என் மலர்
தேர்தல் செய்திகள்
வேலூர்:
வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. ஆனால் இன்று நடக்க இருந்த வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் மட்டும் ஓட்டுப்போட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இது அவமானம்தான். மக்கள் ஓட்டுப்போடாமல் போனது துரதிஷ்டவசமானது.
தேர்தல் நடத்துவது குறித்து எங்கள் வக்கீல் குழுவினருடன் ஆலோசனை நடத்தி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. தேர்தல் கமிஷனுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள். வரும் மே மாதம் 19-ந் தேதி தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலுடன் நிறுத்தப்பட்ட இந்த பாராளுமன்ற தொகுதி தேர்தலையும் நடத்த வேண்டும்.
ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து அங்கேயும் இதுபோன்ற தீர்ப்பு வந்தால் தேவையில்லாமல் வருமான வரித்துறையினருடன் உரசல் ஏற்படும். வருமான வரித்துறை இந்த வழக்கை துரிதமாக முடிக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் விரைவில் நடக்கும். தி.மு.க. வேட்பாளர் செய்த தவறால் இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக முடிவு எடுக்ககூடியது. அவர்களின் முடிவுக்கு பிரதமர் மோடியை குறை கூறுவது தவறு. இந்த தேர்தலை ரத்து செய்தது ஒரு வகையில் தி.மு.க.வுக்கு சாதகமானதுதான்.
பெரிய தோல்வியில் இருந்து அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். எனவே தாமதம் செய்யாமல் தேர்தல் நடத்த வேண்டும். இல்லையென்றால் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று காலை ஆரணி நாடாளுமன்ற தொகுதி ஆரணி கொசப்பாளையத்தில் ஏ.சி.சண்முகம் ஓட்டு போட்டார். அப்போது நிருபர்களிடம் பேட்டி அளித்த அவர் பேச முடியாமல் கண்கலங்கினார். பின்னர் நிறுத்தபட்ட வேலூர் நாடாளுமன்ற தேர்தலை 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் மே 19-ந் தேதி நடத்த வேண்டும் என்றார். #acshanmugam #admk #parliamentelection
திண்டுக்கல்:
திண்டுக்கல் கோவிந்தாபுரம் வாசவி மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்த பிறகு நிருபர்களிடம் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:-
வருமானவரித் துறை மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டும் நடவடிக்கையில் மத்திய- மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஜனநாயகப் படுகொலை நடந்தேறியுள்ளது. இது தவறான முன்னுதாரணம். சோதனை என்ற பெயரில் வருமானவரித்துறையினர் எதிர்கட்சி வேட்பாளர்கள் இடங்களில் சோதனை செய்தார்கள். இது மிக மோசமான நிகழ்வு. எதிர்காலத்தில் இது தவிர்க்கப்பட வேண்டும்.
தேனி மாவட்டத்தில் 150 கோடி ரூபாய் வரை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் செயல்படவேண்டிய செக்போஸ்டுகள் அனைத்தும் ஓ.பி.எஸ். குரூப்புக்காக திறந்து விடப்பட்டுள்ளன. அங்குள்ள காவல் துறையும் வருமான வரித்துறையும் முறையாக செயல்படவில்லை.
ஆளும் தரப்பினரின் இந்த நடவடிக்கையை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தி.மு.க. கூட்டணிக்கு அதிக அளவில் வாக்களிக்கிறார்கள். இந்த முறை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். ராகுல்காந்தி பிரதமராகவும் ஸ்டாலின் முதல்வராகவும் பதவி ஏற்பார்கள் இது நிச்சயம்.
இவ்வாறு அவர் கூறினார். #iperiyasamy #tnelection2019
கரூர்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் வடிவேல்நகர் அரசு உயர் நிலைபள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 130-வது வாக்குச்சாவடியில் எனது வாக்கை பதிவு செய்துள்ளேன். காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தலாக இருக்கிறது. எங்கள் வேட்பாளர் தம்பிதுரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று உறுதியாகியுள்ளது.
