என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • ரூ.12 ஆயிரம் கோடி வரையிலான வர்த்தகம் தீபாவளி பண்டிகை கால ஆர்டர்களாக இருக்கிறது.
    • திருப்பூரில் உற்பத்தியாகும் உள்ளாடைகளுக்கு வடமாநிலங்களில் வரவேற்பு அதிகம்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடமாநில வர்த்தகர்களின் ஆர்டரின் பேரில் திருப்பூரில் ஆயத்த ஆடை மற்றும் உள்ளாடை உற்பத்தி வேகமெடுத்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மும்பை என டெல்லி வரையில் இயங்கும் முன்னணி உள்நாட்டு ஜவுளி சந்தைகளில் திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளும் இடம்பெறுகின்றன. ஆண்டு முழுவதும் வெளிமாநில வர்த்தகர்கள் தொடர்ச்சியாக ஆர்டர் கொடுத்து பின்னலாடைகள் மற்றும் உள்ளாடைகளை கொள்முதல் செய்து விற்கின்றனர்.

    பின்னல் துணியில் ஆண்கள், பெண்கள், சிறுவர் - சிறுமிகள், குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடைகள், புதிய டிசைன்களில் ஆண்டுதோறும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இருப்பினும் திருப்பூரை பொறுத்தவரை தீபாவளி ஆர்டர் என்பது மிக முக்கியம். ஆண்டு முழுவதும் நடக்கும் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்தில் ரூ.12 ஆயிரம் கோடி வரையிலான வர்த்தகம் தீபாவளி பண்டிகை கால ஆர்டர்களாக இருக்கிறது.

    வருகிற 20-ந்தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக இன்று நவராத்திரி விழாவும் தொடங்கி உள்ளது. சில மாநிலங்களில் நவராத்திரி விழாவுக்கு புத்தாடை அணியும் பாரம்பரியமும் இருக்கிறது. இதற்காக ஆடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆடை கொள்முதல் ஆண்டு முழுவதும் நடந்தாலும், உள்ளாடை கொள்முதல் தீபாவளி பண்டிகையை சார்ந்தே மொத்தமாக நடக்கிறது.

    திருப்பூரில் உற்பத்தியாகும் பருத்தி நூலிழை பின்னல் பனியன், ஜட்டிகள், பாக்கெட் டிராயருக்கு வடமாநிலங்களில் வரவேற்பு அதிகம். அதேபோல், குளிர்காலங்களில் பயன்படுத்த செயற்கை நூலிழையில் உற்பத்தியாகும் உள்ளாடைகளுக்கான வரவேற்பும் அதிகரித்துள்ளது.

    இது குறித்து ஆடை உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகை கால ஆர்டர் விசாரணை செப்டம்பர் மாத தொடக்கத்தில் அதிகரித்தது. கடந்த ஆண்டு போலவே அதிக ஆர்டர் கிடைத்து வருகிறது. குறைந்த ஆர்டராக இருந்தாலும் வேகமாக உற்பத்தி செய்து அனுப்பி வருகிறோம். உள்ளாடைகளை பொறுத்தவரை முன்கூட்டியே தயாரித்து இருப்பு வைத்திருக்கிறோம். பின்னலாடை தயாரானதும் அவற்றுடன் சேர்த்து கன்டெய்னர் லாரி மற்றும் ரெயிலில் அனுப்பி வைக்கப்படும்.

    பெரியவர்களுக்கு டி-சர்ட், டிரக் பேன்ட்' பெண்களுக்கான இரவு நேர ஆடை ரகங்கள், குழந்தைகளுக்கான அனைத்து வகை ஆடைகளும் ஆர்டரின் பேரில் உற்பத்தி செய்து வருகிறோம். டி-சர்ட் ஆர்டர் மீது விசாரணை அதிகம் உள்ளது. செயற்கை நூலிழையில் தயாரிக்கப்பட்ட விளையாட்டு டி-சர்ட் மற்றும் பேன்ட், ஷார்ட்ஸ் போன்ற ஆர்டரும் கிடைத்துள்ளது. உற்பத்தியை முன்கூட்டியே வேகப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விஞ்ஞானத்தை பயன்படுத்தினால் தான் நன்றாக வாழ முடியும்.
    • வேற்றுமையில் ஒற்றுமை தற்போது மிக அவசிய மாகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் மதத்தால் பிரிந்தாலும் மனதால் இணைவோம் என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் பங்கேற்று பேசியதாவது:-

