search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை-புறநகரில் பரவலாக மழை: பொன்னேரியில் 67 மி.மீட்டர் மழை கொட்டியது
    X

    சென்னை-புறநகரில் பரவலாக மழை: பொன்னேரியில் 67 மி.மீட்டர் மழை கொட்டியது

    • திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை கொட்டியது.
    • திருநின்றவூர் பெரியார் நகர் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இன்று காலை பெய்த கனமழை காரணமாக சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.

    சென்னை:

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென பலத்த மழை கொட்டியது.

    சிறிது நேரம் கனமழையாக கொட்டிய பின்னர் சாரல் மழையாக நீடித்தது.

    எழும்பூர், அரும்பாக்கம், அண்ணாநகர், அயனாவரம், கோயம்பேடு, மதுரவாயல், பெரம்பூர், கொரட்டூர், பூந்தமல்லி, தாம்பரம், பல்லாவரம், பட்டினப்பாக்கம், துரைப்பாக்கம், கோடம்பாக்கம், மாமல்லபுரம், திருப்போரூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

    காலை 8.30 மணி வரை பல இடங்களில் சாரல் மழையாக நீடித்தது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

    மழை காரணமாக முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாததால் கடும் அவதி அடைந்தனர். தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இதே போல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை கொட்டியது. திருநின்றவூர் பெரியார் நகர் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இன்று காலை பெய்த கனமழை காரணமாக சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆவடியில் கனமழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 67 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பூண்டி, தாமரைப்பாக்கம், ஜமீன் கொரட்டூர் பகுதியிலும் கனமழை பெய்தது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்)வருமாறு:-

    பள்ளிப்பட்டு-4

    பொன்னேரி-67

    ஜமீன் கொரட்டூர்-13

    பூந்தமல்லி-3

    பூண்டி-17

    தாமரைப்பாக்கம்-10

    திருவள்ளூர்-8

    ஊத்துக்கோட்டை-3

    ஆவடி-4

    மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு பலத்த இடியுடன் மழை பெய்தது. தொடர்ந்து காலை 9 மணி வரை கனமழை நீடித்தது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர். கனமழையால் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. பக்தர்களின் வாகனங்கள் கோயிலுக்குள் சென்று வரும் தெற்கு பகுதி நுழைவு வாயில், பல மாதங்களாக மூடி கிடப்பதால், இன்று காலையில் கோயிலுக்கு வந்த திருமண கோஷ்டியினர் மற்றும் பக்தர்கள் கிழக்கு வாசலை மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

    அதனால் பக்தர்கள் நடந்து செல்லவும், கார், பைக், ஆட்டோக்களில் வளாகம் உள்ளே சென்று வரவும் அவதிப்பட்டனர்.

    ஒத்தவாடை தெரு, கிழக்கு ராஜ வீதி, கலங்கரை விளக்கம், ஐந்துரதம் சாலை, கோவளம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    Next Story
    ×