கரூர் பாராளுமன்ற தொகுதி பதற்றமான தொகுதி கிடையாது. அமைதியான தொகுதிதான். தமிழகம்-புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
பாராளுமன்ற தேர்தல் பொது விடுமுறையையடுத்து சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்கள் நேற்று ஒரே நாளில் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பயணிகளுக்கு சற்று சிரமம் ஏற்பட்டது. தீபாவளி, பொங்கல் பண்டிகை நேரங்களில் 3, 4 நாட்களுக்கு முன்னதாகவே புறப்பட்டு செல்வார்கள். ஆனால் நேற்று பணி நாள் என்பதால் தொழிலாளர்கள் பணியை முடித்து விட்டு ஒரே நேரத்தில் புறப்பட்டனர். இதனால் சற்று பாதிப்பு ஏற்பட்டது. இது தவிர்க்க முடியாதது. சொந்த ஊருக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் திரும்புவதற்கு சிரமம் இருக்காது. அதற்கேற்றாற் போல் . பயணிகளின் கூட்டத்தை பொறுத்து பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #ministermrvijayabaskar #admk #TNElections2019
கரூர்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, கரூர் அருகே உள்ள புதுப்பாளை யம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசியுடன் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு மக்கள் தன்னெழுச்சியோடு வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். அவர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெறுவார். இதே நிலைதான் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளிலும் காணப்படுகிறது.
இந்த தேர்தலோடு மத்தியில் ஆளும் மோடியும், தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியும் வீட்டுக்கு செல்வது உறுதி. ராகுல்காந்தி பிரதமர் ஆவார். 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தற்போது அறிவித்துள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இதன் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆவார்.
கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அன்பழகன் நடுநிலையோடு செயல்பட வேண்டும். தேர்தல் நேரத்தில் பிரசாரம் தொடர்பான எங்கள் மனுவை இரவு நேரமாக இருந்தாலும் அவர் வாங்கியிருக்க வேண்டும். ஏதோ முதியோர் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தது போல சாதாரணமாக கையாண்டு இருக்கிறார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம், கலெக்டர் பேசும்போது, தேர்தலை நிறுத்த பரிந்துரைப்பேன் என்று கூறியிருக்கிறார். இது தம்பிதுரை, ஆளுங்கட்சியினரின் குரலாக இருக்கிறது. கலெக்டர் சொன்னது போல் 100 பேர் அவரது வீட்டிற்கு செல்ல வில்லை. வேட்பாளரால் அங்கீகாரம் செய்யப்பட்ட முகவர் செந்தில் உள்பட 10 பேர்தான் சென்றிருக்கிறார்கள். 100பேர் வந்திருப்பதாக சொல்லும் கலெக்டர், அவரது வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை வெளியிட வேண்டும். அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார். #senthilbalaji #admk #TNElections2019 #mkstalin
கோவை:
கோவை சுகுணாபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஓட்டுப் போட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒவ்வொருவரும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செய்த ஜெயலலிதாவின் அரசுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 39 தொகுதியிலும் வெற்றி பெறும். வாக்குச்சீட்டு முறையை விட புதிதாக தொழில் நுட்ப ரீதியில் வந்த இந்த வாக்கு எந்திரம் நன்றாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #ministerspvelumani #TNElections2019 #admk
வில்லியனூர்:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் இன்று வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட மணவெளியில் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார்.
பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தேர்தல் அமைதியான முறையில், அதே வேளையில் விறுவிறுப்பாகவும் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. அதற்கு காரணம் மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
மோடியின் எதிர்ப்பு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. அதேபோல் புதுவையிலும் மோடியை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
இந்தியா முழுவதும் ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என்ற எழுச்சி அலை வீசுகிறது. அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என்று தெரிந்து விட்டது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அந்த தொகுதி மக்கள் ஆளுங்கட்சி வேட்பாளரை எம்.எல்.ஏ.வாக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #rahulgandhi #pmmodi #TNElections2019
திண்டுக்கல்:
தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து 39 பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் இன்று நடந்தது. காலை முதலே ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை.
இன்று புனித வியாழக்கிழமையாகும். இன்றைய தினம் கிறிஸ்தவர்கள் புனித வாரமாக கடைபிடித்து வருகிறார்கள். இதனால் ஏராளமானோர் நோன்பு இருந்து வருகின்றனர்.
கடும் வெயிலும் கொளுத்தி வருவதாலும், இந்த தேர்தல் தேதியை மாற்றவேண்டும் என்று வலியுறுத்தி வந்ததாலும் அரசு இதற்கு செவிமடிக்கவில்லை என்ற காரணத்தினாலும் வாக்கினை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.
தேர்தல் முடிந்த கையோடு நாளை(19-ந்தேதி) பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது. பெரும் பாலான வாக்குச்சாவடிகள் கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
நாளை புனித வெள்ளியாகும். அன்றைய தினம் கத்தோலிக்க திருச்சபையின் கடன் திருநாளாகும். எனவே இந்த சமயத்திலும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாவதால் கிறிஸ்தவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து கிறிஸ்தவர்கள் கூறுகையில்,
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு சிறுபான்மையினரை நசுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. எனவே இந்நிலையை அவர்கள் மாற்றவேண்டும் என்றனர். #HolyThursday #TNElections2019






