search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல்

    • கா்நாடகத்தில் இஸ்லாமியா்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு திரும்ப அளிக்க வேண்டும்.
    • இஸ்லாமியா்கள் மீதான விரோதப்போக்கினை ஜனநாயகரீதியாக எதிா்கொள்வோம்.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த அருள்புரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் 23வது மாநில பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில மேலாண்மைக் குழுத் தலைவா் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எம்.எஸ்.சுலைமான், பொதுச்செயலாளா் ஆா்.அப்துல்கரீம், செயலாளா் என்.அல்அமீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம் வருமாறு:-

    கா்நாடகத்தில் இஸ்லாமியா்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு திரும்ப அளிக்க வேண்டும். தமிழகத்தில் 2 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருப்பதை நீக்க வேண்டும். ஹிஜாப் அணிய தடை, காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து 370 பிரிவு நீக்கியது, ஹலால் இறைச்சி தடை உள்ளிட்ட பா.ஜ.க அரசின் அத்துமீறல்களை வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாமியா்கள் மீதான விரோதப்போக்கினை ஜனநாயகரீதியாக எதிா்கொள்வோம்.

    தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கு நடைமுறையில் இருக்கும் கல்வி, வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. 3.5 சதவீத இடஒதுக்கீடு பல துறைகளில் முறையாக வழங்கப்படுவதில்லை. மதம் மாறி இஸ்லாத்தை தழுவியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. தமிழக அரசு இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை அனைவரும் தெளிவாக அறியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையில் அனைத்து வழிமுறைகளையும் அரசு நிறைவேற்றி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

    Next Story
    ×