என் மலர்tooltip icon

    வேலூர்

    பள்ளிகொண்டா அருகே இன்று அதிகாலை கார் மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

    வேலூர்:

    பெங்களூரு ஈரோஅல்லி முனீஸ்வரர் நகரை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 24). இவரும், இவரது நண்பர்கள் 4 பேரும் மேல்மலையனூர் செல்ல பெங்களூருவில் இருந்து நேற்றிரவு தங்களுக்கு சொந்தமான காரில் புறப்பட்டனர். காரை அனில்குமார் ஓட்டினார்.

    இன்று அதிகாலை பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி அருகே வந்த போது வேலூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற சொகுசு பஸ் கார் மீது மோதியது. இதில் கார் தூக்கி வீசப்பட்டது. காரை ஓட்டி வந்த அனில்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    மேலும் அவருடன் வந்த நண்பர்கள் மல்லிகார்ஜூன் (24). அசோக் (23), ரகு(29), வினஸ்(23) ஆகிய 4 பேர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

    பஸ்சில் பயணம் செய்தவர்களில் 4 பேர் காயமடைந்தனர். பஸ் டிரைவர் கோட்டீஸ்வரன் (24), மாற்று டிரைவர் பூபாலன் (33), பயணி மாதேஸ் (48), தனசேகர்(32) ஆகியோர் காயமடைந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்த வாலிபரின் உடலை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த 8 பேரையும் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் காளைவிடும் திருவிழாவில் மாடு முட்டி ஒருவர் பலியானர்.

    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் காளைவிடும் திருவிழா நடைபெற்றது.

    இதில் பங்கேற்க குடியாத்தம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. அந்த காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன.

    பின்னர் தகுதி பெற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டதில் சீறிப்பாய்ந்து சென்றன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைவிடும் திருவிழாவில் மாடு முட்டியதில் குடியாத்தம் அடுத்த முக்குன்றம் ஊராட்சி காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னதுரை (வயது 55) பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சின்னதுரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் காளைவிடும் திருவிழாவில் 25 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. போட்டிகளையொட்டி அப்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    வாலிபரை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    வேலூர்:

    குடியாத்தம் தாலுகா தாழையாத்தம் பகுதி பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் 14.1.2017 அன்று மாலை 5 மணி அளவில் தாயம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த சுகுமார் (30) என்பவர் அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் சென்றார். அவருக்கும் தாயம் விளையாடிய ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து சுகுமார் சென்று விட்டார். பின்னர் இரவு 8 மணி அளவில் சுகுமாரை தேடி அவரது வீட்டிற்கு ராஜா சென்றார். அங்கு அவர் இல்லை. அருகில் இருந்த சீனிவாசன் என்பவர் வீட்டில் சுகுமார் இருந்துள்ளார். அங்கு சென்ற ராஜா, சுகுமாரை திடீரென தாக்கினார்.

    தடுக்க வந்த சீனிவாசனையும் அவர் கீழே பிடித்து தள்ளிவிட்டார். இந்த தாக்குதலில் சுகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

    இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நடந்த வழக்கின் இறுதி விசாரணையின்போது அரசு தரப்பில் வக்கீல் அ.கோ.அண்ணாமலை ஆஜராகி வாதாடினார். நீதிபதி எஸ்.குணசேகரன் வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறினார்.

    அதில், குற்றம் சாட்டப்பட்ட ராஜாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் 1 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பலத்த காவலுடன் ராஜாவை போலீசார் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர். #tamilnews
    மணல் கடத்தலுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மதினாபல்லி மலட்டாற்றில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகே உள்ள மதினாப்பல்லி மலட்டாறானது பேரணாம்பட்டு , ஆம்பூர் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் மதினாப்பல்லி ஆற்றுப்படுகையை நம்பியுள்ளன.

    இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக இந்த ஆற்றில் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு இரவும், பகலும் மணல் சுமார் 10 அடி முதல் 15 அடி வரை தோண்டி எடுக்கப்பட்டு லாரிகள் மூலம் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் சுற்றுப்புற நகரங்களுக்கும் கடத்தப்பட்டு வருகிறது.

