என் மலர்
தஞ்சாவூர்
- 16 கோவில்களில் இருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தனர்.
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை ஆகியவை சார்பில் 91-ம் ஆண்டு கருட சேவை பெருவிழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து, 26 பெருமாள்கள் கருடசேவை விழா நேற்று (திங்கட்கிழமை) நடந்தது.
இதனைத் தொடர்ந்து, 16 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி பெருவிழா என்கிற நவநீத சேவை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இதில் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள், நரசிம்மப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், கல்யாண வெங்கடேசப் பெருமாள், மேல ராஜவீதி நவநீத கிருஷ்ணன், விஜயராமர் சன்னதி, எல்லையம்மன் தெரு ஜனார்த்தனப் பெருமாள், கரந்தை யாதவ கண்ணன், கீழ ராஜவீதி வரதராஜப் பெருமாள், தெற்கு ராஜவீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராம சுவாமி பெருமாள், மகர்நோம்புச்சாவடி நவநீத கிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதப் பெருமாள், படித்துறை வெங்கடேசப் பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆகிய 16 கோவில்களில் இருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தனர்.
பின்னர் அங்கிருந்து 16 பெருமாள்களும் புறப்பட்டு கீழராஜவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஒரே நேரத்தில் 16 சுவாமிகள் அவர்களுக்கு சேவை சாதித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். விழாவில் நாளை (புதன்கிழமை) விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.
- மக்களின் வரவேற்பை பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி புலம்பி கொண்டிருக்கிறார்.
- எடப்பாடி பழனிசாமியின் நினைப்பு முழுவதும் பெட்டியிலேயே தான் இருக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
* உட்கட்சி, கூட்டணி பிரச்சனையை மறைக்கவே அரசியல் அறிக்கைகளை எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார்.
* மக்களின் வரவேற்பை பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி புலம்பி கொண்டிருக்கிறார்.
* எடப்பாடி பழனிசாமி வெளியிடும் அறிக்கைகள் அரைவேக்காட்டு தனமாக உள்ளன.
* எடப்பாடி பழனிசாமியின் நினைப்பு முழுவதும் பெட்டியிலேயே தான் இருக்கிறது.
* மக்கள் அளித்த மனுக்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
* மக்களின் குறைகளை போக்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும். 10,000 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும் என்றார்.
- 56 ஆயிரம் விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது.
- டெல்டா அல்லாத மாவட்டங்களில் சாகுபடிக்காக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
தஞ்சாவூர் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் அவர் பேசியதாவது:-
* சோழநாட்டு காற்றை சுவாசித்தாலே கம்பீரம் கிடைக்கிறது.
* தஞ்சாவூரையும் கலைஞர் கருணாநிதியையும் பிரித்து பார்க்க முடியாது.
* ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணின் மைந்தர் கலைஞர் கருணாநிதி.
* கலைஞர் கருணாநிதியின் வழியின் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வில் தஞ்சை வந்துள்ளேன்.
* டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி சிறப்பு திட்டத்திற்கு ரூ.82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடிக்காக ரூ.132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 56 ஆயிரம் விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது.
* டெல்டா அல்லாத மாவட்டங்களில் சாகுபடிக்காக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* தி.மு.க ஆட்சியில் தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
* பட்டுக்கோட்டையில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
* மேட்டூர் மற்றும் கல்லணைகள் குறித்த நேரத்தில் திறக்கப்பட்டுள்ளன.
* தஞ்சாவூரில் ரூ.70 கோடி மதிப்பில் மினி டைடல் பார்க் திறக்கப்பட்டுள்ளளது.
* கார், குறுவை, சொர்ணவாரி சிறப்பு தொகுப்பு திட்டத்தில் 8 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.
* தஞ்சை மண்ணில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளன.
* தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு கூடுதல் மானியம் ஒதுக்கப்படும்.
* வெண்ணாறு, வெட்டாறு பிரியும் இடத்தில் ரூ.42 கோடியில் பாலம் அமைக்கப்படும்.
* கல்லணை கால்வாய் சாலை ரூ.40 கோடி செலவில் அகலப்படுத்தப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- நாட்டிலேயே சீர்திருத்த திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு தான்.
- உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தமிழ் ஒலிக்க வேண்டும்.
திருவையாறு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரின் இல்ல திருமணவிழாவில் பங்கேற்று மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். இதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்று தந்தவர் பேரறிஞர் அண்ணா.
* நாட்டிலேயே சீர்திருத்த திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு தான்.
* தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்றுத்தந்தவர் கலைஞர் கருணாநிதி.
* உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தமிழ் ஒலிக்க வேண்டும்.
* உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என தொடர்ந்து கோருகிறோம்.
* குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- முதல்வர் மருந்தகம் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவையின் தரம் குறித்தும் விரிவாக ஆராய்ந்தார்.
தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மருந்துகளின் இருப்பு நிலை, வழங்கும் நடைமுறை மற்றும் பொதுமக்கள் வருகை குறித்து பணியாளர்களிடம் நேரடியாக விவரங்களை கேட்டறிந்தார்.
மக்கள் நலன் கருதி குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட முதல்வர் மருந்தகம் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவையின் தரம் குறித்தும் விரிவாக ஆராய்ந்தார்.
இத்திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், அதன் மூலம் மருத்துவச் செலவுகள் கணிசமாக குறைத்து வருவதாகவும், அந்த மருந்தகம் பணியாளர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
- தஞ்சை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
- கல்லணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார்.
அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவது பற்றி அரசு உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவதோடு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
அதன்படி 2 நாள் பயணமாக இன்றும் நாளையும் (15, 16-ந்தேதிகள்) தஞ்சை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் கல்லணைக்கு இன்று வந்து சேருகிறது. இந்த நிலையில் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் சென்றார். அங்கு சுற்றுலா மாளிகையில் அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.
பின்னர் அவர் சுற்றுலா மாளிகையில் இருந்து 2 கி.மீ. தூரம் ரோடு ஷோவாக பழைய பஸ்நிலையம் வரை பொதுமக்களை சந்தித்தவாறு, மனுக்களை பெற்று கொண்டு சென்றார்.
அதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைத்தார்.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.
- தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.
இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (ஞாயிற்றுகிழமை), நாளைமறுநாள் (திங்கள்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
எனவே, தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கல்லணை பகுதியில் உள்ள சாலைகள், பாலங்கள் ஆகியவை வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளன.
- தஞ்சை மாவட்டத்தில் ரூ.26.28 கோடி மதிப்பீட்டில் 291 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பூதலூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதகுகளை இயக்கி தண்ணீரை திறந்து விட்டு மலர்தூவினார்.
இதையடுத்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையை திறந்து விட்டது போல் கல்லணையில் இருந்தும் டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.
இதற்காக தஞ்சாவூர் வருகை தரும் முதலமைச்சர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், ரகுபதி, மெய்யநாதன், தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம், டெல்டா மாவட்ட கலெக்டர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், விவசாயிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கல்லணையில் தூய்மைப்படுத்தும் பணிகள், வண்ணம் பூசும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கல்லணை கால்வாய் தலைப்பு பகுதியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள புனரமைப்பு பணிகளும் அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் பாலங்கள் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
கல்லணை பாலங்களில் அமைந்துள்ள மாமன்னன் கரிகாலன், ஆங்கில பொறியாளர் ஆர்டர் காட்டன், காவிரி அம்மன், அகத்தியர், மாமன்னன் ராஜராஜன், விவசாயி, மீன்பிடிக்கும் தொழிலாளி ஆகிய சிலைகள் வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக பூஜை செய்யப்படும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வெளியேறும் மதகு பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில், உள்பகுதியில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோவில், பூங்காவில் அமைந்துள்ள விநாயகர் கோவில் ஆகிய கோவில்கள் வண்ணம் பூசப்பட்டு தண்ணீரை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
மேலும் கல்லணை பகுதியில் உள்ள சாலைகள், பாலங்கள் ஆகியவை வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளன.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 114.89 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 85.553 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து 6,836 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் 1.93 லட்சம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 1.72 லட்சம் ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 0.61 ஆயிரம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 97 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தஞ்சை மாவட்டத்தில் ரூ.26.28 கோடி மதிப்பீட்டில் 291 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலமாக 1,379 கிலோமீட்டர் தூரம் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
- அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
தஞ்சாவூா்:
தஞ்சை மாவட்டத்தில் 15, 16 ஆகிய 2 நாட்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கருணாநிதி சிலை திறப்பு, மாவட்ட செயலாளர் இல்லத் திருமண விழா, அரசு சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் இன்று தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமையும் இடத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் மண்டல பொறுப்பாளருமான கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிலை அமையும் இடத்திற்கான மாதிரி வரைபடத்தை பார்த்தனர். சிலையை சுற்றிலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்தனர். தொடர்ந்து செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
தஞ்சைக்கு வருகிற 15, 16 தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் 15-ந்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு மதியம் வருகிறார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் கல்லணை வருகிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மாலையில் மேட்டூர் அணையை தொடர்ந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார்.
பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் வருகிறார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பின்னர் பழைய பஸ் நிலையம் அருகில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவ சிலையை திறந்து வைக்கிறார்.