    விஞ்ஞானத்தை பயன்படுத்தினால் தான் நன்றாக வாழ முடியும். மதத்தால் சண்டையிட்டால் வாழ முடியாது. என்றும் மத நல்லிணக்கம் என்பது தான் முக்கியம். குரங்கை விட மோசமானவனாக மனிதன் உள்ளான். பள்ளியில் படிக்கும் போது இது போன்ற பிரச்சினைகள் கிடையாது. நான் பெரியார் புத்தகங்களை படித்த பிறகு தான் கடவுள் என்பது கற்பனை என உணர்ந்தேன்.

    திருப்பூர் எவ்வளவு வளர்ந்து உள்ளது. ஆனால் அமெரிக்காகாரன் திடீரென ஆப்பு வைத்து விட்டான்வடமாநில இளைஞர்களிடம் உங்கள் ஊருக்கு செல்கிறீர்களா? என கேட்டால் அவர்களுக்கு கோபம் வந்து விடும். அந்த அளவுக்கு அவர்கள் இங்கு சிறப்பாக உள்ளனர்.

    மும்பையில் பீப் ஸ்டால் இல்லை. அங்கு அவ்வளவு கொடுமை உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மராட்டி தான் பேசி வருகிறார்கள். இந்தி எதிர்ப்பு மகாராஷ்டிராவிலும் வளர்ந்துள்ளது. இந்தியாவிற்கு தமிழ்நாடு தான் முன்மாதிரியாக உள்ளது. 2026ல் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை தற்போது மிக அவசிய மாகிறது.

    தமிழகத்தில் நீதிக்கட்சி முதல் தி.மு.க., ஆட்சி வரை சமூக நீதி ஆட்சி நடை பெறுகிறது. வடமாநிலங்களில் இன்னும் பெண்ணடிமை, சாதிய மோதல் நிறைந்துள்ளன. தமிழ்நாட்டு சிந்தனைகள்தான் இன்று நாடு முழுவதும் சென்று கொண்டிருக்கிறது. எனக்கு சினிமா மார்க்கெட் உள்ளது. பணம் உள்ளது. யார் ஆட்சி வந்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை. 2026ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்திற்கு பாதுகாப்பு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
    • கொள்ளுப்பாளையம், லிங்கம நாயக்கன்புதூர், ஆமந்தகடவு, சுங்காரமடக்கு, வலசுபாளையம்,

    உடுமலை:

    உடுமலை மின் பகிர்மான வட்டம் பூளவாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதையொட்டி பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன்துறை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டு வேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்து கிணத்துப்பட்டி, சிக்கனூத்து, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கம நாயக்கன்புதூர், ஆமந்தகடவு, சுங்காரமடக்கு, வலசுபாளையம், குடிமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

    மேற்கண்ட தகவலை, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மாணவர்கள், பொதுமக்கள் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் தற்போது இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    • அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் காரத்தொழுவில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நாட்டுக்கல்பாளையம் கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இப்பகுதி மாணவர்கள், பொதுமக்கள் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் தற்போது இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்து வந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் இன்று காலை காரத்தொழுவு மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கணியூர் போலீசார் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பஸ் வசதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருப்பூரில் அடுத்த மாதம் 5-ந்தேதி விஜய் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள இருக்​கிறார்.
    • போலீசார் சார்பில் பாண்டியன் நகரில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    த.வெ.க. தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். கடந்த 13-ந்தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய், அன்றைய தினம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், வழியெங்கும் அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுமதி வழங்கப்பட்ட இடங்களுக்கு விஜய்யால் செல்ல முடியவில்லை.

    இதனால், திருச்சி, அரியலூரில் மட்டும் மக்கள் சந்திப்பை நடத்திவிட்டு, பெரம்பலூர் செல்லாமல், விஜய் சென்னை திரும்பினார். இந்நிலையில் திருப்பூரில் அடுத்த மாதம்(அக்டோபர்) 5-ந்தேதி விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    இதற்காக, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில் தவெக., நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து அனுமதி கோரி மனு அளித்தனர்.