    இதனால் குடிநீர் பைப்லைன்கள் வெளியில் தெரியும் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மணல் கடத்தலுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மதினாபல்லி மலட்டாற்றில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் உதயகுமார், மாவட்ட அமைப்பாளர் ராம்தாஸ், மாவட்ட துணை செயலாளர் ரகுபதி, ஒன்றிய செயலாளர் வெங்கடபதி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேணுமூர்த்தி, நிர்வாகிகள் பழனி, சந்திரன், ராஜா, நந்தன், சசி, ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மணல் கடத்தலை உடனடியாக தடுக்க கோரி மலட்டாற்றில் நின்று கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    ஆம்பூரில் முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 60). டெய்லர். இவர் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஆம்பூர் பை-பாஸ் சாலை அண்ணாமலையார் தெருவில் இன்று காலை முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் இறந்து கிடப்பது ரமேஷ் என்பது தெரியவந்தது. உடலை மீட்ட போலீசார் உறவினர்களுக்கு தகவலை தெரிவித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழகத்தின் இரு பெரும் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடத்தப்படும் இந்த தேர்தல் திமுக மற்றும் அதிமுகவுக்கு முக்கிய தேர்தல் என துரைமுருகன் பேசியுள்ளார். #LSpolls #DMK #DuraiMurugan
    வேலூர்:

    வேலூர் மத்திய மாவட்ட, மேற்கு மாவட்ட மற்றும் மாநகர தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் வேலூரில் உள்ள மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.

    சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இருபெரும் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடத்தப்படும் தேர்தல்.

    ஒரு பக்கம் மோடியும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்துள்ளனர். நாம் ஜனநாயக ரீதியில் கூட்டணி அமைத்துள்ளோம். இரு கட்சிகளுக்கும் இந்த தேர்தல் வாழ்வா? சாவா? என்பது போன்றது.

    அவர்கள் வெற்றி பெற்றால் தொடர்ந்து அவர்களது ஆட்சி நடக்கும். நாம் வெற்றிபெற்றால் அடுத்த 25 ஆண்டுகள் தி.மு.க. ஆட்சியே தொடரும். இதனுடன் டெல்லியையும் கைப்பற்றி விடுவோம்.

    இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். போன்றவர்கள் பணத்தை போட்டு ஆட்சியை பிடித்துவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் நடக்காது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட 99 சதவீதம் முயற்சி மேற்கொள்வேன். அதனை சிந்தாமல், சிதறாமல் வாக்குகளாக பெற்று வெற்றிக்கனியாக மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #LSpolls #DMK #DuraiMurugan
    அரக்கோணம் தண்டவாளம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் இவரது மகன் ஆதித்யா (வயது 22). இவர் தனது வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களை காஞ்சிபுரம் அருகே உள்ள வெள்ளகேட் பகுதிக்கு இன்று காலை காரில் அழைத்து சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது இலுப்பைதண்டலம் ரெயில்வே கேட் அருகே கார் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டோடி ரெயில்வே தண்டவாளத்தின் அருகே தலைகீழாக கவிழ்ந்து நின்றது.

    இதில் ஆதித்யா அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து தக்கோலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலியல் தொல்லைக்கு ஆளான 3 மாத குழந்தையின் தந்தை திரிபுராவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    வேலூர்:

    திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 3 மாத குழந்தையை சிகிச்சைக்காக பெற்றோர் 4 மாதங்களுக்கு முன்பு வேலூருக்கு கொண்டு வந்திருந்தனர். தனியார் மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்தபோது குழந்தை பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து குழந்தையின் பெற்றோரிடம், குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

    ஆனால் அவர்கள் சரியாக பதில் கூறவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி வழக்குப்பதிவு செய்து குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார். ஆனால் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில்கூறினர்.

    அதைத்தொடர்ந்து குழந்தையை காட்பாடியில் உள்ள ஒரு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தையின் பெற்றோர் திரிபுராவுக்கு சென்றுவிட்டனர். அவர்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் திரிபுரா போலீசில் புகார் செய்தனர். அதில் தங்கள் குழந்தையை மீட்டுத்தாருங்கள் என்று கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு ஆளான 3 மாத குழந்தையின் தந்தை கடந்தசில நாட்களுக்கு முன்பு திரிபுராவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    எனவே குழந்தையின் பாலியல் தொல்லைக்கும், தந்தைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? அல்லது வேறு ஏதாவது காரணத்தினால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 422 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுதினர். அவர்கள் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 169 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. #Plus2Exam
    வேலூர்:

    தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

    வேலூர் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 422 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுதினர். அவர்கள் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 169 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.

