search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்தம் - திருப்பூர் மாவட்டத்தில்    79,373 பேர் விண்ணப்பம்
    X

    வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்தம் - திருப்பூர் மாவட்டத்தில் 79,373 பேர் விண்ணப்பம்

    • மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
    • ஆன்லைன் விண்ணப்பங்கள் அதிகரிக்க இவையே முக்கிய காரணம்.இவ்வாறு கூறினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் சுருக்க முறை திருத்தத்துக்காக மொத்தம் 79,373 வாக்காளர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 51.8 சதவீதம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

    கடந்த மாதம் 9-ந்தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு சுருக்கமுறை திருத்த பணிகள் துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.நேரடியாகவும் ஆன்லைனிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தத்துக்கு வாக்காளர்கள் விண்ணப்பித்தனர். கடந்த மாதம்4 நாட்கள் சிறப்பு முகாமும் நடத்தப்பட்டது. சுருக்கமுறை திருத்தப்பணிகள் நிறைவடைந்தன.

    மாவட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்களுக்காக மொத்தம் 79 ஆயிரத்து 373 வாக்காளர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 35,177 பேர், நீக்க 25,953 பேர், திருத்தங்களுக்காக 18,243 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்ட வாக்காளர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர். மாவட்ட மொத்த விண்ணப்பதாரர் 79,373 பேரில் 51.8 சதவீதம் பேர் அதாவது 41,140 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நேரடியாக 38,233 பேர் மட்டுமே விண்ணப்பம் அளித்துள்ளனர். குறிப்பாக பட்டியலில் பெயர் நீக்கத்துக்கான விண்ணப்பங்கள் அதிக எண்ணிக்கையில் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 25,953 பேர் பெயர் நீக்கத்துக்காக விண்ணப்பித்துள்ள நிலையில் ஆன்லைனில் மட்டுமே 21,888 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தத்துக்காக நேரடி விண்ணப்பங்களே அதிகம் பெறப்பட்டுள்ளன. பெயர் சேர்த்தலுக்கான மொத்தம் 35,177 விண்ணப்பங்களில் 70.46 சதவீதம் அதாவது 24,789 விண்ணப்பங்கள் நேரடியாக பெறப்பட்டுள்ளன.10,388 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். வருகிற ஜனவரி 5-ந் தேதி வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

    இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:- மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. நேர கட்டுப்பாடு இல்லாததாலும், எங்கிருந்தாலும் விண்ணப்பிக்க முடியும் என்பதாலும் nvsp போர்ட்டல், Voter Helpline வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வாக்காளர் அதிக ஆர்வம்காட்டியுள்ளனர்.

    ஆதார் இணைப்பின்போது வாக்காளர் விண்ணப்பங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பெரும்பாலானோர் கருடா ஆப் மூலமாக பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் விண்ணப்பங்கள் அதிகரிக்க இவையே முக்கிய காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×