என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு- 75 அடியை நெருங்கிய அமராவதி அணை நீர்மட்டம்
    X

    திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை காணலாம்.

    உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு- 75 அடியை நெருங்கிய அமராவதி அணை நீர்மட்டம்

    • பஞ்சலிங்க அருவியில் குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகள், ஐயப்ப பக்தர்கள் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
    • அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லி முத்தான் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பஞ்சலிங்க அருவியில் இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    பஞ்சலிங்க அருவியில் இன்று காலை குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகள், ஐயப்ப பக்தர்கள் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    மேலும் தொடர் மழையால் 90 அடி உயரமுள்ள உடுமலை அமராவதி அணை நீர்மட்டம் 75 அடியை நெருங்கி உள்ளது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இதே போல கல்லாபுரம் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நேரடி பாசன வசதி பெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

    தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர் வரத்து இருக்கும்.

    அமராவதி அணை ஏற்கனவே நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு காரணமாகவும் தென்மேற்கு பருவமழை முடிவடைந்ததாலும் நீர்மட்டம் குறைந்து வந்தது. 70 அடிக்கும் கீழ் நீர்மட்டம் சென்ற நிலையில் வடகிழக்கு பருவ மழை பெய்ய துவங்கியதும் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது.

    தற்போது படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது . மேற்கு தொடர்ச்சி மலையில் மிதமான அளவு மழை பெய்து வருகிறது.

    அணையில் இன்று நீர்மட்டம் 74.37 அடியாக உள்ளது. 672 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 25 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் அமராவதி அணை முழு கொள்ளளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அமராவதி அணை நீர்மட்டம் 75 அடியை எட்டியதால் பொதுமக்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×