    ஒவ்வொரு மையத்திலும் 2 ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பாளராக ஈடுபட்டனர். தேர்வு மையங்களை கண்காணிக்கவும், காப்பியடிப்பவர்களை பிடிக்கவும் 200 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.

    அதுதவிர கலெக்டர், முதன்மைக்கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் வருவாய் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மையங்களை கண்காணிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தேர்வு தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். சரியாக காலை 10 மணிக்கு மாணவ-மாணவிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.

    முதல் 10 நிமிடம் கேள்வித்தாளை படித்துப் பார்ப்பதற்கும், பின்னர் விடைத்தாளை பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடமும் அனுமதி வழங்கப்பட்டது. தேர்வுகள் 10.15 மணிக்கு தொடங்கி பகல் 12.45 மணிவரை நடந்தது. 94 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 441 மாணவர்களும், 14 ஆயிரத்து 587 மாணவிகளும் என மொத்தம் 28 ஆயிரத்து 28 பேரும் எழுதினர்.

    தேர்வு மையங்களில் 1,677 அறை கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும், தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறாத வண்ணம் 180 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். #Plus2Exam
    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று காட்பாடி பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் பேசியுள்ளார். #dmk #duraimurugan

    வேலூர்:

    காட்பாடி சட்டமன்ற தொகுதி காந்திநகர் பகுதி தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் பெரியார் சிலை அருகே நேற்று இரவு நடந்தது. பகுதி செயலாளர் என்.பரமசிவம் தலைமை தாங்கினார். தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.காந்தி, ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, மத்திய மாவட்ட பொருளாளர் நரசிம்மன், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி தலைவர் டி.எம்.கதிர்ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் வி.தயாநிதி, தலைமை கழக பேச்சாளர் கே.ஏ.கண்ணன் உள்பட பலர் பேசினர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் அமைச்சராக இருந்தபோது காங்கேயநல்லூரில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்ல தரைப்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினேன். அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரைப்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதுவரை அதற்கான அறிகுறியே தெரியவில்லை. வேலூர் மாநகராட்சியில் வீடுகளுக்கு இஷ்டத்துக்கு வரி போட்டுள்ளனர். கேட்டால் வரிபோட்டது போட்டது தான் என அதிகாரிகள் பதில் கூறுகின்றனர்.

    வேலூர் மாநகராட்சியில் ரூ.1000 கோடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த ரூ.1000 கோடியை எப்படி செலவு செய்யலாம் என எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை அழைத்து ஆலோசனை கேட்கவில்லை. ரூ.40 கோடியை கோவையை சேர்ந்த நிறுவனத்துக்கு மின்விளக்கு வசதி செய்ய கொடுத்துள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் காவிரி குடிநீர் 24 மணிநேரமும் உங்கள் வீடுகளை தேடி வரும். தமிழகத்தில் வெகு சீக்கிரம் தி.மு.க. ஆட்சி மலரும். வேலூர் மாநகராட்சியில் தகுதி இல்லாதவர்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது வேலூர் மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க தனி கமி‌ஷன் அமைத்து தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்.

    பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு அரசியல். இதை மோடி அரசு நன்கு உபயோகித்துள்ளது. உதாரணம் வங்கதேசம் போர் செய்து இந்திரா மீண்டும் ஆட்சியை பிடித்தார். சீனா மீது போர் தொடுத்து நேரு ஆட்சியை பிடித்தார். கார்கில் போர் செய்து வாஜ்பாய் ஆட்சி பிடித்தார். அதே பாணியில் மோடியும் வருகிறார். எனவே மக்களே ஆட்சி மாற்றம் ஏற்பட அயராது பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக காட்பாடி பகுதி செயலாளர் வன்னியராஜா, ஒன்றிய செயலாளர்கள் சரவணன், கருணாகரன், சேஷாவெங்கட், சேண்பாக்கம் பகுதி செயலாளர் முருகபெருமாள் ஆகியோர் வரவேற்றனர். தலைமை செயற்குழு உறுப்பினர் அ.மா.ராமலிங்கம், துரைசிங்காரம், பொதுக்குழு உறுப்பினர் ஞானவேல், மாநகராட்சி முன்னாள் மண்டல குழு தலைவர் சுனில்குமார், மகளிரணி துணை அமைப்பாளர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பகுதி துணை செயலாளர் கே.எஸ்.கண்ணன் நன்றி கூறினார். #dmk #duraimurugan