    அக்டோபர் 5-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விஜய் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளை ஒருங்கிணைத்து ஏதாவது ஒரு இடத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். பிரசாரம் செய்வதற்காக திருப்பூர் மாநகரில் சின்னக்கரை, பாண்டியன் நகர், அவினாசி, பல்லடம் ஆகிய 4 இடங்களை த.வெ.க. நிர்வாகிகள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

    இதில் ஏதாவது ஒரு இடத்தில் பிரசாரம் செய்வார் என தெரிகிறது. போலீசார் சார்பில் பாண்டியன் நகரில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் வந்து பார்வையிட்டு அவர் கூறும் இடத்தில் விஜய் பிரசாரம் செய்ய போலீசாரிடம் அனுமதி கேட்க உள்ளனர்.

    மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர் மாவட்ட இணை செயலாளர் சுகுமார், துணை செயலாளர் குத்புதீன், பொருளாளர் வெள்ளைச்சாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    ஈரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் கீர்த்தி மீனா (வயது 21). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    தொடர்ந்து சிவக்குமார்- கீர்த்தி மீனா தம்பதியினர் திருப்பூர், இடுவம்பாளையம், சிவசக்தி நகர் 2-வது வீதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில், சிவக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து கீர்த்தி மீனா சிவக்குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிவக்குமார் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை கீர்த்தி மீனாவின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.

    வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கீர்த்தி மீனா வீட்டில் குழந்தையை தூங்க வைத்துவிட்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வீரபாண்டி போலீசார் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கீர்த்தி மீனாவிற்கு திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடையாததால் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது.
    • அதிக அளவில் வரிகளை விதித்து மக்கள் மீது திமுக சுமைகளை ஏற்றி வைத்துள்ளது.

    மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், இன்று திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திருப்பூர் மண்ணிலே பிறந்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நாட்டின் உயரிய பதவி கிடைத்திருப்பது தமிழக மக்களுக்கு பெருமை.

    திமுக ஆட்சி பொறுப்பேற்று 52 மாதத்தில் ஒரு புதிய திட்டம் கூட திருப்பூருக்கு கொண்டுவரப்படவில்லை.

    தொழிலாளர்கள், ஏழைகள் நிறைந்த பகுதியான திருப்பூரில் அரசு மருத்துவமனையை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தோம்.

    அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது.

    திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அதிக அளவில் வரிகளை விதித்து மக்கள் மீது திமுக சுமைகளை ஏற்றி வைத்துள்ளது.

    கஞ்சா விற்பனைக்கு திமுக ஆட்சியாளர்கள் துணை போகிறார்கள். போதைப்பொருள் தங்குதடையின்றி கிடைக்கிறது.

    தமிழ்நாட்டில் போதைப் பொருளை கட்டுப்படுத்தாமல் ஓய்வு பெறும் வரை ஓ போட்டவர் முன்னாள் டிஜிபி.

    கொங்கு மண்டலத்தில் முதிய தம்பதிகளை குறிவைத்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூரில் தொழிலாளர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
    • நிதிச்சுமையை தீர்த்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

    திருப்பூர்:

    'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பூரில் இன்று பனியன் உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள், விவசாயிகள் , பாத்திர உற்பத்தியாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் மனுக்கள் அளித்தனர்.

    அதனைப்பெற்றுக்கொண்ட அவர் தொழில்துறையினர் மத்தியில் பேசியதாவது:-

    டாலர்சிட்டியான திருப்பூர் தற்போது பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திருப்பூரின் நிலைமை எனக்கு கவலைஅளிக்கிறது. தமிழக அரசின் மின்கட்டணம், மாநகராட்சி வரி உயர்வால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறேன்.

    யாருக்கும் இழப்பு இல்லாமல் ஆட்சி நடத்தினோம். 27 சங்கங்களை சேர்ந்த தொழில் அமைப்பினர் என்னிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கி உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் திருப்பூர் தொழில்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூரில் தொழிலாளர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். எல்லாவற்றிற்கும் நிதி தேவை. இப்போதைய தி.மு.க. அரசு இதுவரை ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளது. இன்னும் 1 லட்சம் கோடி வாங்குவார்கள். இதன் மூலம் ரூ.5 லட்சம் கோடியாக உயரும். அதற்கு வட்டி கட்ட வேண்டும். நிதிச்சுமையை தீர்த்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். தொழிலும் வளர வேண்டும். விவசாயமும் செழிக்க வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் தொழில் தானாக வந்து விடும். வெளிமாநில முதலமைச்சர்கள் திருப்பூர் வந்து சலுகைகள் வழங்குவதாக கூறி தொழில் துறையினரை அவர்களது மாநிலத்திற்கு அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமை ஏற்படாதவாறு பார்த்து கொள்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • அருவியின் நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    • பஞ்சலிங்க அருவிக்கு செல்ல இன்று 2-வது நாளாக பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இங்கு பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 750 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி இருக்கிறது.

    ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில், குளித்து மகிழ தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதேபோல் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கும் தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    தடுப்புகளை தாண்டி கொட்டிய தண்ணீரானது, அடிவார பகுதியில் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலையும் சூழ்ந்தது. அந்த தண்ணீர் திருமூர்த்தி அணையை அடைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. 60 அடி உயரம் கொண்ட அந்த அணையில், இன்று காலை நிலவரப்படி 52 அடி தண்ணீர் உள்ளது.

    அருவியின் நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கு காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல இன்று 2-வது நாளாக பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    • நீதி கிடைக்கும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என ரிதன்யாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
    • ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை மற்றும் குடும்பத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த வழக்கில் கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தனர்.

    ரிதன்யா தற்கொலை தொடர்பான வழக்கு விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. நீதி கிடைக்கும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என ரிதன்யாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ரிதன்யாவின் பிறந்த நாளான இன்று, அவரது தந்தை அண்ணாதுரை மற்றும் குடும்பத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது, குடும்ப வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ ரிதன்யா பெயரில் இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்பட உள்ளதாக அவரது பெற்றோர் அறிவித்துள்ளானர்.

    இதுகுறித்து ரிதன்யாவின் பெற்றோர் கூறுகையில்," ரிதன்யா பெயரில் வரதட்சணை மற்றும் குடும்ப வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு, ரிதன்யா சமூகசேவை அறக்கட்டளை மூலம் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்படும்" என்று குறிப்பிட்டனர்.

    • மாதம் தோறும் ரூ.20 முதல் 25 ஆயிரம் வரை ஊதியம் கிடைத்து வந்துள்ளது.
    • 17 கூலி தொழிலாளர்களை வேண்டாம் என மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் பிரிட்ஜ்வே காலனி பகுதியில் ஏராளமான லாரி புக்கிங் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பனியன் உள்ளிட்ட பின்னலாடை பொருட்கள் இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் சரக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    இதற்காக வரும் சரக்குகளை குடோன்களில் இருந்து லாரிகளில் ஏற்றவும் லாரிகளில் இருந்து குடோன்களில் இறக்கவும் சுமார் 17 சுமைப்பணி தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.

    இவர்களுக்கு மாதம் தோறும் ரூ.20 முதல் 25 ஆயிரம் வரை ஊதியம் கிடைத்து வந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே வேறொரு குடோனில் பணியாற்றி வந்த 7 வட மாநில தொழிலாளர்களை 2 குடோன்களுக்கும் சேர்த்து வேலை பார்க்க அனுமதிக்க வைத்துவிட்டு 17 கூலி தொழிலாளர்களை வேண்டாம் என மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இச்சம்பவத்தை அடுத்து சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., மற்றும் ஏ.டி.பி., தொழிற்சங்கத்தினர் தமிழக தொழிலாளர்களை பணியமர்த்த நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாக தரப்பு மற்றும் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடத்தி சமூகத் தீர்வு காண்பது எனவும் அதுவரையில் தொழிலாளர்கள் சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபடமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. 

    • சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை-மூணாறு சாலையில் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளப்பாளையம் பகுதியில் கருவண்ணராயர்-வீரசுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு நடத்தி வந்த நிலையில் தற்போது ஒரு சிலர் தூண்டுதலின் பேரில் கிராம மக்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பள்ளப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை-மூணாறு சாலையில் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பள்ளப்பாளையம் கோவிலில் பல ஆண்டுகளாக சாமி தரிசனம் செய்து வந்தோம். தற்போது வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றனர்.

    சம்பவ இடத்திற்கு உடுமலை டி.எஸ்.பி., நமச்சிவாயம் மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

    ×