என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு- உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை
    X

    தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு- உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை

    • சுற்றுலா வருவோர் கோவிலை ஒட்டி மலைப்பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.
    • இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பில் அருவியிலும், வழித்தடத்திலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. சிறந்த சுற்றுலா தலமான இப்பகுதியில் திருமூர்த்தி அணை, மீன் காட்சியகம், பஞ்சலிங்கம் அருவி, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய 3 கடவுள்களும் ஒரே சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

    பண்டிகை நாட்கள், விடுமுறை தினங்களில் உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா வருவோர் கோவிலை ஒட்டி மலைப்பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.

    இந்தநிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு முதல் லேசான தொடர் மழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்திருப்பதால் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பில் அருவியிலும், வழித்தடத்திலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் இன்று காலை அருவியில் குளிக்க சென்ற ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    Next Story
    ×