என் மலர்tooltip icon

    வேலூர்

    நாட்டறம்பள்ளி அருகே வீடு எரிந்து முதியவர் உடல் கருகி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அருகே உள்ள நாயனஅத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 70). இவரது மனைவி யசோதா நேற்று இரவு குடிசை வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு வீட்டில் திடீரென தீபிடித்து எரிந்தது. கண்விழித்த யசோதா வெளியே ஓடி வந்துவிட்டார். முனுசாமி தீயில் சிக்கிகொண்டார். யசோதா கூச்சலிட்டார் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். உடல் கருகிய முனுசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    நாட்டறம்பள்ளி போலீசார் முனுசாமி உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். யாராவது வேண்டுமென்று தீ வைத்தார்களா அல்லது விபத்தில் தீ பற்றியதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அரப்பாக்கத்தில் கன்டெய்னர் லாரி மீது மினிவேன் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால் ஆற்காடு நோக்கி காய்கறிகளை ஏற்றிக் கொண்டு மினிவேன் சென்றது. தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் விபத்துகளை தடுக்க வாகனங்களின் வேகத்தை குறைக்கடிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    அரப்பாக்கம் அருகே கன்டெய்னர் லாரி சென்றபோது டிவைடர்கள் சாலையின் குறுக்கே இருந்ததால் டிரைவர் அதன் வேகத்தை குறைத்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மினிவேனின் டிரைவர் இதனை கவனிக்கவில்லை.

    இதனால் கன்டெய்னர் லாரி மீது மினிவேன் திடீரென மோதியது. மோதிய வேகத்தில் மினி வேனின் முன்பகுதி நொறுங்கியது. மினி வேனுக்குள் டிரைவரும், உடன் இருந்த மற்றொரு நபரும் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மினிவேனில் இருந்த தக்காளிகள் சாலையில் சிதறியது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மினிவேனில் சிக்கி இருந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 2 வாகனங்களையும் அப்புறப்படுத்தி சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்தை சீர்செய்தனர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், இறந்த 2 பேரும் ஆற்காட்டை சேர்ந்த பாஸ்கர் (வயது 40) மற்றும் கோபி (40) என்பது தெரியவந்தது. மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் வியாபாரி வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    வேலூர்:

    வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் ரபியுல்லா (வயது 50). வீட்டின் அருகில் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் நாகூர் தர்காவுக்கு சென்றிருந்தார்.

    மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இன்று வீடு திரும்பிய ரபியுல்லா வீட்டில் கொள்ளை நடந்தது கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலாற்றில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா போலீசார் இன்று அதிகாலை 3 மணிக்கு மாதனூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்த போது அனுமதியின்றி பாலாற்றில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து லாரி உரிமையாளர் திருமலை குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது31). லாரி டிரைவர் மாதனூர் அடுத்த ஆர்பட்டியை சேர்ந்த பாரத்(28) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் பெங்களூரு, கோவை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
    தக்கோலம்:

    அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் யார்டு அருகே உள்ள தண்டவாளத்தை இரவு 10.15 மணிக்கு ரெயில்வே ஊழியர்கள் சோதனை செய்தபடி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்ட ஊழியர்கள் உடனடியாக அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ஊழியர்கள் தண்டவாள விரிசல் பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    மேலும் அவ்வழியாக வந்த கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், பெங்களூரு மெயில், எர்ணாகுளம் வராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவு 12.45 மணியளவில் தற்காலிகமாக சரி செய்யப்பட்டு ரெயில்கள் அந்த பகுதியில் மெதுவாக இயக்கப்பட்டது.

    ரெயில்கள் 2 மணி நேரம் நிறுத்தபட்டதால் பயணிகள் குறித்த நேரத்திற்கு சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    குடியாத்தம் அருகே அரசு பஸ் சரியாக இயக்காமல் தனியார் பஸ்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக கூறி மாணவர்கள் சாலை மறியல் செய்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தில் இருந்து பரதராமிக்கு காலை நேரங்களில் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பஸ்பாஸ் வைத்திருக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.

    கடந்த சில நாட்களாக இந்த பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் தனியார் பஸ்களில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.

    இன்று காலை குடியாத்தம் நோக்கி சென்ற தனியார் பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவர் கீழே விழுந்து காயமடைந்தார்.இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கணவாய் மோட்டூரில் சாலை மறியல் செய்தனர்.

    அரசு பஸ்களை இயக்காமல் தனியார் பஸ்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் உதவி செய்வதாக குற்றம் சாட்டினர்.

    பரதராமி போலீசார் அங்கு சென்று அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    அணைக்கட்டு அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யயப்பட்டார். இது தொடர்பாக பெண்ணின் உறவினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    அணைக்கட்டு அருகே உள்ள இலவப்பாடியை சேர்ந்த கட்டிட மேஸ்திரியின் 20 வயது மகள் மாற்றுத்திறனாளி. நேற்று முன்தினம் அவரது பெற்றோர் வெளியே சென்றிருந்தனர்.

    அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

    தனியாக இருந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். இதனால் இளம்பெண் சாப்பிடாமல் இருந்துள்ளார்.

    வீடு திரும்பிய பெற்றோர் மகளின் நிலை கண்டு விசாரித்தனர். அவரது உடலில் காயங்கள் இருப்பதையும் கண்டு திடுக்கிட்டனர்.

    அப்போது நடந்த சம்பவம் குறித்து இளம்பெண் கூறியுள்ளார். இதுபற்றி விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் பலாத்காரம் செய்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஆம்பூர் அருகே மூதாட்டியிடம் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள மேல்கிருஷ்ணாபுரம் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் மணி இவரது மனைவி பத்மாவதி (வயது 62). இவர் இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக நடந்து வந்த ஒரு மர்ம நபர் திடீரென பத்மாவதி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு ஓடினார். அதிர்ச்சியடைந்த பத்மாவதி கூச்சலிட்டார். அதற்குள் அந்த நபர் தலைமறைவாகிவிட்டார்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள குறிசிலாப்பட்டு பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த பல மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர்-ஆலங்காயம் செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டு முறையாக குடிநீர் வினியோகம் செய்யவேண்டும் என்றனர்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்

    இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வாணியம்பாடி அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாணியம்பாடி:

    சென்னை போரூரை சேர்ந்த உமாபதி. அவரது நண்பர்கள் 4 பேர் காரில் ஏலகிரி மலைக்கு சென்றனர். இன்று மதியம் ஊருக்கு புறப்பட்டு வந்தனர்.

    வாணியம்பாடி அருகே தாலிஅறுத்தான்மேடு என்ற இடத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் செல்வபிரகாசம், சிவா, ஜானகிராமன் ஆகியோர் சம்பவ இடத்தில் இறந்தனர். சுப்பிரமணி என்பவர் படுகாயத்துடன் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உமாபதி லேசான காயத்துடன் தப்பினார்.

    வாணியம்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியானவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பாணாவரம் அருகே ஊராட்சி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய உடலை வாங்கமறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    பனப்பாக்கம்:

    வேலூர் மாவட்டம் பாணாவரத்தை அடுத்த பழையபாளையம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 35). ஊராட்சி செயலாளராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1 வயதில் குழந்தை உள்ளனர். இந்த நிலையில் ஜெயபாலன், விவசாய நிலத்தில் நேற்று தூக்கில் பிணமாக தொங்கினார்.

    பாணாவரம் போலீசார் ஜெயபாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயபாலனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஜெயபாலன் 21-ந் தேதியிட்டு தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று அவருடைய வீட்டில் சிக்கியது. அதில் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளராக பணிபுரியும் ரேணுகோபால் 3.5.2018 அன்று ரூ.10 லட்சம், 5 ரூபாய் வட்டிக்கு வாங்கினார். அதற்கு அவர் வட்டியும் தரவில்லை. முதலும் தரவில்லை. மேலும் சிலருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறினார். இதனால் எனக்கு தெரிந்த சிலரிடம் ரூ.23 லட்சத்து 50 ஆயிரம் பெற்று கடந்த ஆண்டு ரேணுகோபாலிடம் கொடுத்தேன்.

    அவர் வேலையும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித்தரவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு நெருக்கடி கொடுத்தார்கள். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. எனவே எனது தற்கொலைக்கு காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் ரேணுகோபால்தான் காரணம் என்று கூறி உள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயபாலனின் உறவினர்கள் அவருடைய உடலை வாங்க மறுத்து சோளிங்கர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் சோளிங்கர் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், பாணாவரம் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பாணாவரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று ரேணுகோபாலை கைது செய்யக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் போலீசார் சரியான பதில் சொல்லாததால் அங்குள்ள ரெயில்வே மேம்பாலம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் ரேணுகோபால் மீது வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலியானார் . பெண் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
    ஆம்பூர்:

    நாட்டறம்பள்ளியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). இறைச்சி வியாபாரி. இவரது மனைவி சசிகலா (38).

    இவர்கள் அதே பகுதியை சேர்ந்த சேகர் (25). அருள் (39). பிரசாத் (40). ஆகியோருடன் பள்ளிக்கொண்டாவில் நடைபெறும் காளை விடும் விழாவில் இறைச்சி வியாபாரம் செய்வதற்காக இன்று காலை காரில் வந்து கொண்டிருந்தனர்.

    காரை பிரசாத் ஓட்டிவந்தார். ஆம்பூர் அருகே உள்ள ஜமீன் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயமடைந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சேகர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×