அறைக்குள் சென்ற நாங்கள் யாரையும் திட்டவில்லை. 2 எம்.பி.க்கள் மட்டும் கிளர்ந்தெழுந்தனர்.
அவர்கள் அதை வெளிப்படுத்தினர். நான் அவர்களை ஊக்குவித்ததாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். இது ஒரு பொய். நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். இறுதியில், நான் சில விஷயங்களை அமைதியாகச் சொன்னேன்.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். இன்று முழு தொழிலாளர் சங்கமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம். ராகுல்காந்திக்கு எதிராக வழக்குகள் உள்ளிட்ட வேறு எதையும் அவர்கள் செய்வார்கள். ஆனால் எதுவும் ராகுல்காந்தியை பாதிக்க போவதில்லை" என்றார்.
- ஓய்வுபெற்ற கடற்படை கேப்டன், பல் மருத்துவரான தனது மனைவியுடன் வசித்து வந்தார்
- தங்களால் அவ்வளவு பணத்தைத் தர முடியாது என்று கூறினர்.
ஸ்டார்ட்அப் தொழிலுக்குப் பணம் தராததால் பெற்ற தாய் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரங்கேறி உள்ளது.
பெங்களூரு விஞ்ஞான் நகர் பகுதியில் ஓய்வுபெற்ற கடற்படை கேப்டன் நவீன் சந்திர பட் (60), பல் டாக்டரான அவரது மனைவி ஷியாமளா பட் (55) உடன் வசித்து வந்தார்.
இவர்களின் மகன் ரோகன் சந்திர பட் (33), அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிவிட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு திரும்பினார்.
பெங்களூருவிலேயே புதிதாக ஸ்டார்ட்அப் தொழில் தொடங்க விரும்பிய அவர் முதலீட்டைத் திரட்ட முடியாமல் இருந்த நிலையில் பெற்றோரிடம் நிதி உதவி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்.
ஆனால் தங்களால் அவ்வளவு பணத்தைத் தர முடியாது என்று பெற்றோர் கூறியதால் ஆத்திரத்தில் இருந்த ரோகன், அவர்களுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
இதனால் சில காலத்திற்கு முன்பு ரோகன் சந்திர பட், வர்த்தூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று, தாய், தந்தை வீட்டுக்கு சென்ற ரோகன் சந்திர பட், காலை 8 மணியளவில் அவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரையும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார், காயமடைந்த தம்பதியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் ரோகன் சந்திர பட்-ஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவை நாடாளுமன்றத்தில் பட்டியலிட்ட மத்திய அரசு.
- செலவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் விளக்கம்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு ரூ.462.58 கோடி செலவிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வழங்கிய தகவலின்படி, இந்தப் பயணச் செலவுகளில் விமானப் பயணம், தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அடங்கும்.
அமெரிக்கப் பயணங்களுக்கு மட்டும் மொத்தத் தொகையில் சுமார் 16% செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான பயணங்களுக்குத் தலா 9% நிதி செலவிடப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டுப் பயணம் மிகவும் அதிக செலவான ஒன்றாகக் கருதப்படுகிறது (சுமார் ரூ.25.5 கோடி).
இதற்கு அடுத்ததாக 2023 ஜூன் அமெரிக்கப் பயணம் (ரூ.22.8 கோடி) இடம் பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், முந்தைய காலக்கட்டங்களின் செலவுகளும் ஒப்பிடப்பட்டன.
2014 - 2019 ரூ.446.52 கோடி முதலாம் ஆட்சிக்காலம்
2021 - 2025 ரூ.462.58 கோடி இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆட்சிக்காலப் பகுதிகள்.
2020 மற்றும் 2021-ன் முற்பகுதியில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வெளிநாட்டுப் பயணங்கள் பெருமளவு குறைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செலவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
அதில்,"இந்தப் பயணங்கள் இந்தியாவின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றங்களை மேம்படுத்தவும் உதவுகின்றன" என்று தெரிவித்துள்ளது.
மேலும், ஜி20 (G20), பிரிக்ஸ் (BRICS) போன்ற சர்வதேச உச்சிமாநாடுகளில் இந்தியாவின் பங்களிப்பை உறுதி செய்ய இப்பயணங்கள் அவசியம் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- போராட்டத்திற்கு கேரள அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் முழு ஆதரவு.
