search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக ஆட்சியில் மக்கள் மின்வெட்டால் அவதிப்பட்டனர் - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
    X

    திமுக ஆட்சியில் மக்கள் மின்வெட்டால் அவதிப்பட்டனர் - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

    திமுக ஆட்சியில் மக்கள் மின்வெட்டால் அவதிப்பட்டனர் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். #Panneerselvam

    கரூர்:

    அரவக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாறையூர், அரவக்குறிச்சி, ஈசநத்தம் உள்ளிட்ட இடங்களில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த காலங்களில் யாருடைய ஆட்சி சிறப்பாக இருந்தது? மக்களுக்கான தொலைநோக்கு திட்டங்களை சீரியமுறையில் செயல்படுத்தியது யார்? என்று சிந்தித்து பார்த்தால் அது அ.தி.மு.க. அரசாக தான் இருக்க முடியும். ஒரு மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் தான் பிரதானம் ஆகும்.

    அந்த வகையில் 20 கிலோ இலவச அரிசி வழங்கி ஏழை, எளிய மக்கள் உள்ளிட்டோருக்கு உணவு பாதுகாப்பினை உறுதி செய்தார் ஜெயலலிதா. மேலும் அவரது வழியில் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டி தருவது, பெண்களுக்கு தாலிக்கு தங்கம், மிக்ஸி, கிரைண்டர் மற்றும் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி வேலை வாய்ப்புகளை பெருக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்ற மாநிலங்களைவிட முன்னோடியாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    தி.மு.க.வினர் தற்போது இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது அவர்களுடைய ஆட்சி நடந்த 2006-2011 காலக்கட்டத்தில் செய்த சாதனைகளை சொல்ல முடியாமல் இருக்கின்றனர். அப்போது ஏற்பட்ட மின் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் அடைந்த அவதியை மறக்க முடியுமா? தூக்கமின்றி பலரும் தவித்தனர்.


    2011-ல் ஜெயலலிதாவின் அரசு அமைந்ததும் தான் மின் தட்டுப்பாடு போக்கப்பட்டு, தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியது. தி.மு.க. ஆட்சியில் பல்வேறு நில அபகரிப்பு புகார்கள் எழுந்தன. அவை அனைத்தும் அ.தி.மு.க.ஆட்சியில்தான் விசாரிக்கப்பட்டு உரியவருக்கும் நிலம் மீட்டு கொடுக்கப்பட்டது. அ.தி.மு.க.வில் யாராவது கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என சொல்ல முடியுமா என்றால் முடியாது.

    காவிரி, முல்லைபெரியாறு உள்ளிட்ட ஜீவாதார பிரச்சினைகளையும் தி.மு.க. காப்பாற்ற தவறியது. கச்சதீவினை தாரை வார்த்து கொடுத்தனர். கர்நாடாகாவில் 4 அணை கட்ட கருணாநிதி கையெழுத்திட்டு வந்தார். ஆனால் அதற்குமாறாக சட்டப் போராட்டம் நடத்தி காவிரியில் உரிையை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா. தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என மு.க.ஸ்டாலின் சொல்கிறார்.

    எப்படியாது ஆட்சியை பிடித்து விடலாம் என ஸ்டாலின் கங்கணம் கட்டி கொண்டு அலைகிறார். 1,000 ஸ்டாலின் வந்தாலும், 1,000 தினகரன் வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியை ஆட்டவோ அசைக்கவோ முடியாது. அ.தி.மு.க. ஆட்சியில் சாதி, மதக்கலவரங்கள் இல்லை. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது. ஓ.பி.எஸ்.சும்- இ.பி.எஸ்.சும் தமிழகத்தை தீ வைத்து கொளுத்திவிடுவார்கள் என ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் என்ன தீ பந்தத்தோடு அலைந்து கொண்டிருக்கோமா?

    அரவக்குறிச்சிக்கு இடைத்தேர்தல் தேவைதானா?. இங்கு நிற்கும் தி.மு.க. வேட்பாளர் (செந்தில்பாலாஜி) எந்த கட்சியில் நின்று ஜெயித்தார், பின்னர் எந்த கட்சிக்கு தாவினார் என்பது எல்லாருக்கும் தெரியும். கடந்த 2006-ல் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கி ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு, வாய்ப்புகளை பெருக்கி கொண்டார். அதையெல்லாமல் நினைத்து பார்க்க வேண்டாமா? துரோகத்திற்கும், நயவஞ்சகத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது.

    2011-ல் கூட அவரால் தான், அரவக்குறிச்சியில் வி.வி.செந்தில்நாதன் வெற்றி வாய்ப்பினை இழந்தார். தற்போது ஜெயலலிதான் ஆன்மாவால் செந்தில் பாலாஜியை வீழ்த்த, மீண்டும் செந்தில்நாதனே களமாட வந்திருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Panneerselvam

    Next Story
    ×