மறுநாள் 16-ந்தேதி மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதையடுத்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கான தேதியை அரசு அறிவிக்கும்.
- கல்லூரிகளில் ராகிங் கொடுமையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சைக்கு வருகிற 15,16 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கருணாநிதி சிலை திறப்பு, கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இந்த நிலையில் இன்று தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் முதலமைச்சரை வரவேற்கும் விதமாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டன.
பின்னர் அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
முதலமைச்சர் தஞ்சை வருகையை முன்னிட்டு மத்திய, தெற்கு, வடக்கு மாவட்டங்கள் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக முதலமைச்சரை வரவேற்கும் விதமாக இன்று தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. மொத்தம் தஞ்சை மாநகரில் 3 இடங்களில் ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன.
மேட்டூர் அணையில் இருந்து இன்று முதலமைச்சர் தண்ணீர் திறந்து விட்டுள்ளார். டெல்டா மாவட்டங்களில் விதைநெல், இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. தட்டுபாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பாகவே ஆறு, குளம், வாய்க்கால்கள் தூர்வாருவது குறித்து முடிவு செய்யப்பட்டு தூர்வாரப்பட்டன. கடைக்கோடி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கான தேதியை அரசு அறிவிக்கும்.
கல்லூரிகளில் ராகிங் கொடுமையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர், துறை தலைவர்கள், மாணவர் பிரதிநிதிகள், பெற்றோர் சங்க நிர்வாகிகள் என ஐவர் அல்லது ஏழு பேர் கொண்ட கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாணவர்கள் கல்லூரி வருவது முதல் கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வது வரை கண்காணிப்பர். மேலும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. எனவே பள்ளி, கல்லூரிகளில் ராகிங் குற்றம் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியலில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது தொடர்ந்து வந்த கோரிக்கை. அதனை தடையில்லாமல் நிறைவேற்றி வருகிறோம். கடந்த 4, 5 ஆண்டுகளில் தேர்வு எழுத முடியாமல் விடுப்பட்ட மாணவர்களும் தொடர்ந்து படிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடைநிற்றல் என்பது தொழில்கல்வி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக்கிலும் இருக்க கூடாது என்பதற்காகவும், இடைநிற்றல் இல்லாத தொழில்கல்வி இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் இடைநிற்றல் என்பது உயர்கல்வியிலும் இல்லை என்ற நிலையை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அப்போது, ரூ.2-க்கு மருத்துவம் பார்த்தார்.
- பட்டுக்கோட்டை பகுதியில் பத்து ரூபாய் மருத்துவர் என மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பொதுமக்களுக்கு ரூ.10-க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ரத்தினம் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 96.
பட்டுக்கோட்டை சீனிவாசபுரம் பகுதியில் வசித்தவர் ரத்தினம். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர்.
1929-ல் பிறந்த ரத்தினம், 1959-ல் மருத்துவர் பணியைத் தொடங்கினார். அப்போது, ரூ.2-க்கு மருத்துவம் பார்த்தார். பின்னர், ரூ.10-க்கு மருத்துவம் பார்த்து வந்தார். இதனால் பட்டுக்கோட்டை பகுதியில் பத்து ரூபாய் மருத்துவர் என மக்கள் மத்தியில் பிரபலமானார்.
கடைசி வரை கட்டணத்தை உயர்த்தாமல் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இந்நிலையில் அவரது மறைவு பட்டுக்கோட்டை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது உடல் நாளை (ஜூன் 8) அடக்கம் செய்யப்படவுள்ளது. தினகரன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- தஞ்சை பெரிய கோவிலில் இருந்து யானை மீது தீர்த்தக்குடம் வைத்து மகா மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்வு நடந்தது.
- பக்தர்கள் தீர்த்தக்குடத்தை தலையில் சுமந்தவாறு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை சீனிவாசபுரம் சேவப்பநாயக்கன்வாரி வடகரையில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது.
விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், புண்யாக வாஜனம், பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து, தஞ்சை பெரிய கோவிலில் இருந்து யானை மீது தீர்த்தக்குடம் வைத்து மகா மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்வு நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடத்தை தலையில் சுமந்தவாறு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, மாலை முதல்கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி நடைபெற உள்ளது. முறையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, பூர்ணாஹூதி முடிவடைந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு ஆகி கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசத்திற்கு கும்பாபிஷேகமும் தொடர்ந்து, கற்பக விநாயகர், மகா மாரியம்மன், முனீஸ்வரர், நவக்கிரக பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட உள்ளது.
முடிவில் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை சீனிவாசபுரம் சேவப்பநாயக்கன்வாரி தெருவாசிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.






