search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் இன்று மாலை மோடி பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம்
    X

    டெல்லியில் இன்று மாலை மோடி பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம்

    டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று மாலை பாரதிய ஜனதா கட்சியின் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். #Loksabhaelections2019 #BJP #NarendraModi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.

    இதுவரை 200-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று அவர் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி உள்ளார்.

    தலைநகர் டெல்லியில் இதுவரை பிரதமர் மோடி பிரசாரம் செய்யவில்லை. பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா மட்டும் டெல்லியில் 2 கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

    டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளுக்கும் வருகிற 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் செய்ய இன்றும், நாளையும் 2 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

    இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) மாலை டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு டெல்லியில் போட்டியிடும் 7 பா.ஜனதா வேட்பாளர்களுக்கும் ஒரே இடத்தில் ஆதரவு திரட்ட உள்ளார்.

    பிரதமர் மோடி டெல்லியில் பங்கேற்று பேசும் ஒரே பொதுக்கூட்டம் இது மட்டுமே. எனவே இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தை மிக, மிக பிரமாண்டமாக நடத்த டெல்லி மாநில பா.ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    டெல்லியில் மொத்தம் 272 மண்டலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் 20 பஸ்களில் தலா ஆயிரம் தொண்டர்கள், பொதுமக்களை அழைத்து வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இன்று மாலை மோடி பங்கேற்று பேசும் கூட்டத்தில் குறைந்தபட்சம் 3 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடி இன்று மதியம் அரியானாவில் சிக்கா, குருஷேத்திரா நகரங்களில் நடக்கும் 2 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன்பிறகே டெல்லி ராம்லீலா மைதான கூட்டத்தில் பேச உள்ளார்.

    மோடி டெல்லியில் மாலை 5 மணிக்கு பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் டெல்லி வர இரவு 7 மணி ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தை வாரணாசியில் மோடி பங்கேற்ற பிரமாண்ட கூட்டத்தையும் விட மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #Loksabhaelections2019 #BJP #NarendraModi
    Next Story
    ×