என் மலர்
திருப்பூர்
- வருகிற 6-ந்தேதி பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
- திருப்பூரில் தங்கி இருந்த தொழிலாளர்களும் தற்போது தங்கள் மாநில தேர்தலில் வாக்களிக்க சொந்த மாநிலத்திற்கு செல்ல முனைப்பு காட்டி வருகின்றனர்.
திருப்பூர்:
தொழில் நகரமான திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், வடமாநிலங்களை சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி இருந்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற நிலையில் வருகிற 6-ந்தேதி பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திரும்பி வராமல் அங்கேயே தங்கியுள்ளனர். மேலும் திருப்பூரில் தங்கி இருந்த தொழிலாளர்களும் தற்போது தங்கள் மாநில தேர்தலில் வாக்களிக்க சொந்த மாநிலத்திற்கு செல்ல முனைப்பு காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையம் வழியாக பீகார் செல்லும் ரெயில்களில் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
- எம்.ஜி.ஆர். போல மக்களிடத்திலே செல்வாக்கு பெற்ற தலைவர் என்று சொன்னால் எனக்கு தெரிந்து யாரும் இல்லை.
- தொடர்ந்து உழைத்தால் தொடர்ந்து உயரலாம்.
திருப்பூர்:
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா திருப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
எல்லோரோடும் இணைந்து பணியாற்றுகின்ற ஒரு பெரிய வாய்ப்பை இறைவன் எனக்கு தந்திருக்கிறான். தி.மு.க.வோடும் பணியாற்றி இருக்கிறேன். அ.தி.மு.க.வோடும் பணியாற்றி இருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் நான் முதன்முதலாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நான் சார்ந்த இயக்கத்தினுடைய கவுன்சிலர்களே ஒட்டுமொத்த பாராளுமன்றத்தில் ஒருவர் கூட இல்லை.
அன்றைக்கு கம்யூனிஸ்ட் சகோதர கவுன்சிலர்களோடும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான். அதனால்தான் என்னவோ என்னை கட்சி அரசியலில் இருந்து இறைவன் விலக்கி வைக்க வேண்டும் என்று நினைத்து விட்டான் போலும். எதுவுமே நம்முடைய முடிவிலே மட்டும்தான் நம்முடைய பயணம் தொடர்கிறதா என்று கேட்டால் என்னைப் பொறுத்தளவில் நிச்சயமாக இல்லை.
நாம் ஒரு திசையில் பயணிப்போம் என்று நினைப்போம். அந்த திசையை நோக்கி சென்று கொண்டிருப்போம். அதே தான் நம்முடைய முழு வாழ்வும் என்கின்ற நிலை இருக்கும். ஆனால் கால சூழலும் இறைவனுடைய விருப்பமும் வேறாக இருக்கும். பங்களாதேஷ்க்கு எக்ஸ்போர்ட் செய்து கொண்டிருந்த நேரத்தில் நான் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று நினைக்கவே இல்லை. அரசியல் ஈடுபாடு என்பது எனக்கு எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருந்தது.
பள்ளியிலே படிக்கின்ற போது மாணவர் தலைவனாக தேர்தலில் நின்று வெற்றி பெற்றேன். அவினாசி சுந்தரமூர்த்தி நாயனார் அருள் எனக்கு இல்லாமல் போயிருந்தால் நான் இந்த இடத்திலே உங்கள் முன்பாக நிற்பதற்கான வாய்ப்பே நிச்சயமாக சத்தியமாக இல்லை.
என்னுடைய ஜாதகத்தை ஒருவர் பார்த்து சொன்னார். நீ இரண்டு முறையாவது பாராளுமன்ற உறுப்பினர் ஆவாய் என்று. அவரது வாழ்க்கை முழுவதும் தொழில் ஜோசியம் அல்ல. அவர் அரசியலில் ஒரு பொறுப்பிலே இருக்கிறார். அவர் சொன்னதும் உடனே எனக்கு சிரிப்பே நீக்கவில்லை. நான் சார்ந்து இருக்கிற இயக்கத்திலே நான் ஒரு முறை கவுன்சிலர் ஆனாலே பெரியது என்று சொன்னேன். இன்றைக்கு அவர் உயிரோடு இல்லை. ஆனால் அவர் சொன்ன வாக்குப் பலித்திருக்கிறது. காங்கயத்தை சேர்ந்த நாவிதர் ஒருவர் எனது ஜாதகத்தை பார்த்து விட்டு நீங்கள் எந்த காரணத்தை கொண்டும் அரசியலை விட்டு விலகி விடாதீர்கள் என்றார். அரசியலில் ஏற்றத்தாழ்வுகள் வரத்தான் செய்யும்.
