என் மலர்
தேர்தல் செய்திகள்
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 19-ந்தேதி நடைபெறுவதால் அரசியல் கட்சித் தலைவவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
தேர்தல் பிரச்சனைகளை சமாளிக்கவும், தேர்தல் அதிகாரிகளை சந்தித்து முறையிடுவதற்கும் தி.மு.க. வில் ஏராளமான வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் தொகுதிக்கு 50 வழக்கறிஞர்கள் வீதம் மொத்தம் 200 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுக் கட்சியினரால் தொகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகளை போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பது, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பது என வழக்கறிஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதற்காக தலைமைக் கழகம் சார்பில் ஒவ்வொரு தொகுதியிலும் வழக்கறிஞர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
வீடு வீடாக “பூத் சிலிப்பை” தேர்தல் ஊழியர்கள்தான் வினியோகம் செய்ய வேண்டும். அ.தி.மு.க.வினரால் வழங்கப்பட்டால் அதை தடுத்து நிறுத்த வேண்டும். தேர்தல் அதிகாரிகள் கவனத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
தற்போது 4 தொகுதியிலும் வழக்கறிஞர் பிரிவு அணியினர் முகாமிட்டு அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிர்வாகிகளுடன் சென்று பிரச்சனைகளை கேட்டு வருகின்றனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 4 தொகுதியிலும் பிரசாரம் செய்துள்ள நிலையில் வருகிற 13, 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் 2-ம் கட்டமாக மீண்டும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான சுற்றுப்பயண ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது. #TNByPolls #DMK #MKStalin
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடத்தப்படும் தேர்தலில் இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்துள்ளது.
6-வது கட்ட தேர்தல் வருகிற 12-ந்தேதியும், 7-வது கட்ட தேர்தல் 19-ந்தேதியும் நடைபெற உள்ளது.
23-ந்தேதி 542 தொகுதிகளின் வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்பட உள்ளது. ஆட்சியைப் பிடிக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. இந்த மேஜிக் நம்பரை இந்த தடவை பாரதிய ஜனதா, காங்கிரஸ் இரு தேசியக் கட்சிகளும் எட்ட வாய்ப்பு இல்லை என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். இதனால் மத்தியில் யார் தலைமையில் ஆட்சி அமையும் என்ற ஆவல் கலந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்தியில் பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் ஒருங்கிணைந்த 3-வது அணி ஆட்சியை ஏற்படுத்த முயற்சி நடந்து வருகிறது. தெலுங்கானா மாநில முதல்- மந்திரி சந்திரசேகரராவ் கிங்-மேக்கராக மாறி இதற்கான நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவும் மாநில கட்சிகளின் ஆட்சியை உருவாக்க இப்போதே களத்தில் இறங்கியுள்ளார். 23-ந்தேதி தேர்தல் முடிவுகள் வெளி வருவதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளை ஒன்று திரட்டி ஒரு வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற இன்னும் 2 கட்ட ஓட்டுப்பதிவே உள்ளது. மே 19-ந்தேதியுடன் தேர்தல் முடிந்து விடும். எதிர்க்கட்சிகள் மிகவும் வலுவாக உள்ளன.
19-ந்தேதி தேர்தல் முடிந்ததும் மாநில கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளோம். தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23-ந் தேதிக்கு முன்பு டெல்லியில் இந்த கூட்டம் நடைபெறும். அனேகமாக 21-ந்தேதி இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் என்னென்ன செய்யலாம் என்பது பற்றி ஆய்வு நடத்தப்படும். மாநில கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று திரண்டு பேசி சுமூக முடிவுக்கு வருவோம். தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட்ட மாநில கட்சிகள் கூட இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று ஒருங்கிணைய வாய்ப்புள்ளது.
மாநில கட்சிகள் அனைத்தும் சுமூகமாக பேசி புதிய பிரதமரை தேர்ந்து எடுப்போம். 23-ந்தேதிக்கு பிறகு மோடிக்கு பதில் மாநில கட்சியைச் சேர்ந்த ஒருவர் தான் பிரதமர் பதவியை ஏற்பார். பிரதமரை தேர்வு செய்யும் விஷயத்திலும் புதிய ஆட்சி அமைவதிலும் மூன்று விதமான நிலைப்பாடுகள் வரவே வாய்ப்புள்ளது.