    வேலூர் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 422 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    வேலூர்:

    தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தேர்வுக்கான வினாத்தாள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 422 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். அவர்கள் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 169 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 2 ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பாளராக பணியாற்றுவார்கள். தேர்வு மையங்களை கண்காணிக்கவும், காப்பியடிப்பவர்களை பிடிக்கவும் 200 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. அதுதவிர கலெக்டர், முதன்மைக்கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் வருவாய் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மையங்களை கண்காணிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் வந்து சேர்ந்து விட்டன. வினாத்தாள்கள் 16 இடங்களில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு, அந்த அறைக்கதவுகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் அந்த அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். அந்த வளாகத்திற்குள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தனி நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வினாத்தாள்கள் 44 வழித்தடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

    தமிழ் பாடத்துக்கான தேர்வு நாளை நடக்கிறது. தேர்வு தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். சரியாக காலை 10 மணிக்கு மாணவ-மாணவிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும்.

    முதல் 10 நிமிடம் கேள்வித்தாளை படித்துப் பார்ப்பதற்கும், பின்னர் விடைத்தாளை பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடமும் அனுமதி வழங்கப்படும். தேர்வுகள் 10.15 மணிக்கு தொடங்கி பகல் 12.45 மணிவரை நடைபெறும். தேர்வு நேரம் தொடங்கியதும் மாணவ-மாணவிகள் முதலில் தங்களுக்கு எந்தக் கேள்விக்குப் பதில் நன்றாக தெரியுமோ அதனை எழுதிவிட வேண்டும். பின்னர் மற்ற கேள்விகளுக்குப் பதில் எழுத முயற்சிக்க வேண்டும்.

    தேர்வு மையங்களில் இருந்து முன் கூட்டியே வெளியேறக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நேரம் முழுவதும் தேர்வு மையத்தில் மாணவர்கள் இருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் தேர்வு மையத்தில் காப்பி அடிக்கவோ, மற்றவர்கள் விடைத்தாளை பார்த்து எழுதுவது போன்ற தவறான செயல்களில் ஈடுபட முயற்சிக்க வேண்டாம். மீறி தவறாக நடக்க முயன்றால், நிச்சயமாக கண்காணிப்பாளரால் கையும், களவுமாக பிடிபடுவதுடன், தேர்வு மையத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதிட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    வேலூர் அருகே அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மீது மினிவேன் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர்.
    ஆற்காடு: 

    வேலூர் அருகே அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மீது மினிவேன் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    வேலூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய் னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால் ஆற்காடு நோக்கி காய்கறி களை ஏற்றிக் கொண்டு மினிவேன் சென்றது. தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் விபத்துகளை தடுக்க வாகனங்களின் வேகத்தை குறைக்க டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    அரப்பாக்கம் அருகே கன்டெய்னர் லாரி சென்ற போது டிவைடர்கள் சாலையின் குறுக்கே இருந்ததால் டிரைவர் அதன் வேகத்தை குறைத்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மினிவேனின் டிரைவர் இதனை கவனிக்கவில்லை.

    இதனால் கன்டெய்னர் லாரி மீது மினிவேன் மோதியது. மோதிய வேகத்தில் மினி வேனின் முன்பகுதி நொறுங்கியது. மினி வேனுக்குள் டிரைவரும், உடன் இருந்த மற்றொரு நபரும் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மினிவேனில் இருந்த தக்காளிகள் சாலையில் சிதறியது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மினிவேனில் சிக்கி இருந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இரு வாகனங்களையும் அப்புறப்படுத்தி சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் போக்கு வரத்தை சீர் செய்தனர்.

    போலீசாரின் விசாரணையில், ஆற்காட்டை சேர்ந்த டிரைவர் பாஸ்கர் (வயது 34) மற்றும் கோபிநாத் (53) என்பது தெரியவந்தது. மேலும், இந்த விபத்து குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×