எம்.ஜி.ஆர். போல மக்களிடத்திலே செல்வாக்கு பெற்ற தலைவர் என்று சொன்னால் எனக்கு தெரிந்து யாரும் இல்லை. வாழ்க்கையில் ஒருவன் பிறந்து விட்டான் என்று சொன்னால் அவன் இறக்கின்ற வரை உழைக்க வேண்டும் என்பதுதான். நான் என்னுடைய தகப்பனாரோடு பல நேரங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருப்பேன். அவர் சொன்னது ஒன்று என்னுடைய மனதில் என்றைக்கும் ஆழமாக பதிந்திருக்கிறது. அவர் ஒருமுறை என்னிடத்தில் சொன்னார். எவ்வளவு வசதி வந்தாலும் எவ்வளவு அதிகாரம் உன்னிடத்தில் வந்தாலும் சாப்பிடுகிறவரை நீ ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இறைவன் உனக்கு தருகின்ற உணவு உழைக்காமல் வரக்கூடாது. ஒருவர் தலைவராக உயர்கிறார் என்று சொன்னால் அவரிடத்தில் ஏதாவது ஒரு பண்பு இருந்தால் மட்டும்தான் அவர் தலைவராக உருவாக முடியும். நான் சார்ந்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மிக எதிரானது என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இப்பொழுது தான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் அல்ல . ஆனால் கலைஞர் கருணாநிதி இடத்தில் எனக்கு ஒன்று பிடிக்கும். எந்த நேரத்திலும் உழைப்பை நிறுத்தாத ஒரு தலைவர் . தோல்வியைப் பற்றி துவண்டு விடாமல் அவர் தொடர்ந்து உழைத்தார். கடுமையாக முயற்சிக்காமல் யாராலும் உயர்ந்த இடத்திற்கு வர முடியாது.
தொடர்ந்து உழைத்தால் தொடர்ந்து உயரலாம். குறிக்கோளை நிர்ணயம் செய்து கொண்டு அதை நோக்கி பயணம் செய்ய வேண்டும், சத்தியமும் தர்மமும் அந்த பயணத்தில் இருக்க வேண்டும். அடுத்தவரை வீழ்த்துவதை விட தான் உயர வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.
திருப்பூர் பின்னலாடைக்கு எத்தனையோ சரிவுகள் வந்துள்ளது. ஆனால் இன்றைய சரிவு நம் கையில் இல்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன நினைக்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏற்றுமதி இதைவிட 2 மடங்காகும் நாள் விரைவில் வரும். அதுவரை நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று பேசினார்.
- சிறுத்தையின் உடலில் சிறிய கீறல் காயங்கள் மட்டுமே இருந்த நிலையில் உடனடியாக சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
- சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொழுமம் வனச்சரக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறியது.
அந்த சிறுத்தை வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆண்டிப்பட்டி பழனிசாமி என்பவரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியில் சிக்கியது. அதில் இருந்து வெளியே வர முடியாமல் நீண்ட நேரமாக போராடியது.
இது குறித்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் கோவை கால்நடை மருத்துவர் வெண்ணிலா மற்றும் ஓய்வு மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினர் கம்பி வேலியில் சிக்கியிருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
பின்னர் சிறுத்தையை மீட்டு பார்த்ததில் சிறுத்தையின் உடலில் சிறிய கீறல் காயங்கள் மட்டுமே இருந்த நிலையில் உடனடியாக சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிறுத்தை ஆரோக்கியமாக இருந்த நிலையில் கூண்டில் அடைக்கப்பட்டு உடுமலை அருகே உள்ள அமராவதி வனச்சரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
- கந்தப்பகவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம், கே. தொட்டிபாளையம்,
திருப்பூர்:
கே.வி.முதலிபாளையம் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி முதலிபாளையம், நல்லூர், பழவஞ்சிபாளையம், சிட்கோ, பொன்னாபுரம், பூலுவப்பட்டி, பாரப்பாளையம், செட்டிப்பாளையம், மண்ணரை, சாணார்பாளையம், ஆர்.வி.இ. நகர், பிரபு நகர், மணியக்காரன்பாளையம், பெரியபாளையம், விஜயாபுரம், மானூர், கோல்டன் நகர், கூலிபாளையம், செவந்தாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
இதேபோல் பல்லகவுண்டம்பாளையம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் விஜயமங்கலம், பகளாயூர், புலவர்பாளையம், கள்ளியம்புதூர், வீர சங்கலி, பல்லகவுண்டம்பாளையம், கூனம்பட்டி, மாச்சாபாளையம், ஆலம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பகவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம், கே. தொட்டிபாளையம், புத்தூர்பள்ளபாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கயம் பாளையம் மற்றும் பழனிகவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
மேற்கண்ட தகவலை ஊத்துக்குளி மின்பகிர்மான செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.
- ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து சேலம் வர திட்டமிட்டு பயணித்துள்ளார்.
திருப்பூர்:
ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஆம்னி பஸ், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்னத்தேகூர் அருகே சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 20 பயணிகள் உடல் கருகி பலியாகினர். இதில் திருப்பூரை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர், உடல் கருகி பலியான தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பூர் பூலுவப்பட்டி தோட்டத்துபாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன்கள் ஜெயபிரகாஷ், யுவன் சங்கர் ராஜா (வயது 23). மொபட்டில் சென்று காய்கறி வியாபாரம் செய்யும் ராஜா, மிகவும் கஷ்டப்பட்டு தனது இரு மகன்களையும் படிக்க வைத்தார்.
ஜெயபிரகாஷ் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பி.எஸ்சி. படிப்பு முடித்த யுவன் சங்கர்ராஜா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனியார் மருந்து கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்திலேயே திருப்பூருக்கு பெற்றோரை காண வந்தார்.
அதன்பின் மீண்டும் ஐதராபாத் சென்று பணிபுரிந்து வந்தார். நீண்ட தூரத்தில் பணியாற்றிய அவர் தமிழக பகுதியிலும் வேலை தேடினார். இதைத்தொடர்ந்து சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். இதற்கான நேர்காணலுக்கு யுவன் சங்கர் ராஜா அழைக்கப்பட்டார்.
இதற்காக அவர் ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து சேலம் வர திட்டமிட்டு பயணித்துள்ளார். ஆம்னி பஸ்சின் 3-ம் நம்பர் இருக்கையில் இருந்த அவர் தீ விபத்தில் உடல் கருகி பலியானார். யுவன்சங்கர் ராஜா இறப்பு செய்தி கேள்விப்பட்டதும், அவரது பெற்றோர் கதறி துடித்தனர். உடனடியாக உறவினர்களுடன் கர்னூல் மாவட்டத்துக்கு சென்றனர்.
யுவன் சங்கர் ராஜாவின் இறப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரது பெற்றோரிடம் ரத்தம் பெறப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்பிறகே அவரது உடல் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த 7 நாட்களில் 12.66 அடி நீர்மட்டம் அதிகரித்து உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகிற பாலாற்றின் குறுக்கே திருமூர்த்தி அணை கட்டப்பட்டுள்ளது. 60 அடி உயரம் கொண்ட இந்த அணைக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகள், ஓடைகள் நீராதாரமாக உள்ளன.
இதைத்தவிர அணையின் உயிர்நாடியாக அப்பர் நீராறு, லோயர்நீராறு, சோலையாறு, ஆனைமலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியார், அப்பர் ஆழியார் உள்ளிட்ட பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட (பி.ஏ.பி.) தொகுப்பு அணைகளும் திகழ்கின்றன.
இந்த அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வருகிறது. திருமூர்த்தி அணையின் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த அணையை ஆதாரமாக கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த 18-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக பஞ்சலிங்க அருவி பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், அணையில் அடைக்கலமாகி நீர்வரத்தை அதிகரிக்க செய்துள்ளது.