ஒன்று எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்கும். அல்லது எங்கள் கூட்டணியை காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரிக்கும். மூன்றாவது காங்கிரஸ் எங்களுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்கலாம்.
இந்த மூன்று விதமான நிலைப்பாட்டை தவிர 4-வது விதமான முடிவு வர வாய்ப்பு இல்லை. சந்திரசேகரராவ் காங்கிரஸ் அல்லாத 3-வது அணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் துணை இல்லாமல் புதிய கூட்டணியை உருவாக்க இயலாது.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார். #Oppositionconclave #Oppositionconclavepostponed
மும்பை:
பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மை பலம் பெறும் என்று அமித் ஷாவும், அருண்ஜெட்லியும் கூறி வருகிறார்கள்.
பிரதமர் மோடியோ, இந்த தடவை பாரதிய ஜனதா கட்சி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம் மாதவ் சமீபத்தில் பேட்டி அளித்தபோது, “பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தடவை தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்க வாய்ப்பு இல்லை” என்று கூறி இருந்தார். அவரது இந்த பேச்சு பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிலையில் பா.ஜனதா கூட்டணியில் முக்கிய இடம்பிடித்துள்ள சிவசேனா கட்சியும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான கருத்துக்களை கூற தொடங்கியுள்ளது. சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத்தும் பா.ஜனதாவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

2014-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த தடவை அதில் 40 இடங்கள் வரை குறையலாம். எனவே பாரதிய ஜனதா கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது.
இத்தகைய நிலையில் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் தயவும் ஆதரவும் நிச்சயம் தேவைப்படும். இந்த விஷயத்தில் பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறிய கருத்துக்கள் முழுக்க, முழுக்க சரியானது. அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
பாரதிய ஜனதா கட்சி தனி மெஜாரிட்டி பெறாவிட்டாலும் கூட்டணி கட்சிகள் பலத்துடன் ஆட்சி அமைக்கும். அந்த வகையில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால் சிவசேனா கட்சி மிகவும் மகிழ்ச்சி அடையும்.
ராம் மாதவ் கருத்துப்படி பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் ஆட்சி செய்யும். அந்த கூட்டணியில் சிவசேனா முக்கிய அங்கம் வகிக்கும்.
இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார். #shivsena #BJP
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.
இதுவரை 200-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று அவர் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி உள்ளார்.
தலைநகர் டெல்லியில் இதுவரை பிரதமர் மோடி பிரசாரம் செய்யவில்லை. பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா மட்டும் டெல்லியில் 2 கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.
டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளுக்கும் வருகிற 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் செய்ய இன்றும், நாளையும் 2 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) மாலை டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு டெல்லியில் போட்டியிடும் 7 பா.ஜனதா வேட்பாளர்களுக்கும் ஒரே இடத்தில் ஆதரவு திரட்ட உள்ளார்.
பிரதமர் மோடி டெல்லியில் பங்கேற்று பேசும் ஒரே பொதுக்கூட்டம் இது மட்டுமே. எனவே இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தை மிக, மிக பிரமாண்டமாக நடத்த டெல்லி மாநில பா.ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
டெல்லியில் மொத்தம் 272 மண்டலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் 20 பஸ்களில் தலா ஆயிரம் தொண்டர்கள், பொதுமக்களை அழைத்து வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இன்று மாலை மோடி பங்கேற்று பேசும் கூட்டத்தில் குறைந்தபட்சம் 3 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி இன்று மதியம் அரியானாவில் சிக்கா, குருஷேத்திரா நகரங்களில் நடக்கும் 2 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன்பிறகே டெல்லி ராம்லீலா மைதான கூட்டத்தில் பேச உள்ளார்.
