என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. தலைமையில் நல்ல கூட்டணி அமைந்தால் தி.மு.க.விற்கு போட்டியாக அமையும் - டி.டி.வி. தினகரன்
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதை பழக்கத்தால் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது.
- விஜயகாந்த் வருகை போல விஜய் வருகை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
திருப்பூர்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநகர மாவட்ட செயலாளர் விசாலாட்சி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதை பழக்கத்தால் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. அப்படி இருந்தும் தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதியில் வெற்றி பெற்றது உறுத்திக்கொண்டுள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்த சில கட்சிகள் பிளவுபட்டுள்ளது. த.வெ.க. வரவு என எல்லாவற்றையும் ஆலோசித்து தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் இதனை கண்காணிக்காவிடில் தி.மு.க.வை வீழ்த்த முடியாது.
த.வெ.க. தலைமையில் பெரும் கூட்டணி அமைந்தால் இந்தியா கூட்டணியை 3-வது இடத்திற்கு தள்ள வாய்ப்பு உள்ளது. தி.மு.க., ஆட்சியில் பல துறைகளில் ஊழல் முறைகேடு உள்ளது. எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தார்கள். தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்தால் தான் மிருக பலத்துடன் உள்ள தி.மு.க.வை வீழ்த்த முடியும். வெற்று விளம்பர ஆட்சியாக உள்ளது. அதனை எதிர்க்கட்சிகள் சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
அ.தி.மு.க.வில் ஒரு சிலரின் சுயநலத்தால் விழுதுகள் போன்ற பலரை நீக்கி விட்டு நாங்கள் துரோகி என்கிறார்கள். 99 சதவீத தொண்டர்கள் மன வருத்தத்திலும் வேதனையிலும் உள்ளனர். சரியான முடிவு எடுக்காவிடில் தேர்தல் பாடம் தரும். செங்கோட்டையன் எங்களோடு நட்பாக உள்ளார். அதற்காக எங்களுடன் தான் பயணிக்க வேண்டும் என்பதில்லை. அவர் விருப்பம் போல் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.
நான் எதார்த்தத்தை நாட்டு நடப்பு பற்றி பொறாமை இல்லாமல் சொல்கிறேன். த.வெ.க. வளர்ந்து வரும் கட்சியாக தெரிகிறது. விஜயகாந்த் வருகை போல விஜய் வருகை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் பல மக்கள், பெண்கள் ஆதரவை பெற்றவர். முதலில் எங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறோம். விஜய் தலைமையில் நல்ல கூட்டணி அமைந்தால் ஆளும் தி.மு.க.விற்கு போட்டியாக அமையும்.
3-வது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தால் தான் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்பதால் தான் அவர்கள் கூட்டணிக்கு சென்றோம். தொண்டர்களின் முடிவால் தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளோம். பா.ஜ.க. எங்களிடம் நட்போடு பேசினாலே மிரட்டுவது போல பரப்பி வருகின்றனர். அ.ம.மு.க. எந்த கூட்டணியில் இருந்தாலும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் முன்னாள் மேயர் விசாலாட்சி போட்டியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.






