என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.
    • வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி இறந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியை இந்திய தேர்தல் ஆணையம் காலியாக அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெற உள்ளது.

    இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர். அபிநயா ஆகியோர் உட்பட பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் 29 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும். இதனை தொடர்ந்து தி.மு.க.வும், பா.ம.க.வும் விக்கிரவாண்டி தொகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர். அபிநயாவிற்கு ஆதரவாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டியில், தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று மாலை மேற்கொள்ளகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.விற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தான் போட்டி என சீமான் கூறி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 13-ந்தேதி வாக்குகள் எண்ணப்படும்.
    • வேட்புமனு வாபஸ் பெற நாளைமறுதினம் கடைசி நாளாகும்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. 21-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதில் அதிமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடுகின்றன. ஸ்ரீமதி தாயார் உள்ளிட்ட பலர் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    மொத்தமாக 54 பேர் தாக்கல் செய்தனர். இன்று வேட்புமனு மீதான பரிசீலனை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது ஸ்ரீமதி தாயார் உள்பட 35 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் சார்பில் மனு தாக்கலில் குறைபாடு உள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

    ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் வேண்டுமென்றே தங்களது வேட்புமனுக்கள் நிராரிக்கப்பட்டது எனக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

    விக்கிரவாண்டியில் ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 13-ந்தேதி வாக்குகள் எண்ணப்படும். நாளை மறுநாள் வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

    கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி பள்ளியில மர்மமான முறையில் மாணவி உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பள்ளி வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பள்ளியில் இருந்த பொருட்களும் சூறையாடப்பட்டது.

    இதையடுத்து மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து அவரது தாய் செல்வி சின்னசேலம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஸ்ரீமதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சுமார் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையையும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விக்கிரவாண்டி தொகுதியில் 56 வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
    • மனுக்கள் பரிசீலனை இன்று மாலை அல்லது நாளை காலை உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதியன்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தொடங்கி 21-ந்தேதியுடன் முடிவடைந்தது.

    இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா, ஆகியோர் உட்பட 16 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    இவர்களில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி வனிதா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாற்று வேட்பாளராக ரங்கநாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவுக்கு மாற்று வேட்பாளர் கலைச்செல்வி, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் முகமது ஹனீபாவுக்கு மாற்று வேட்பாளராக முகமது இலியாஸ் ஆகிய 4 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களை தவிர சுயேச்சை வேட்பாளர்களாக சதீஷ், விஜயா, அரசன், இசக்கிமுத்து உள்பட 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் 56 வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 3 மனுக்களும், பா.ம.க. வேட்பாளர் அன்புமணி 2 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 2 மனுக்களும், தாக்கம் கட்சி வேட்பாளர் முத்தையா 2 மனுக்களும், அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த சரசு 2 மனுக்களும், தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் முகமது ஹனீபா 2 மனுக்களும், அகிம்ஷா சோசியலிஸ்ட் கட்சியை சேர்ந்த ரமேஷ் 2 மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் மொத்தம் 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மனுக்கள் பரிசீலனை இன்று மாலை அல்லது நாளை காலை உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 26-ந்தேதி (புதன்கிழமை) கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    • எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
    • இன்று காலை அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    விழுப்புரம்:

    தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளசாராயம் குடித்து 60 பேர் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து விழுப்புரத்தில் இன்று நடைபெற இருந்த அ.தி.மு.க. போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை செய்தார்.

    விக்கிரவாண்டி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது40), சுப்பிரமணி (60) ஆகியோர் ஏற்கனவே தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கண்டாச்சிபுரம் அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரவின் (21), ஜெகதீஸ்வரன் (24) ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கராபுரம் அருகே உள்ள ஆரியரில் நடந்த ஒரு விசேஷத்திற்கு கலந்து கொள்ள சென்றுள்ளனர் .

    அப்போது தேவபாண்டலத்தில் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். பின்னர்சொந்த ஊருக்கு வந்து விட்டனர். அன்றில் இருந்து வாந்தி, மயக்கத்தில் இருவரும் இருந்த நிலையில் நேற்று அதிகாலை கண்எரிச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் உடனே முண்டியம்பாக்கம் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 4 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

    தேசிய ஆதி திராவிடர் நல ஆணையர் ரவி வர்மன் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு நேற்று வருகை தந்தார். சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை செய்தார். அப்போது விழுப்புரம் ஆர்டிஓ., ஷாகுல் அமீது , கல்லுாரி டீன் ரமாதேவி, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வரும் கண்டாச்சிபுரம் அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் கூறும்போது, `நாங்கள் நண்பர்களுடன் உறவினரின் விசேஷத்திற்காக சங்கராபுரம் அருகே உள்ள அரியூர் சென்று விட்டு அங்கு தேவ மண்டலம் என்ற இடத்தில் சாராயம் வாங்கி குடித்தோம்.