மோடி டெல்லியில் மாலை 5 மணிக்கு பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் டெல்லி வர இரவு 7 மணி ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தை வாரணாசியில் மோடி பங்கேற்ற பிரமாண்ட கூட்டத்தையும் விட மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #Loksabhaelections2019 #BJP #NarendraModi
கரூர்:
அரவக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாறையூர், அரவக்குறிச்சி, ஈசநத்தம் உள்ளிட்ட இடங்களில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த காலங்களில் யாருடைய ஆட்சி சிறப்பாக இருந்தது? மக்களுக்கான தொலைநோக்கு திட்டங்களை சீரியமுறையில் செயல்படுத்தியது யார்? என்று சிந்தித்து பார்த்தால் அது அ.தி.மு.க. அரசாக தான் இருக்க முடியும். ஒரு மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் தான் பிரதானம் ஆகும்.
அந்த வகையில் 20 கிலோ இலவச அரிசி வழங்கி ஏழை, எளிய மக்கள் உள்ளிட்டோருக்கு உணவு பாதுகாப்பினை உறுதி செய்தார் ஜெயலலிதா. மேலும் அவரது வழியில் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டி தருவது, பெண்களுக்கு தாலிக்கு தங்கம், மிக்ஸி, கிரைண்டர் மற்றும் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி வேலை வாய்ப்புகளை பெருக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்ற மாநிலங்களைவிட முன்னோடியாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தி.மு.க.வினர் தற்போது இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது அவர்களுடைய ஆட்சி நடந்த 2006-2011 காலக்கட்டத்தில் செய்த சாதனைகளை சொல்ல முடியாமல் இருக்கின்றனர். அப்போது ஏற்பட்ட மின் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் அடைந்த அவதியை மறக்க முடியுமா? தூக்கமின்றி பலரும் தவித்தனர்.

2011-ல் ஜெயலலிதாவின் அரசு அமைந்ததும் தான் மின் தட்டுப்பாடு போக்கப்பட்டு, தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியது. தி.மு.க. ஆட்சியில் பல்வேறு நில அபகரிப்பு புகார்கள் எழுந்தன. அவை அனைத்தும் அ.தி.மு.க.ஆட்சியில்தான் விசாரிக்கப்பட்டு உரியவருக்கும் நிலம் மீட்டு கொடுக்கப்பட்டது. அ.தி.மு.க.வில் யாராவது கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என சொல்ல முடியுமா என்றால் முடியாது.
காவிரி, முல்லைபெரியாறு உள்ளிட்ட ஜீவாதார பிரச்சினைகளையும் தி.மு.க. காப்பாற்ற தவறியது. கச்சதீவினை தாரை வார்த்து கொடுத்தனர். கர்நாடாகாவில் 4 அணை கட்ட கருணாநிதி கையெழுத்திட்டு வந்தார். ஆனால் அதற்குமாறாக சட்டப் போராட்டம் நடத்தி காவிரியில் உரிையை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா. தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என மு.க.ஸ்டாலின் சொல்கிறார்.
எப்படியாது ஆட்சியை பிடித்து விடலாம் என ஸ்டாலின் கங்கணம் கட்டி கொண்டு அலைகிறார். 1,000 ஸ்டாலின் வந்தாலும், 1,000 தினகரன் வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியை ஆட்டவோ அசைக்கவோ முடியாது. அ.தி.மு.க. ஆட்சியில் சாதி, மதக்கலவரங்கள் இல்லை. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது. ஓ.பி.எஸ்.சும்- இ.பி.எஸ்.சும் தமிழகத்தை தீ வைத்து கொளுத்திவிடுவார்கள் என ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் என்ன தீ பந்தத்தோடு அலைந்து கொண்டிருக்கோமா?
அரவக்குறிச்சிக்கு இடைத்தேர்தல் தேவைதானா?. இங்கு நிற்கும் தி.மு.க. வேட்பாளர் (செந்தில்பாலாஜி) எந்த கட்சியில் நின்று ஜெயித்தார், பின்னர் எந்த கட்சிக்கு தாவினார் என்பது எல்லாருக்கும் தெரியும். கடந்த 2006-ல் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கி ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு, வாய்ப்புகளை பெருக்கி கொண்டார். அதையெல்லாமல் நினைத்து பார்க்க வேண்டாமா? துரோகத்திற்கும், நயவஞ்சகத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது.