பருவமழை தொடங்கிய நாளான கடந்த 18-ந்தேதி காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 38.15 அடியாக இருந்தது. ஆனால் இன்று காலை 50.81 அடியாக அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த 7 நாட்களில் 12.66 அடி நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் கடல்போல் அணை காட்சி அளிக்கிறது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி பாலாறு, காண்டூர் கால்வாய், தோணியாறு ஆகியவை மூலம் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
எனவே திருமூர்த்தி அணை, தனது முழு கொள்ளளவை எட்டும் சூழல் நிலவுகிறது. இதனையடுத்து கரையோர கிராம மக்களின் பாதுகாப்பு கருதி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அணையில் இருந்து பாலாற்றில் தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கையில் நீர்வளத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
- தொடர் மழை காரணமாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
- திருப்பூர் மாநகரில் தினமும் சுமார் 750 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
திருப்பூர்:
திருப்பூர் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இரவு வரை பெரும்பாலான இடங்களில் இடைவிடாது சாரல்மழை பெய்து கொண்டே இருந்தது. குளு, குளுவென வானிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருமூர்த்தி மலைக்கு வந்த பக்தர்கள், அமணலிங்கேசுவரர் கோவில் அருகே குளித்து விட்டு, மும்மூர்த்திகளை தரிசனம் செய்தனர். தொடர் மழையால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 988 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 883 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
90 அடி உயரம் கொண்ட அந்த அணையில், இன்று காலை நிலவரப்படி 73 அடியாக தண்ணீர் உள்ளது. இதனால் தற்போது அணை கடல் போல் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதையொட்டி அணைக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல் திருமூர்த்தி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 60 அடி உயரம் கொண்ட அந்த அணையில் 46.21 அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் மாவட்டத்தில் ஆங்காங்கே உள்ள குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையானது காலை 8 மணிக்கு மேலும் நீடித்தது. இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் மணீஷ் நாரணவரே உத்தரவிட்டார்.
8 மணிக்கு மேல் விடுமுறை விடப்பட்டதால் அதற்கு முன்னதாக பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டனர். விடுமுறை விடப்பட்டதால் மீண்டும் பள்ளிக்கு சென்று குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். இதனால் பெற்றோர்கள்-மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
தொடர் மழை காரணமாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
திருப்பூர் மாநகரில் தினமும் சுமார் 750 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், பொதுமக்கள் நள்ளிரவு வரை பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். இதன் காரணமாக அனைத்து வீதிகளிலும் பட்டாசு குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன.
தொடர்மழை காரணமாக துப்புரவு பணியாளர்களால் முழுமையாக குப்பையை அகற்ற முடியவில்லை. இருந்தபோதிலும் முடிந்த அளவுக்கு மழையில் நனைந்தபடி குப்பை அள்ளும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.
- நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- எங்கள் வீடுகளில் உள்ள சிறுவர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.
திருப்பூர்:
திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ளது நஞ்சராயன் நகர் பகுதி. நஞ்சராயன் குளத்தை ஒட்டி அமைந்துள்ள சாலை வழியாக இந்தப் பகுதிக்கு செல்லும் பாதை உள்ளது. இந்த குடியிருப்பு பகுதி நூற்றுக்கணக்கான மனையிடங்களுடன் கடந்த 30 ஆண்டுக்கு முன்பே அமைக்கப்பட்டது.
4 பிரதான வீதிகளும் 12 குறுக்கு வீதிகளிலும் வீடுகள் அமைந்துள்ளன. இதன் அருகே அமைந்துள்ள நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பறவைகள் இங்கு வலசை வருகின்றன. வலசை வரும் பறவைகள் பட்டாசு, வெடிகள் ஏற்படுத்தும் அதிக ஒலியால் அச்சமுறும். அதன் இயல்பு பாதிக்கப்படும் என்பதால், இங்கு வசிக்கும் மக்கள் தீபாவளியின்போது பட்டாசுகளை முற்றிலும் தவிர்த்து விடுகின்றனர்.
இந்த ஆண்டும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
பறவைகள் நலன் கருதி பட்டாசு வெடிப்பதில்லை. எங்கள் வீடுகளில் உள்ள சிறுவர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களும் இதை ஏற்றுக்கொண்டனர். பறவைகளுக்காக எங்கள் சிறுவர்கள் இதை தியாகம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தீபாவளி, சாத் பண்டிகை, சட்டமன்ற தேர்தல் ஒன்றுசேர வருகிறது.
- ஒருமாதம் விடுமுறையில் சொந்த மாநில செல்ல தயாராகி வருகிறார்கள்.
பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் நிறைந்த திருப்பூரில் பனியன் மற்றும் அதனை சார்ந்த உப நிறுவனங்களில் பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பணிபுரிகின்றனர். ஆண்டு முழுவதும் திருப்பூரில் பணியாற்றும் இவர்கள் தீபாவளி, தசரா, சாத் பண்டிகை, ஹோலி உள்ளிட்ட பண்டிகைகளின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
அவ்வாறு செல்லும் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களில் 10 நாட்கள் முதல் 2 வாரம் வரை தங்கி இருந்து மீண்டும் திருப்பூர் திரும்புவது வழக்கம். அந்த வகையில் வருகிற 20-ந்தேதி தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
அவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்குள் திருப்பூர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பீகார் மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த மாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்புவது இன்னும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பீகார் மாநிலத்தில் 2 கட்டமாக நவம்பர் 6 மற்றும் 11-ந்தேதிகளில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திருப்பூரில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வந்தாலும் பீகார் தொழிலாளர்கள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் வரை பணிபுரியலாம் என கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு செல்லும் அவர்கள் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவினை செலுத்தி திருப்பூர் திரும்ப வாய்ப்புள்ளது. மேலும் சிலர் பீகார் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திருப்பூர் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
- ஜனநாயகத்தை காக்க சர்வாதிகாரத்தை ஒழிக்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும்.
- அ.தி.மு.க. மாபெரும் கூட்டணியை அமைக்கும்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., தமிழகத்தின் மக்கள் உரிமையை பெற்றுத்தரக்கூடிய கட்சி. கரூர் சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டால் மு.க.ஸ்டாலினுக்கு என்ன தயக்கம். த.வெ.க., தொண்டர்களை பொய் வழக்குகளை போட்டு மிரட்டுகிற செயல்களில் மு.க.ஸ்டாலின், காவல்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த வண்டி வெகுகாலம் ஓடாது.
த.வெ.க., தொண்டர்களை கொடுமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டால் அதற்கு அ.தி.மு.க., குரல் கொடுக்கும். கோவையில் ரூ.1635 கோடியில் பெரிய பாலத்தை தொடங்கி வைத்துள்ளனர். 4 ஆண்டு காலத்துக்கு முன்னரே வேலை எல்லாம் முடிந்து விட்டது.
4 ஆண்டுகளாக இறங்குதளம் அமைக்கும் வேலையும், பெயிண்ட் அடிக்கும் வேலையும் தான் செய்திருக்கிறார்கள். இந்த பாலத்தை கொண்டு வந்தது அ.தி.மு.க., என்று மக்கள் அறிவார்கள். வழக்கம் போல மு.க.ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி, தான் செய்தது போல காட்டுவது வேடிக்கை, நகைச்சுவை.
ஜனநாயகத்தை காக்க சர்வாதிகாரத்தை ஒழிக்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும். மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்.
அ.தி.மு.க. மாபெரும் கூட்டணியை அமைக்கும். அ.தி.மு.க. கூட்டத்தில் த.வெ.க.வினர் வந்தது கூட்டணிக்கு பிள்ளையார் சுழி என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். அதில் இருந்து நீங்களே புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
- கடந்த 5 ஆண்டுகளில் ரூ.500 கோடியாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி ரூ.5,200 கோடியை தாண்டியது.
- உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகள் கடும் போட்டியாக மாறின.
ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்தியாவுக்கு போட்டியாக மாறியிருந்த வங்கதேசம் கடந்த 2017ம் ஆண்டு முதல் உள்நாட்டு சந்தையிலும் போட்டியை உருவாக்கியது. ஜி.எஸ்.டி., அமலான பின், கட்டுப்பாடு தளர்ந்து படிப்படியாக வங்கதேச ஆடை இறக்குமதி அதிகரித்தது.
முன்னணி பிராண்டடு நிறுவனங்கள், வங்க தேசத்தில் இருந்து ஆடைகளை உற்பத்தி செய்து நம் நாட்டில் விற்பனை செய்தன. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.500 கோடியாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி ரூ.5,200 கோடியை தாண்டியது. இதன் எதிரொலியாக உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகள் கடும் போட்டியாக மாறின.