- தொழிலாளர்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன் - ராகுல் காந்தி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் நடத்தி வருகிறது.
29 பழைய தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு நவம்பர் 2025-இல் அறிவிக்கப்பட்ட நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், அணுசக்தி துறையை தனியாருக்கு திறந்து விடும் SHANTI சட்டம், மின்சாரத் திருத்த சட்டம், விவசாயிகளை பாதிக்கும் வரைவு விதை மசோதா ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும், வி.பி.ஜி ராம் ஜி சட்டத்தை ரத்து செய்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் பழையபடி அமல்படுத்த வேண்டும்.
அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் மற்றும் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும், விக்சித் பாரத் - கிராமின் மிஷன் 2025 சட்டத்தை ரத்து செய்து, இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
போராட்டத்திற்கு கேரள அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் முழு ஆதரவு அளித்துள்ளதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டத்திற்க்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்று, நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
புதிய நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும் தங்கள் உரிமைகளைப் பலவீனப்படுத்தும் என்று தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.
வர்த்தக ஒப்பந்தம் தங்கள் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
மேலும் MNREGA-வை பலவீனப்படுத்துவது அல்லது நீக்குவது கிராமங்களுக்கான கடைசி ஆதரவையும் பறித்துவிடும்.
அவர்களின் எதிர்காலம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டபோது, அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டன.
மோடிஜி இப்போது கேட்பாரா? அல்லது அவர் மீதான பிடி இன்னும் அதிகமாக உள்ளதா? தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- மும்பை நரிமண் பாயிண்ட்டில் இருந்து ஓர்லிக்கு செல்லும் கடற்கரை சாலையில் புதிய முயற்சி.
- சாலையில் 500 மீட்டர் நீளத்திற்கு இசை ஒலிக்கும் கருவிகள் பொருத்தம்.
மும்பை நரிமண் பாயிண்ட்டில் இருந்து ஓர்லிக்கு வடக்கு நோக்கி செல்லும் கடற்கரை சாலையில் ஒரு புதிய முயற்சியாக இந்தியாவிலேயே முதல் முறையாக இசை சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இசை சாலை உலகிலேயே 5-வது சாலையாக விளங்குகிறது.
இசை சாலையை நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஹங்கேரி தூதர் பரன் ஜாரி, சிவசேனா முன்னாள் எம்.பி. ராகுல் செவாலே, மாநகராட்சி கூடுதல் கமிஷனர் அவினாஷ் தக்னே உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பட்னாவிஸ் பேசும் போது, "இந்த கடற்கரை சாலையில் உருவாக்கப்பட்ட இசை சாலை வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும். ஹங்கேரிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட இந்த புதுமையான சாலை, எதிர்காலத்தில் மேலும் செயல்படுத்தப்படும்" என்று அவர் கூறினார்.
இது குறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஒர்லியில் இருந்து நிலத்தடி சுரங்கப்பாதையை விட்டு வெளியேறிய பிறகு நரிமண் பாயிண்ட் வரை சாலையில் 500 மீட்டர் நீளத்திற்கு இசை ஒலிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
வாகனங்கள் மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்போது 'ஜெய் ஹோ' பாடலை வாகனத்தின் உள்ளே கேட்கலாம். இந்த முயற்சி மும்பைவாசிகளின் மனதில் தேசபக்தியை எழுப்புகிறது. சாலை மேற்பரப்பில் குறிப்பிட்ட தூரத்தில் ரம்பிள் பட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் இந்த பட்டைகளை கடந்து செல்லும் போது வாகன டயர்களுக்கும், சாலை மேற்பரப்பிற்கும் இடையிலான உராய்வு காரணமாக 'ஜெய் ஹோ' என்ற இசை ஒலி உருவாகிறது.