2011-ல் கூட அவரால் தான், அரவக்குறிச்சியில் வி.வி.செந்தில்நாதன் வெற்றி வாய்ப்பினை இழந்தார். தற்போது ஜெயலலிதான் ஆன்மாவால் செந்தில் பாலாஜியை வீழ்த்த, மீண்டும் செந்தில்நாதனே களமாட வந்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #Panneerselvam
மேற்கு திரிபுரா மேற்கு பாராளுமன்றத் தொகுதியில் கடந்த மாதம் 11ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 81 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவின்போது பல்வேறு வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், கள்ள ஓட்டு போட்டதாகவும், பாஜகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாகவும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த 168 வாக்குச்சாவடிகளிலும் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் வரும் 12-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #BoothCapturing #TripuraWest

பாராளுமன்றத் தேர்தலில், 5ம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான சசி தரூர் இன்று பிடிஐ-க்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட முடிவு செய்தது, மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமைந்தால் தென் மாநிலங்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படாது என்பதை உணர்த்துகிறது.
2014 தேர்தலில் பாஜக 282 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த முறை அது நடக்காது. பாஜக அரசின் மோசமான செயல்பாடுகள் காரணமாக அவர்களின் சீட் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது. இதனால், ஆட்சியமைக்க பிராந்திய கட்சிகளிடம் ஆதரவு கேட்கும் நிலை உருவாகும். ஆனால், அவர்களின் கூட்டணியில் உள்ள பெரும்பாலான பிராந்திய கட்சிகள் கூட அவர்களுக்கு ஆதரவு அளிக்க விரும்ப மாட்டார்கள்.
பாஜக எதிர்ப்பு அலை, காங்கிரஸ் கட்சி செய்த சாதனைகள் மற்றும் பிராந்திய கட்சிகளுடன் இணைந்து பணியாற்றிய விதம் ஆகியவற்றை பார்க்கும்போது, மத்தியில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்பது தெளிவாகிறது. அப்படி கூட்டணி ஆட்சி அமைந்தால் அது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாக இருக்கும்.
காங்கிரஸ் தனிமெஜாரிட்டி பெற்றால் ராகுல் காந்தி பிரதமராக தேர்வு செய்யப்படுவார். தனி மெஜாரிட்டி இல்லாமல் கூட்டணி அரசு அமைந்தால், கூட்டணி தலைவர்களுடன் கலந்து ஆலோசனை செய்து பிரதமர் தேர்வு செய்யப்படுவார்.
இவ்வாறு சசி தரூர் கூறினார். #LokSabhaElections2019 #ShashiTharoor
மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18,23,29 மற்றும் மே 6 ஆகிய தேதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 12,16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து காங்கிரஸ் , பாஜக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று மேற்கு வங்காளத்தின் கத்தால் பகுதியில் நடந்த பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

மத்தியில் ஆளும் பாஜக, நிச்சயம் மேற்கு வங்காளத்தில் 23 தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 4 லட்சத்து 24 ஆயிரத்து 800 கோடி மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது.
'ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சரிப்பவர்களை மம்தா பானர்ஜி சிறையில் தள்ளுகிறார். ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சரித்தாலே சிறையில் அடைக்கும் நிலைமைதான் மேற்கு வங்காளத்தில் இருக்கிறது. ராமரின் பெயரை இந்தியாவில் சொல்லாமல் பாகிஸ்தானிலா கூற முடியும்?
இவ்வாறு அவர் பேசினார். #Amitsha #BJP
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் முடிந்துவிட்டதால் தமிழக பா.ஜனதா தலைவர்கள் வட மாநிலங்களில் பா.ஜனதா தலைவர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் மத்தியில் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லியில் மத்திய மந்திரி டாக்டர் ஹர்ஷவர்தனுக்கு ஆதரவாக டிரைநகர், ஷக்குர்பஸ்டி, வாசிர்புர் சட்டமன்ற தொகுதிகளில் தமிழர்கள் பெரும்பாலானோர் வாழும் இடங்களில் சென்று பிரசாரம் செய்தார். அவருடன் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
செகாபுரம் மாரியம்மன் கோவில் பகுதிகளில் பிரசாரத்துக்கு சென்ற தமிழக நிர்வாகிகளை பார்த்ததும் அங்குள்ள தமிழர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அவர்களிடம், மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைய தாமரைக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு பொதுமக்களும் உறுதியளித்தனர்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய தென் மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டதற்கு டாக்டர் ஹர்ஷவர்தன் நன்றி தெரிவித்தார். அதேபோல் புதுடெல்லியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் மீனாட்சிலேகிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்தார்கள்.
