search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலர் லேப் நிறுவனத்தில் ரூ.21 லட்சம் சுருட்டிய ஊழியர்- 4 வீடுகளை வாடகைக்கு எடுத்து உல்லாச வாழ்க்கை
    X

    கலர் லேப் நிறுவனத்தில் ரூ.21 லட்சம் சுருட்டிய ஊழியர்- 4 வீடுகளை வாடகைக்கு எடுத்து உல்லாச வாழ்க்கை

    • வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்திற்குள் சத்தியசாய் ரூ.21 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
    • கையாடல் விபரம் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதால் உடன் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் சிலருக்கும் அவ்வப்போது பணம் கொடுத்து சரி கட்டி உள்ளார்.

    போரூர்:

    சாலிகிராமம், குமரன் காலனி, 2-வது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். தொழில் அதிபரான இவர் பிரபல கலர் லேப் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    கடந்த மாதம் 28-ந் தேதி இவரது வீட்டில் ரூ1½ கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் மற்றும் ரொக்க பணம் ரூ.13½ லட்சம் கொள்ளை போனது.

    இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்து என்பவரை விருகம்பாக்கம் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை-பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சந்தோஷ்குமாரின் கலர்லேப் நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை முதலில் போலீசார் அழைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது கோடம்பாக்கம் கிளையில் கணக்காளராக பணிபுரிந்து வந்த சத்தியசாய் (31) என்பவர் விசாரணைக்கு வராமல் தனது செல்போனை "சுவிச் ஆப்" செய்து விட்டு திடீரென தலைமறைவாகி விட்டார்.

    இதனால் சந்தேகமடைந்த தொழில் அதிபர் சந்தோஷ் குமார், அந்த கிளையின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தார். அப்போது ஊழியர் சத்தியசாய், ரூ.21 லட்சத்தை கையாடல் செய்து இருப்பது தெரிந்தது.

    வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்திற்குள் அவர் ரூ.21 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    உதவி கமிஷனர் பாரதி ராஜா, இன்ஸ்பெக்டர் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் வீராசாமி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் கோயம்புத்தூரில் பதுங்கி இருந்த சத்யசாயை கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.50ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள், பறிமுதல் செய்யப்பட்டது.

    சத்யசாயிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சத்யசாய் கலர் லேப்புக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து தனது "கூகுள் பே" மற்றும் "போன் பே" மூலமாக பணத்தை பெற்று நூதனமான முறையில் மோசடி செய்துள்ளார்.

    மேலும் கையாடல் விபரம் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதால் உடன் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் சிலருக்கும் அவ்வப்போது பணம் கொடுத்து சரி கட்டி உள்ளார்.

    இந்த நிலையில் உரிமையாளர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கு தொடர்பாக போலீசார் ஊழியர்களை ஒவ்வொருவராக அழைத்து விசாரணை நடத்தி வருவதை அறிந்த சத்யசாய் தனது மோசடி விபரம் அம்பலமாகிவிடும் என பயந்து தலைமறைவானார்.

    இதனால் அவர் தானாக போலீசில் சிக்கிக் கொண்டார். அவர் ஏற்கனவே தேனியில் ரூ.6 லட்சம் மோசடி செய்த வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்கு சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சத்யசாய் 4 இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து உள்ளார். ஓரினசேர்க்கையில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், வளசரவாக்கம் பகுதியில் உள்ள "மசாஜ் சென்டர்" ஒன்றிற்கு சென்ற போது அங்கு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் சத்யசாய் அடிக்கடி நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்து உள்ளது. கைதான சத்யசாய் மீது போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    Next Story
    ×