இதேபோல இசையை ஒலிக்கும் சாலைகள் ஹங்கேரி, ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவே முதல் பரிசோதனை முயற்சி ஆகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருமணத்திற்கு பிறகு நிதீஷ் குமாரை கடத்திச் சென்று வீட்டில் அடைத்து வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் வடமாநிலங்களில் ஆண்,பெண் விகிதச்சாரம் வெகுவாக மாறுபட்டு காணப்படுகிறது. இந்தியாவின் சில இடங்களில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஆண்கள் திண்டாடி வருக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க பீகார் மாநிலத்தில் அரசு வேலை மற்றும் உயர் கல்வி படித்த மாப்பிள்ளைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நல்ல மாப்பிள்ளை கிடைக்காத விரக்தியில் இருக்கும் சிலர் ஆண்களை கடத்தி கட்டாய திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற ஒரு திருமணம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், சமஷ்தி பூர் மாவட்டம், பகார் கிராமத்தை சேர்ந்தவர் நிதீஷ் குமார். பட்டதாரியான இவர் போலீஸ் வேலைக்கு தயாராகி வந்தார். பக்கத்து கிராமமான சக்கரஜா அலி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் ராய்.
இவரது குடும்பத்தினர் போலீஸ் வேலைக்கு தயாராகி வரும் நிதிஷ் குமாரை தங்களது மருமகனாக்க விரும்பினார்கள். நிதீஷ் குமாரின் நடவடிக்கைகளை சங்கர் ராய் குடும்பத்தினர் கண்காணித்து வந்தனர்.
கடந்த 7-ந்தேதி நிதிஷ்குமார் நூலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சங்கர் ராய் குடும்பத்தினர் காரை எடுத்து வந்து நிதிஷ்குமாரை வலுக்கட்டாயமாக காரில் தூக்கி போட்டு கடத்தி சென்றனர்.
நிதீஷ்குமார் கத்தி கூச்சலிட்டதால் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் நிதிஷ்குமாரின் வாயில் வலுக்கட்டாயமாக போதை மருந்தை ஊற்றினர். சிறிது நேரத்தில் நிதிஷ் குமார் மயக்கமடைந்தார்.
சங்கர் ராய் குடும்பத்தினர் மோர்வாலில் உள்ள கோவிலுக்கு அவரை கொண்டு சென்றனர். தங்களது மகள் லட்சுமி குமாரிக்கு மணப்பெண் அலங்காரம் செய்தனர். அதேபோல் நிதீஷ் குமாருக்கும் புது உடைகளை அணிவித்து அலங்கரித்தனர்.
பின்னர் வலுக்கட்டாயமாக நிதீஷ் குமாரை லட்சுமி குமாரியின் கழுத்தில் தாலி கட்ட வைத்தனர். அங்கிருந்த ஒருவர் திருமண நிகழ்ச்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
திருமணத்திற்கு பிறகு நிதீஷ் குமாரை கடத்திச் சென்று தங்களது வீட்டில் அடைத்து வைத்தனர். நூலகத்திற்குச் சென்ற மகன் திரும்பி வராததால் இதுகுறித்து அவரின் பெற்றோர் சமஷ்தி பூர் போலீசில் மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நிதிஷ்குமாரின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்தனர். போலீசார் சங்கர் ராய் வீட்டிற்கு சென்று வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த நிதீஷ் குமாரை மீட்டனர்.
தன்னை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து வைத்த சங்கர் ராய் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர் ராய் குடும்பத்தினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகாரில் அரசு வேலை மற்றும் உயர் கல்வி முடித்த வாலிபர்களை குறி வைத்து கட்டாய திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 2009-ம் ஆண்டு முதல் இதுவரை 1224 ஆண்களை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்துள்ளனர்.
பெண்களின் பெற்றோர் வாலிபர்களை கடத்திச் சென்று ஆயுதங்களை காட்டி மிரட்டி அவர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
பீகார் மாநிலத்தில் திருமணமாகாத ஆண்களுக்கு இது போன்ற திருமணங்கள் பெரும் சோதனையாக மாறியுள்ளது.
- ஆன்லைன் டாக்சிகள் மற்றும் தனியார் வாகனங்களை மட்டுமே சாலைகளில் காண முடிந்தது.
- போராட்டம் காரணமாக இன்று நடக்க இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.
தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது.
