என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

    அவினாசி:

    அவினாசி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி, அவினாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பிராக்கியாபாளையம், சீனிவாசபுரம், முத்துச்செட்டிபாளையம், காமராஜ் நகர், மடத்துப்பாளையம், சேயூர் சாலை, வ.உ.சி. குடியிருப்பு, கிழக்கு, மேற்கு, மற்றும் வடக்கு ரதவீதிகள், அவினாசி கைக்காட்டி புதூர், சக்தி நகர், ராயம்பாளையம், எஸ்.பி. அப்பேரல் மற்றும் குமரன் காலனி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

    மேற்கண்ட தகவலை அவினாசி மின் வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க., நிறைவேற்றவில்லை.
    • மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூரில் இன்று அ.தி.மு.க. முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் வீடு, வீடாக சென்று விடியா ஆட்சிக்கு, உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்கிற பிரசார விளக்கக் கூட்டம் நடத்தி, தி.மு.க. ஆட்சியின் அவலங்களை தாய்மார்களிடம் எடுத்து கூறி வருகிறோம்.

    கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஆகி உள்ளது. இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    எங்கு பார்த்தாலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கே பயமாக இருப்பதாக தாய்மார்கள் தெரிவிக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க., நிறைவேற்றவில்லை. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.

    எங்கள் கூட்டணி, அ.தி.மு.க., தலைமையில் ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விரைவில் வெளியேறும். பின்னர் படிப்படியாக மற்ற கட்சிகளும் வெளியேறும். த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒன்றும் தெரியாது என்றார்.

    • இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
    • கடந்த 6 மாதங்களாக ஏற்றுமதியாளர்கள் கவலையில் இருந்தனர். இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    திருப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2-வது முறையாக பதவி ஏற்ற பிறகு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பில் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

    அந்தவகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 25 சதவீதம் கூடுதல் வரியை கடந்த ஆண்டு (2025) ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி அமல்படுத்தினார். அதன் பின்னர், இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாத காரணத்தால், அந்த அதிருப்தி காரணமாக மேலும் 25 சதவீதம் அபராதம் விதித்து 50 சதவீதமாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி உயர்த்தினார்.

    இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். 50 சதவீத வரி விதிப்பால் திருப்பூரில் ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்தனர்.

    திருப்பூரில் ஆண்டுக்கு ரூ.50ஆயிரம் கோடிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அதில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு அமெரிக்காவுக்கு ஆடைகள் அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக ரூ.15 ஆயிரம் கோடி ஆடை வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

    எனவே வரி விவகாரத்தில் சுமூக தீர்வு காண வேண்டும், அமெரிக்க வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய அரசு பஞ்சு இறக்குமதி வரி குறைப்பு உள்ளிட்ட சில சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் திருப்பூர் ஆடை வர்த்தகம் அமெரிக்காவை நம்பியே இருப்பதால் வரியை குறைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். இல்லையென்றால் திருப்பூர் ஆடை வர்த்தகம் முற்றிலும் முடங்கும். எனவே மத்திய அரசு இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து வரியை குறைக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்த நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் நேற்று தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.

    அதன்படி அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தலைவர்(ஏ.இ.பி.சி.) சக்திவேல் கூறுகையில்,

    அமெரிக்காவின் வரி குறைப்பு மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். கடந்த 6 மாதங்களாக ஏற்றுமதியாளர்கள் கவலையில் இருந்தனர். இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பாரத பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் ஆகியோருக்கு எங்களது சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு ரூ.15000 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த வரிக்குறைப்பின் காரணமாக அமெரிக்காவுக்கான ஏற்றுமதி இந்த வருடமே மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,

    இந்த வரிகுறைப்பு திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு மிக்க மகிழ்ச்சியான செய்தியாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தான். குறிப்பாக பெனால்டி வரியை முற்றிலுமாக குறைத்து. அடிப்படை வரியிலும் 7 சதவீதம் குறைத்து 18 சதவீதமாக குறைத்து இருப்பது நமது போட்டி நாடுகளான வங்காளதேசம், வியட்நாம், இந்தோனேசியா நாடுகளை விட குறைவான வரி விதித்து இருப்பதால்ஆயத்த ஆடை தொழிலுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். இந்த வரி குறைப்பு காரணமாக ஆய்த்த ஆடை ஏற்றுமதி 2030 ஆம் ஆண்டுக்குள் 2 மடங்காக அதிகரிக்கும்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா அமைப்பின் தலைவர் எம்.பி.முத்து ரத்தினம் கூறுகையில்,

    அமெரிக்காவின் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இதனால் திருப்பூர் பின்னலாடைத்தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றி.

    திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி:-

    இந்திய-ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்த சமயத்தில், அமெரிக்காவும் இந்தியாவுடன் வரிச்சலுகை ஒப்பந்தம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். அந்த கனவு இன்று நினைவாகிவிட்டது. திருப்பூர் இனிமேல் மின்னல் வேகத்தில் முன்னேறும் காலம் உறுதியாகிவிட்டது. இதற்கு ஒத்துழைத்து உதவிய மத்திய அரசுக்கும், அமெரிக்காவுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான சைமா அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.பாலச்சந்தர்:-

    திருப்பூர் பின்னலாடைத்தொழிலுக்கு நல்ல செய்தியை மத்திய அரசு வழங்கியுள்ளது. நிச்சயம் இது தொழில் துறையினருக்கு புத்துணர்ச்சியை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போதுள்ள தொழில் நிலையில் இருந்து பல மடங்கு வளர்ச்சியை நாம் காணப்போகிறோம். ஐரோப்பிய யூனியனை தொடர்ந்து அமெரிக்காவும் இந்தியாவுடன் கைகோர்த்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

    திருப்பூர் காஜா பட்டன் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருப்புசாமி:-

    கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு காரணமாக திருப்பூர் தொழில் சற்று நலிவடைந்து காணப்பட்டது. தற்போது இந்த வரிக்குறைப்பு அறிவிப்பால் ஜாப் ஒர்க் தொழில் துறையினர் நிச்சயம் மகிழ்ச்சி அடைவர். ஏற்றுமதியும், உள்நாட்டு தொழிலும் நல்ல வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை. இனி வேலைவாய்ப்புகள் அதிக அளவில் பெருகும் என்று நம்புகிறோம். இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு தையல் நூல் வியாபாரிகள் சங்கம்:-

    திருப்பூர் தொழில் துறையினருக்கு இந்த ஆண்டு சிறப்பாக விடிந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது தற்போது நினைவாகியுள்ளது. அதேபோல் அமெரிக்காவும் ஒத்துழைப்புடன் வரிவிதிப்பில் சற்று இறங்கி வந்துள்ளது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் நல்ல வளர்ச்சி பெறக்கூடிய காலம் ஏற்பட்டுள்ளது. இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்றார்.

    அதே நேரம் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரி தொடருமா? என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. அந்த வரியை குறைக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 2 ஆண்டுகளாக பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருவது தெரிய வந்தது.
    • முறையான ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி முத்துநகர், மீனம்பாறை ரோடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருவதாக வீரபாண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அங்கு வேலை செய்த ஷேரீப், ஷோகாக், லீட்டன், ரகீர் ஆகியோர் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது முத்துநகர் பகுதியில் வடமாநில தொழிலாளர்களுடன் தங்கி இருந்து கடந்த 2 ஆண்டுகளாக பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருவது தெரிய வந்தது.

    மேலும் அவர்களிடம் மேற்கு வங்க மாநிலத்தில் குடியிருப்பவர்கள் போல் போலி ஆதார் கார்டுகள் இருந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவர்கள் அனைவரும் முறையான ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கறிக்கோழி வளர்ப்பிற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.20 வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கூலி உயர்வு தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடந்தது. இதில் அரசு அலுவலர்கள், விவசாய சங்கத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்திருந்த தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டியும், சட்டை மற்றும் சேலைகளில் கருப்பு பேட்ச் அணிந்தும் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் கூட்டத்தை துவங்கி வைத்ததும் பேசிய விவசாயிகள், கறிக்கோழி பண்ணை கூலி உயர்வு தொடர்பாக அறவழியில் போராடிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரை கைது செய்ததை கண்டித்தும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோரிக்கைகளை முன்வைத்தும் கண்ணில் கருப்பு துணி கட்டி வந்ததாகவும், தமிழக அரசு உடனடியாக கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பரமசிவம் கூறுகையில்,

    தமிழகம் முழுவதும் கடந்த 1-ந்தேதி முதல் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பிற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.20 வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கறிக்கோழி வளர்ப்பிற்கு தற்போது வரை 6 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இது தொடர்பாக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கைது செய்து சிறையில் அடைத்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கூலி உயர்வு தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவித்தார். 

    • உள்ளே சென்று பார்த்தபோது ஒவ்வொரு நிறுவனத்திலும் வைக்கப்பட்டிருந்த பணம் மட்டும் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
    • போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கல்லூரி சாலை அணைப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பின்னலாடை மற்றும் உப நிறுவனங்கள் என அடுத்தடுத்து 4 நிறுவனங்களின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

    வழக்கம் போல நிறுவனத்தில் பணிக்கு வந்த ஊழியர்கள் பனியன் நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் இதே போல அடுத்தடுத்த 3 நிறுவனங்களின் பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே பொருட்கள் சிதறி கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ஒவ்வொரு நிறுவனத்திலும் வைக்கப்பட்டிருந்த பணம் மட்டும் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கையில் இரும்பு ராடு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நள்ளிரவில் சுற்றித்திரிவதும் பின்னர் பூட்டுகளை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் 15 வேலம்பாளையம் போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் கையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு முகமூடி கொள்ளை யர்களை கண்டுபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2,500 பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்கள், 20,000 க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் உள்ளன.
    • கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.45 ஆயிரம் கோடி ஏற்றுமதி வருவாயை எட்டியுள்ளது.