    பின்னர் ஊருக்கு வந்தவுடன் அன்று இரவில் இருந்தே வாந்தி, மயக்கம், கண்ணெரிச்சல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறோம் என கூறினார்.

    • இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது.
    • வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகின்றன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகின்றன. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடி வடைந்தது.

    இத்தேர்தலில் போட்டி யிட தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா. பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

    இவர்கள் அனைவரும் தாங்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தங்களுடைய சொத்துப் பட்டியல் விவரங்களையும் தாக்கல் செய்துள்ளனர். அதில் முக்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியல் விவரம் வருமாறு:-

    தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 8 ஆயிரத்து 944-க்கும், அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.2 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 336-க்கும், மகள் ஹர்ஷதாகடர் பெயரில் ரூ.47 லட்சத்து 30 ஆயிரத்து 733-க்கும், மகன் திரி லோக்ஹரி பெயரில் ரூ.19 லட்சத்து 58 ஆயிரத்து 317-க்கும் அசையும் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் அன்னியூர் சிவா பெயரில் ரூ.90 லட்சத்து 96 ஆயிரத்துக்கும். அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.33 லட்சத்து 6ஆயிரத்து 370-க்கும் அசையா சொத்துக்கள் இருப்பதா கவும். இதுதவிர வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அன்னியூர் சிவாவுக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 92 ஆயிரத்து 19-ம், அவரது மனைவி பெயரில் ரூ.55 லட்சத்து 4 ஆயிரத்து 409-ம் கடன் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    பா.ம.க.

    பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு ரூ.II லட்சத்து 61 ஆயிரத்து 187-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.17 லட்சத்துக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாக வும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.15 லட்சத்து 84 ஆயிரத்து 100 மதிப்பில் கடன் இருப்பதாகவும், அவரது மனைவி ஜெயலட்சுமி பெயரில் ரூ.16 லட்சத்து 54 ஆயிரத்து 23-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.39 லட்சத்து 23 ஆயிரத்துக்கு அசையா சொத்துக்கள் நிறுவனங்களில் ரூ.1 லட்சம் இருப்பதாகவும், வங்கி, நிதி கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா பெயரில் ரூ.4 லட்சத்து 82 ஆயிரத்து 500-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.2 லட் சத்து 62 ஆயிரம் மதிப்பில் நகைக் கடன் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    • மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்ப வம் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்தது.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே தடுத்தாட்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதியின் மகன் சப்தகிரி (வயது 11). இவன் அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இதேபோல் வினோத்தின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள்-சூர்யா தம்பதியின் மகன் லோகேஷ் (8). அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் லோகேஷ், சப்தகிரி ஆகிய 2 பேரும் பள்ளி விடுமுறை என்பதால் நேற்று மதியம் வீட்டின் அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்று, அங்கிருந்த பம்பு செட்டில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது மேலே சென்ற உயரழுத்த மின்கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து சப்தகிரி, லோகேஷ் ஆகியோரின் மேல் விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இருவரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்ப வம் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்தது.

    • வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று மட்டும் ஒரே நாளில் 32 சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.
    • மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ம் தேதியன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகத்தில் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

    இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    இதன் மூலம் மொத்தம் விக்கிரவாண்டி தொகுதியில் 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    இவர்களில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 3 மனுக்களும், பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா, சுயேச்சை வேட்பாளர்கள் காந்தியவாதி ரமேஷ், அக்னி ஆழ்வார், நூர்முகமது, ராஜேந்திரன் ஆகியோர் தலா 2 மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் மொத்தம் 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    இந்த மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 26-ந்தேதி (புதன்கிழமை) கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று மட்டும் ஒரே நாளில் 32 சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இதில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, விதவைக்கோலத்தில் ஆறுமுகம், எம்.ஜி.ஆர். வேடத்தில் நூர்முகமது உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

    இதன் காரணமாக விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கியது.

    • வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கியது.
    • இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவு பெறுகிறது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி சட்டப் பேரவை தொகுதிக்கு, அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கியது.

    தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என 17 போ் நேற்றுவரை மனுதாக்கல் செய்தனா்.

    இதைத் தொடா்ந்து, நாம் தமிழா் கட்சியின் வேட்பாளரான பொ.அபிநயா, நேற்று (வியாழக்கிழமை) காலை விக்கிரவாண்டி வட்டாட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகரி டம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா்.

    இதில், நாம் தமிழா் கட்சியின் தலைமை நிா்வாகிகள் ஜெகதீச பாண்டியன்,அன்பு, தென்னரசு, நாதன், திரைப் பட இயக்குநா் மு.களஞ்சியம் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

    இதைத் தவிர, நாம் தமிழா் கட்சியின் மாற்று வேட்பாளரான அன்னியூா் நேதாஜி தெருவைச் சோ்ந்த நா.கலைச்செல்வி (33) உள்ளிட்ட 7 போ் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனா். இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவு பெறுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தலுக்கான பாா்வையாளா்களை நியமித்து இந்திய தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இது குறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தோ்தல் பொதுப் பாா்வையாளராக, ஐ.ஏ.எஸ். அதிகாரி அமித்சிங் பன்சல் நியமிக்கப்பட்டுள்ளாா். செலவின பாா்வையாளராக ஐ.ஆா்.எஸ். அதிகாரி மனீஷ் குமாா் மீனா, சட்டம்-ஒழுங்கு பாா்வையாளராக ஐ.பி.எஸ். அதிகாரி அஜய் குமாா் பாண்டே ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தலையொட்டி 1,324 போ் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளனா். அந்தத் தொகுதியில் 9 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

    மேலும், வாக்குப் பதிவு அன்று வாக்காளா்களுக்கு எந்த விரலில் மை வைப்பது என்பது குறித்த விளக்கம் தோ்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது.
    • இடைத்தேர்தலில் தி.மு.க. வழக்கம் போல் அதே கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்கிறது.

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்த காரணத்தால் அங்கு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா, பா.ம.க. வில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா ஆகியோர் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி 93,730 ஓட்டுகளும் பா.ம.க. கூட்டணியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 84,157 ஓட்டுகளும் வாங்கி இருந்தனர். சுமார் 9 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில்தான் தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றிருந்தார்.

    தற்போது இடைத்தேர்தலில் தி.மு.க. வழக்கம் போல் அதே கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்கிறது.

    அ.தி.மு.க., தே.மு.தி.க. போட்டியிடாததால் அக்கட்சி வாக்குகள் பா.ம.க. வேட்பாளருக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர். அதற்கு அடுத்த படியாக ஆதி திராவிடர் வாக்குகளும், முதலியார், உடையார் வாக்குகளும் உள்ளன. அதன் காரணமாக வன்னியர்களை ஒவ்வொரு கட்சியும் வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

    இந்த தொகுதியை பொறுத்தவரையில் தி.மு.க. அ.தி.மு.க. சம பலத்துடன் உள்ளன. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 72,188 ஓட்டுகளும், அ.தி.மு.க. 65,365 ஓட்டுகளும், பா.ஜனதா 32,198 ஓட்டுகளும் பெற்றுள்ளன.

    இதனால் இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளும் கட்சியான தி.மு.க. கடந்த 10 நாட்களுக்கு முன்னதாகவே தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துவிட்டது. அதில் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், அமைச்சர் பொன்முடி ஆகியோர் தலைமையில் 9 அமைச்சர்களை தேர்தல் பணிக்குழுவில் அறிவித்து அதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில்மகேஷ் பொய்யாமொழி, டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் விக்கிரவாண்டியில் கடந்த வாரம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளனர். அதில் எந்தெந்த அமைச்சர்கள் எந்தெந்த ஒன்றியத்தை பார்க்க வேண்டும் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

    கானை மத்திய ஒன்றியம்-அமைச்சர் கே.என்.நேரு, விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம், எ.வ.வேலு, மேற்கு ஒன்றியத்துக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கானை வடக்கு ஒன்றியம்-சக்கரபாணி, கோலியனூர் மேற்கு ஒன்றியம்-தா.மோ.அன்பரசன், விக்கிரவாண்டி மத்திய ஒன்றியம்-சிவசங்கர், விக்கிரவாண்டி பேரூர்-சி.வி.கணேசன், கானை தெற்கு ஒன்றியத்துக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, லட்சுமணன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக 9 ஆயிரம் ஓட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் மூலம் 2 லட்சம் ஓட்டுகளுக்கு தி.மு.க.வில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த 9 அமைச்சர்களின் கீழ் மற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள் பணியாற்ற பஞ்சாயத்துகள், ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு ஊராட்சி பூத் வாரியாக ஓட்டுகள் திரட்டுவதற்கு இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி அமைச்சர் தா.மோ.அன்பரசன் 7 ஊராட்சிகளில் 11 பூத்தில் உள்ள 8,942 ஓட்டுகளை கவனிக்க வேண்டும்.