அதன்படி தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று நடந்தது. கேரள மாநிலத்தில் தொழிற்சங்கங்களின் 24 மணி நேர வேலை நிறுத்தம் நள்ளிரவில் தொடங்கியது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி, விவசாய தொழிலாளர் அமைப்புகள், சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் இடதுசாரி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் அரசு பஸ்கள் ஓடவில்லை. அது மட்டுமின்றி தனியார் பஸ்களும் இயங்கவில்லை.
ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் ஆட்டோ, வாடகை கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை. மேலும் பெரும்பாலான கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் மாநிலம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு கடுமையாக பாதிக்கப்பட்டது.
கொச்சியை பொருத்த வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பல இடங்களில் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஒருசில ஓட்டல்கள் மட்டும் திறந்திருந்தன. ஆன்லைன் டாக்சிகள் மற்றும் தனியார் வாகனங்களை மட்டுமே சாலைகளில் காண முடிந்தது.
திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையத்தில் இருந்தும் எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை. அங்கு ஏராளமான அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வேலைநிறுத்த போராட்டம் தொடங்குவதற்கு முன்பு புறப்பட்ட சில பஸ்கள் மட்டும் இன்று அதிகாலை பஸ் நிலையத்திற்கு வந்தன. அதன்பிறகு அந்த பஸ்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன.
திருவனந்தபுரம், கொச்சியை போன்று கோழிக்கோடு உள்ளிட்ட மாநிலத்தின் பல இடங்களிலும் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. மருத்துவ சிகிச்சைக்காக வெளி யூர்களில் இருந்து ரெயில்களில் திருவனந்தபுரத்திற்கு வந்த நோயாளிகள் பலர், மருத்துவமனைகளுக்கு செல்ல வாகனம் கிடைக்கா மல் தவித்தனர்.
ரெயில் நிலையத்தின் முன் தவித்தபடி நின்ற பல நோயாளிகளை, மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்சு வாகனத்தை போலீசார் ஏற்பாடு செய்து கொடுத்தனர். வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இன்று நடக்க இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் பஸ் நிலையங்களில் தவித்த படி நின்றனர்.
- 2 லட்சம் ரூபாய் கொண்டு வந்தால், அதனைச் சடங்குகள் மூலம் 3 லட்சம் ரூபாயாக மாற்றித் தருவதாக நம்பவைத்துளார்.
- இதுவரை சுமார் 6 முதல் 7 பேரை அவர் இதே பாணியில் கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
டெல்லியின் பீராகர்கி மேம்பாலம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை நின்றுகொண்டிருந்த காரில் இருந்து 3 சடலங்கள் மீட்கப்பட்டன.
விசாரணையில் அவர்கள் அனைவரும் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட ரண்தீர் (76), சிவ நரேஷ் (42) மற்றும் லட்சுமி (40) ஆகிய மூவரை தன்வர்ஷா - அதாவது பண மழை பொழிய வைக்கும் சடங்கு செய்வதாக கம்ருதீன் பாபா என்ற சாமியார் நம்பவைத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத்தைச் சேர்ந்த 72 வயதான கம்ருதீன் பாபா தாந்த்ரீக மையம்நடத்தி வந்துள்ளார்.
2 லட்சம் ரூபாய் கொண்டு வந்தால், அதனைச் சடங்குகள் மூலம் 3 லட்சம் ரூபாயாக மாற்றித் தருவதாகக் கூறி மூவரையும் கம்ருதீன் நம்ப வைத்துள்ளார்.
அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, பணத்தைத் திருடுவதற்காக விஷம் கலந்த லட்டுகளை அவர்களுக்குக் கொடுத்துள்ளார். மேலும் அவர்களுக்கு மது மற்றும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சம்பவத்தன்று காருக்குள் நான்காவதாக ஒரு நபர் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அது கம்ருதீன் என்பது உறுதி செய்யப்பட்டது.
முதலில் போலீசாரை திசைதிருப்ப முயன்ற அவர், பின்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்ருதீன் இதற்கு முன்பு ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இது போன்ற குற்றங்களில் அவர் ஈடுபட்டுள்ளார். இதுவரை சுமார் 6 முதல் 7 பேரை அவர் இதே பாணியில் கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.






