search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிட தாமதம் ?
    X

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிட தாமதம் ?

    • மாணவர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுக்குரிய ஆசிரியர்கள் அவ்விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் பங்கேற்க வேண்டும்.
    • ஆனால், தற்போது ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு 60 முதல் 70 விடைத்தாள்களை திருத்த வேண்டியுள்ளது.

    திருச்சி :

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை பருவத்தேர்வுகளின் விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஜூன் 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில, இப்பல்கலைக்கழக தேர்வு நெறியாளர், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

    அதில், பாரதிதாசன் பல்கலைக் கழக இளநிலை பருவத் தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்கு ஆசிரியர்கள் வருகை மிக குறைவாக உள்ளதால், தேர்வு முடிவுகளை குறித்த நேரத்தில் அறிவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுக்குரிய ஆசிரியர்கள் அவ்விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் பங்கேற்க வேண்டும்.மேலும், இதற்கு கல்லூரி முதல்வர்களும் முழு ஒத்துழைப்பு தந்து ஆசிரியர்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இது குறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளரிடம் கேட்டபோது, இது வழக்கமாக அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும் சுற்றறிக்கைதான், விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. முடிந்தவரை விரைவாக தேர்வு முடிவுகளை வெளியிட முயற்சித்து வருகிறோம் என்றார்.

    சுற்றறிக்கை குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியாகி தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால், பெரும் பாலான தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பவில்லை. இதனால் இந்த ஆண்டு விடைத்தாள் திருத்தும் பணியில் மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.

    வழக்கமாக ஒரு நாளைக்கு காலை 20, மாலை 20 என 40 விடைத்தாள்கள் மட்டுமே திருத்தப்படும். ஆனால், தற்போது ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு 60 முதல் 70 விடைத்தாள்களை திருத்த வேண்டியுள்ளது. மேலும் ஒரு விடைத்தாள் திருத்த பல ஆண்டுகளாக ரூ.12 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இதை உயர்த்தி வழங்காததாலும் பலர் இந்தப் பணியை தவிர்த்து விடுகின்றனர் என்றனர்.

    Next Story
    ×