இதற்கிடையே வங்கதேசத்தில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு நிலைமை தலைகீழாக மாறியது. இந்திய பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், அந்நாட்டின் தரைவழி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன் எதிரொலியாக அந்நாட்டில் இருந்து ஆயத்த ஆடை இறக்குமதி குறைந்தது.முன்னணி பிராண்டடு நிறுவனங்களும், வங்க தேசத்துடன் வர்த்தகம் செய்ய முடியாது என உணர்ந்து உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுடன் கரம் கோர்த்தன. அதன்படி திருப்பூரில் இயங்கும் முன்னணி நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ், ஜோடியாக், வி.மார்ட் உள்ளிட்ட பிராண்டடு நிறுவனங்களின் ஆர்டர்கள் வரத்தொடங்கி உள்ளன.
இது குறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சண்முக சுந்தரம் கூறுகையில், "உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி சீராக இயங்கி வருகிறது. பெரிய சவாலாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி கட்டுக்குள் வந்துவிட்டது. கடந்த 4 மாதங்களாக ஆடை இறக்குமதி குறைந்ததால், உள்நாட்டு சந்தைகளில் திருப்பூர் ஆடைகளின் தேவை அதிகரித்துள்ளது. வங்கதேசத்துக்கு ஆர்டர் கொடுத்து வந்த முன்னணி பிராண்டடு நிறுவனங்கள் நேரடியாக மீண்டும் திருப்பூருக்கே ஆர்டர் கொடுக்க துவங்கியுள்ளன என்றார்.
- தேசிய ஜனநாயக கூட்டணி 2026ல் ஆட்சியை தமிழகத்தில் அமைக்கும்.
- ஒரு தொகுதியில் கூட தி.மு.க., ஜெயிக்க கூடாது. குப்பை முதல் அனைத்திலும் ஊழல்.
ஜி.எஸ்.டி., வரி நீக்கம் மற்றும் குறைப்பு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக., சார்பில் அரிசி கடை வீதி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தையும், தமிழையும் மோடி என்றும் விட்டுக் கொடுத்ததில்லை. தமிழுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார். ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் பெருமளவு விலை குறைந்துள்ளது. மத்திய அரசு நிதி வழங்காமல் வஞ்சனை செய்கிறது என தி.மு.க. அரசு குற்றச்சாட்டு தெரிவிக்கிறது. ஆனால் வரி பகிர்வு 50 சதவிகிதம் வழங்கப்பட்ட பின்னரும் மத்திய அரசின் பகிர்வில் இருந்து மேலும் 41 சதவீதத்தை வழங்குகிறது. இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு.
டாஸ்மாக் நடத்தி குடும்பங்களை சீரழித்து வருகின்றனர். மேலும் 10 ரூபாய் பாலாஜி வாங்கும் 10 ரூபாயையும் சேர்த்துக் கொள்கின்றனர். வரி வசூலிக்கும் முறையை சீரமைத்ததால் 13 சதவீதம் தமிழக வரி வருவாய் உயர்ந்துள்ளது. எத்தனை வரி வருவாய் கொடுத்தாலும் நாம் வாழ்வது குப்பைக்கு மத்தியில் தான். கவுன்சிலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வேலை செய்வதே கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி 2026ல் ஆட்சியை தமிழகத்தில் அமைக்கும்.
மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். 200 தொகுதி அல்ல 2 தொகுதி கூட ஜெயிக்க முடியாது. தமிழக மக்கள் உங்கள் வேஷத்தை பார்த்து வருகின்றனர். கரூரில் மக்கள் துயரத்தை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. திட்டமிடப்பட்டு கலவரம் செய்ய ஏதோ நடைபெற்று உள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தி.மு.க., அரசு தோல்வி அடைந்துள்ளது. தோட்டத்து விவசாயிகள் அச்சத்தில் வாழ வேண்டிய நிலை உள்ளது.
பெண்கள், முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதால் ஒரு தொகுதியில் கூட தி.மு.க., ஜெயிக்க கூடாது. குப்பை முதல் அனைத்திலும் ஊழல். மின் கட்டணம் கட்ட முடியாமல் சிறு நிறுவனங்கள் தவித்து வருகின்றனர்.
திராவிட மாடல் என்பது மக்கள் நல அரசு அல்ல, மோடியை எதிர்த்து பேச வேண்டும் என்பதே., பா.ஜ.க., அ.தி.மு.க., கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. உங்களை வீட்டுக்கு அனுப்ப ஏற்படுத்தப்பட்ட கூட்டணி இது. ஒரு குடும்பத்திற்கு சொந்தமான கட்சி கிடையாது. அடிமட்ட தொண்டர் கூட மேடைக்கு வர முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.