    அமைச்சர் பெரிய கருப்பன் 2 ஊராட்சிகளில் 5 பூத்தில் 4,310 வாக்குகளையும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 ஊராட்சிகளில் உள்ள 3,694 வாக்குகளையும் பார்க்க வேண்டும்.

    அமைச்சர் பி.மூர்த்திக்கு 3,700 ஓட்டுகளும், செஞ்சி மஸ்தானுக்கு 5,805 ஓட்டுகளும் கொடுக்கப்பட்டு உள்ளன.

    இதே போல் ஒவ்வொரு அமைச்சர்கள், எம்.எல்.ஏ. க்கள், மாவட்டச் செயலாளர்களுக்கும் 'பூத்' வாரியாக பணியாற்ற ஒட்டுகள் பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    இதனால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் தங்கி பணியாற்றுவதற்காக விக்கிரவாண்டி விழுப்புரத்தில் ஒவ்வொருவருக்கும் வாடகை வீடு பார்க்கும் படலமும் தொடங்கி உள்ளது.

    அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி வரை தங்குவதற்கு ரூ.1 லட்சம் வரை வாடகை கொடுக்க தயாராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    ஆனாலும் வசதியான வீடு கிடைப்பதில் சிரமம் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    எப்படியானாலும் நடப்பு சட்டசபைக் கூட்டத் தொடர் முடிவதற்குள் ஏதாவது ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து தர வேண்டும் என்று உதவியாளர்களுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

    அதனால் விக்கிரவாண்டி-விழுப்புரம் பகுதிகளில் வாடகை வீடு தேடி கொடுக்கும் புரோக்கர்களுக்கு தேவை, மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது.

    • புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • கள்ளச்சாராய சாவுக்கு முக்கிய காரணமே அரசு செயலிழந்துள்ளது தான்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுர தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து 35 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. விஷச்சாராயத்தால் பலியான அனைவரும் ஏழை கூலி தொழிலாளர்கள். அவர்களின் குடும்பத்தினர் அல்லாடி தவித்து வருகின்றனர். கள்ளச்சாராய சாவுக்கு முக்கிய காரணமே அரசு செயலிழந்துள்ளது தான்.

    எனவே இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. வேட்பாளரான அன்னியூர் சிவா, விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இன்று காலை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • நாம் தமிழர் கட்சி வேட்பாளரான டாக்டர் அபிநயா வருகிற 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளது.

    இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தி.மு.க.-பா.ம.க. இடையேதான் நேரடி போட்டி நிலவி உள்ளது. இதனால் 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் வெற்றி பெறுவதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்கள்.

    தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் விக்கிரவாண்டியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். பா.ம.க. நிர்வாகிகளும் பம்பரமாக சுழன்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 14-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளான அன்று 5 சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 7 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தி.மு.க. வேட்பாளரான அன்னியூர் சிவா, விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இன்று காலை 11 மணி அளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    அவருடன் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களான ஜெகத்ரட்சகன் எம்.பி., அமைச்சர் பொன்முடி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் பொன்முடி கூறும்போது, கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது, ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார்.

    'இதைத் தொடர்ந்து பா.ம.க. வேட்பாளரான சி.அன்புமணியும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இருவரும் தங்களது ஆதரவாளர்களோடு ஊர்வலமாக சென்று வேட்புமனுக்களை தாக்கல் செய்ததால் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் களம் இன்று களைகட்டி காணப்பட்டது.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளரான டாக்டர் அபிநயா வருகிற 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

    முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரசாரமும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. நாளை முதல் தி.மு.க. மற்றும் பா.ம.க. கட்சி களை சேர்ந்தவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து ஏற்கனவே அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களான செல்வப்பெருந்தகை, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்கிறார்கள்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து சீமானும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    வருகிற 24-ந்தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற 26-ந்தேதி கடைசி நாளாகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. இதன் பிறகு தேர்தல் களம் மேலும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×