நாளை முதல் 3 நாட்கள் வாரணாசி தொகுதியில் தமிழர்கள் பகுதியில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக டாக்டர் தமிழிசை பிரசாரம் செய்கிறார்.
பின்னர் சென்னை திரும்பி வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். #Loksabhaelections2019 #BJP #Tamilisaisoundararajan
திருப்பரங்குன்றம்:
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்குடி, அவனியாபுரம் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்து பேசியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்தவில்லை என பேசி வருகிறார். அம்மா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணி தொடங்கிய நிலையில் தி.மு.க.வினர் உயர்நீதிமன்றத்திலே சில காரணங்களை கூறி வழக்குத் தொடுத்தார்கள்.
அதனடிப்படையிலே தான் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவினை நிறைவேற்றும் வகையில் 3 மாத காலத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் சுமார் 35,000-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டங்களுக்கு பின்புலமாக இருந்த செயல்பட்டவர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

இருப்பினும் அனைத்து போராட்டங்களையும் சுமுகமான முறையிலே தீர்த்துவைத்து வெற்றிக் கண்ட அரசு அம்மாவின் அரசு.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்என கூறுகிறார். முதலமைச்சர் பதவி என்பது மக்களால் அளிக்கப்படுகின்ற பதவி.
அம்மா முதலமைச்சராக இருந்த போது மரணம் அடைந்தார். அதன் பிறகு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று நான் முதல்- அமைச்சராக இருந்து வருகிறேன்.
நடைபெறுகின்ற 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். இந்த ஆட்சி தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் வருகின்ற 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்தார். அவர் முழுமையாக செயல் படாத நிலையில் கூட தனது தலைவர் பதவியை யாருக்கும் வழங்கவில்லை. மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தான் இருந்தார். கருணாநிதியின் மறைவிற்கு பிறகுதான் தி.மு.க.வின் தலைவரானார். பெற்ற தந்தையே இவரை நம்பாத பொழுது தமிழ்நாட்டு மக்கள் எவ்வாறு இவர்மீது நம்பிக்கை வைப்பார்கள்.
ஒரு விவசாயி நாட்டை ஆளாலாமா என்று ஸ்டாலின் கேட்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை இனிமேல் ஒரு விவசாயிதான் நாட்டை ஆள முடியும் என்பதை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க.என்றாலே அராஜகம் தான். அழகு நிலையத்திற்கு சென்று பெண்களின் மீது தாக்குதல் நடத்துவது, பிரியாணி கடைக்குச் சென்று பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் தகராறு செய்வது, செல்போன் கடையில் செல்போன் வாங்கிவிட்டு பணம் தராமல் தகராறு செய்வது போன்ற பல்வேறு அராஜகங்களில் ஈடுபட்டு வருவது தி.மு.க.வினர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது வீதிவீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்திக்கின்ற அளவுக்கு அவர் சுதந்திரமாக நடமாட முடிந்தது என்றால் இது ஒன்றே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்பதற்கு சாட்சியாகும்.
இவ்வாறு அவர் பேசினார். #EdappadiPalaniswami #ADMK
தேனி மாவட்டம் க.விலக்கு பகுதியில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு ஆட்சி மாற்றம் நடைபெறும். 22 சட்ட பேரவை இடைத்தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும்.

இந்த தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க.வோடு சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்போம். தி.மு.க.வுடன் சேர்ந்து தற்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்வோம். எனவே இதற்கு தி.மு.க. எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். ஆனால் அதே வேளையில் தி.மு.க. ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு தர மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார். #AMMK #ThangaTamilselvan #ADMK #DMK