    திருப்பூர்:

    ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம். சுப்பிரமணியன் கூறியதாவது:-

    இந்திய ஆயத்த ஆடைத் தொழில் என்பது 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. அவர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பெண்கள். திருப்பூர் இந்தியாவின் வேலைவாய்ப்பு சார்ந்த ஏற்றுமதி வளர்ச்சியின் முதுகெலும்பாக உருவெடுத்துள்ளது. இங்கு 2,500 பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்கள், 20,000 க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் உள்ளன.

    கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.45 ஆயிரம் கோடி ஏற்றுமதி வருவாயை எட்டியுள்ளது. சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாக நடைமுறைகளின் மிக உயர்ந்த தரநிலைகளை தொழில்கள் கடைபிடிப்பதன் மூலம், இது உலகளவில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    இருந்தபோதிலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தொடர்ச்சியான கட்டணத் தடைகள் போட்டியிடும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் போட்டித்தன்மையை தொடர்ந்து பாதிக்கின்றன. இந்த சவாலை உணர்ந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் அமைய வலியுறுத்தி வந்தது.

    இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அனைத்து ஆடை தயாரிப்புகளுக்கும் வரியில்லாமல் வர்த்தகம் செய்ய முடியும்.

    பெரிய அளவிலான வேலைவாய்ப்பை நிலைநிறுத்துவதற்கும், சிறு, குறு நடுத்தர நிறுவனங்களின் அடிப்படையிலான உற்பத்திக் குழுக்களை வலுப்படுத்துவதற்கும், 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உள்ள ஐரோப்பிய யூனியன் சந்தையில் இந்தியாவின் தடத்தை கணிசமாக விரிவுபடுத்துவதற்கும் இத்தகைய முடிவு இன்றியமையாததாக இருக்கும்.

    ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியாவின் ஆடை ஏற்றுமதியில் திருப்பூர் ஏற்கனவே 30 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது, இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது திருப்பூர் ஜவுளி மற்றும் ஆடைத் துறைக்கு முன்னேற்றமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த தேர்தலில் பெறப்பட்ட மனுக்களுக்கு எந்தவிதமான தீர்வும் காணப்படவில்லை.
    • தி.மு.க. என்ற திமிங்கலம் அனைத்து கட்சிகளையும் விழுங்கி வருகிறது.

    திருப்பூர்:

    இந்து மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் திருப்பூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

    தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்றைய தின கூட்டத்தில் ஊழல் இருக்காது, எனது ஆட்சியில் ஊழலை அனுமதிக்க மாட்டேன் என பேசி உள்ளார். லஞ்ச ஊழல் இல்லாத ஆட்சி என்பது வெற்றுப்பேச்சு .

    தி.மு.க. எல்லா சாதனைகளையும் செய்து விட்டதாக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிக்கிறார். இது மிகப்பெரிய பொய். சாராய விற்பனை மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதன்மையாக உள்ளது. அவரின் குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் தொழில்கள் நம்பர் ஒன்னாக உள்ளது. நிம்மதியாக வீட்டில் உறங்குங்கள். மக்கள் உங்களை இந்த தேர்தலில் தோற்கடித்து வீட்டில் தூங்க வைப்பார்கள்.

    கடந்த தேர்தலில் பெறப்பட்ட மனுக்களுக்கு எந்தவிதமான தீர்வும் காணப்படவில்லை. இந்த முறை உங்கள் கனவை நனவாக்குகிறோம் என்று சொல்கிறார்கள். மக்களை ஏமாற்றுவது மட்டும்தான் தி.மு.க.வின் வேலை. பிப்ரவரி 15-ந்தேதி இந்து மக்கள் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தி.மு.க. அரசு அகற்றப்பட வேண்டும். அதற்காகத்தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் இன்று தி.மு.க.வில் ஐக்கியமாகிவிட்டது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் தி.மு.க.வில் போட்டியிட்டு தி.மு.க.வாக மாறிவிட்டார். ம.தி.மு.க.வும் தி.மு.க.விடம் ஐக்கியம் ஆகிவிட்டது. தி.மு.க. என்ற திமிங்கலம் அனைத்து கட்சிகளையும் விழுங்கி வருகிறது என்றார். 

    • திருப்பூரில் கொங்கு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் செருப்பு வீசியது தெரிய வந்தது.

    திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பூரில் கொங்கு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கவிஞர் வைரமுத்து வந்தார். அப்போது கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    செருப்பு கவிஞர் வைரமுத்து மீது படாமல் கூட்டத்தை தாண்டி சென்று விழுந்தது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் செருப்பு வீசியது தெரிய வந்தது.

    செருப்பு வீசிய பெண் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • அமெரிக்க வரி விதிப்பு தொடர்பான சவால்கள் காரணமாக ஏற்றுமதி சற்று பாதிக்கப்பட்டுள்ளது.
    • ஜப்பான் நாட்டுடன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

    திருப்பூர்:

    இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், உலகளாவிய வர்த்தக பிரச்சனைகளுக்கு இடையிலும் கடந்த டிசம்பர் மாதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. அதன்படி இந்திய ரூபாய் மதிப்பில் கடந்த டிசம்பர் மாதம் ரூ.13 ஆயிரத்து 550 கோடியே 64 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்துள்ளது. முந்தைய ஆண்டு ரூ.12 ஆயிரத்து 424 கோடியே 17 லட்சத்து நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 9 சதவீதம் வளர்ச்சியாகும்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.1 லட்சத்து ஆயிரத்து 87 கோடியே 19 லட்சத்துக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.94 ஆயிரத்து 940 கோடியே 59 லட்சத்துக்கு நடந்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.5 சதவீதம் வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ளது என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) தெரிவித்துள்ளது.

    அமெரிக்க வரி விதிப்பு தொடர்பான சவால்கள் காரணமாக ஏற்றுமதி சற்று பாதிக்கப்பட்டுள்ளது. அந்த இழப்பை ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்ட நாடுகளுடன் ஈடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஜப்பான் நாட்டுடன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அமெரிக்காவுக்கான ஏற்றுமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 1.6 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது என்று ஏ.இ.பி.சி. தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் வரி பிரச்சனை இருந்தபோதிலும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சி சாதகமாக காணப்படுகிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதியில் இந்தியாவில் திருப்பூர் மாநகரம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதனால் திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் முந்தைய ஆண்டைவிட அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர்.

    • திருப்பூர் மாநகரில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகளில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
    • மாநகர முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், நாளை தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகை தரும் அவர், நாளை மாலை காரில் திருப்பூர் பிச்சம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வருகிறார். பின்னர் இரவு அங்கு தங்குகிறார். நாளைமறுநாள் (வியாழக்கிழமை) காலை திருப்பூர் பி.என்.ரோடு கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள தனது உறவினர் வீட்டு புதுமனை புகுவிழா மற்றும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்.

    அதன்பின்னர் மதியம் 2 மணி அளவில் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, கோவை கொடிசியாவில் நடக்கும் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து அன்று மாலை விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

    துணை ஜனாதிபதி திருப்பூர் வருகையையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேரடி மேற்பார்வையில் இரண்டு துணை கமிஷனர்கள், 4 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் மாநகரில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகளில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்கு யாராவது சந்தேகப்படும்படியாக தங்கி உள்ளார்களா? என விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகப்படும்படியாக யாராவது தங்கி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கவும் லாட்ஜ் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் மாநகர முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே துணை ஜனாதிபதி தங்கியிருக்கும் இடம், நிகழ்ச்சி நடைபெறும் இடம், அவர் செல்லும் வழித்தடம் ஆகியவற்றில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார். 

    • ஆக்கிரமிப்பு குறித்து அப்பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
    • வழக்கில் சம்பந்தப்பட்ட இடம் வருவாய் துறைக்கு சொந்தமானது என கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராக்கியாப்பட்டி பகுதியில் 2.8 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை ஆக்கிரமித்து குமரன் குன்று என்ற பெயரில் முருகர், விநாயகர், சிவலிங்கம், நந்தி உள்ளிட்ட சன்னதிகள் கொண்ட செல்வமுத்து குமாரசாமி கோவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இந்த கோவிலை அவிநாசி தாசில்தார் சந்திரசேகர் , டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் இன்று காலை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.

    இதையறிந்த இந்து முன்னணியினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் பலர் இடிக்க வேண்டாமென கண்ணீர் வடித்தனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    பின்னர் போலீசார், பொதுமக்களை வளாகத்தை விட்டு அப்புறப்படுத்தினர். அப்போது போலீசார் -பொதுமக்களிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த ஆக்கிரமிப்பு குறித்து அப்பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இடம் வருவாய் துறைக்கு சொந்தமானது என கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவிலை அகற்ற வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்ட போது, இரு தரப்பினர் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கோவிலை வருவாய்த்துறையினர்- போலீசார் பாதுகாப்புடன் அகற்றி உள்ளனர். 

    ×