search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகம்- கேரளாவை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி
    X

    தமிழகம்- கேரளாவை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி

    • தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த கட்டுமான காண்டிராக்டர்களும் ராஜசேகரிடம் பணம் கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது.
    • சதுரங்கவேட்டை சினிமா பாணியில் ராஜசேகர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

    திருப்பூர்:

    சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் சலீம் (வயது 54). கட்டிட காண்டிராக்டர். இவர் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் கட்டிட கட்டுமான நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். அவர் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 1,000 வீடுகள் கட்டுவதற்கான ஆர்டர் கொடுப்பதாகவும், அதற்காக முன்பணமாக ரூ.50 லட்சத்தை தனது வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்று என்னிடம் கூறினார்.

    அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அவரது வங்கிக்கணக்குக்கு ரூ.50 லட்சத்தை செலுத்தினேன். திருப்பூர் பெருமாநல்லூருக்கு வந்த நான் ராஜசேகருடன், வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டோம். ஆனால் ராஜசேகர், எனக்கு வீடு கட்டுவதற்கான ஆர்டர் எதுவும் வழங்கவில்லை. கடந்த மே மாதம் வரை எனக்கு வீடு கட்டுவதற்கான ஆர்டர் வழங்காததால் பணத்தை திருப்பிக்கேட்டேன். ஆனால் இதுவரை பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். 1,000 வீடுகள் கட்டுவதற்கு ஆர்டர் கொடுப்பதாக கூறி ஏமாற்றி ரூ.50 லட்சத்தை பெற்றுள்ளார். பணத்தை திரும்ப பெற்றுக்கொடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராஜசேகர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இந்த மோசடி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த கட்டுமான காண்டிராக்டர்களும் ராஜசேகரிடம் பணம் கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது. சதுரங்கவேட்டை சினிமா பாணியில் ராஜசேகர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

    இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது. திருப்பூரில் கடன் வழங்கும் நிறுவனம் நடத்தி வந்த ராஜசேகர், திருப்பூரை சேர்ந்த சிவகுமார் என்பவரின் மனைவி கவிதா என்பவருடன் இணைந்து கட்டுமான நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இதன் மூலம் பொதுமக்களை ஏமாற்றினால் விரைவில் மாட்டி விடுவோம். சில லட்சங்கள் மட்டுமே சம்பாதிக்கலாம் என கட்டிட கான்ட்ராக்டர், பொறியாளர்களை ஏமாற்ற திட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி மதுரையில் 25 தொகுப்பு வீடுகளை பெரிய கட்டுமான நிறுவனம் மூலம் கட்டி உள்ளார். அதனை அடிப்படையாக கொண்டு திருப்பூர், மதுரை என பல இடங்களிலும் 1,000 வீடுகளை பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்ட உள்ளதாகவும் அதில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தர உள்ளதாக விளம்பரம் செய்துள்ளார். விளம்பரம் மட்டும் இல்லாது கேரளாவில் உள்ள கட்டுமான நிறுவனங்களை புரோக்கர் மூலம் வரவழைத்து 1000 வீடு 10 ஆயிரம் வீடு கட்ட வேண்டும் என ஆசைவார்த்தைகளை கூறியுள்ளார்.

    15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் தொகுப்பு வீடு ஒன்றில் 3 முதல் 4 லட்சம் லாபம் மட்டுமே கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி உள்ளார். மேலும் தங்களது முதல் புராஜெக்ட் மதுரையில் பெரிய நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளது. தற்போது சிறிய நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளோம்.

    அதோடு கவிதாவின் பெயரில் நிலம் இருப்பதாகவும் அவர் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளரின் உறவினர் என கேரளாவில் இருந்து வந்தவர்களிடம் சொல்ல இவர் கூறியதை கேட்டவர்கள் மெய்சிலிர்த்து கட்டிடம் கட்ட ஒப்புக்கொண்டனர். அப்போது ராஜசேகர் போட்ட கிடுக்கி பிடியில் தங்களை அறியாமல் சிக்கி கொண்டு இன்று வரை பலர் தவித்து வருகின்றனர்.

    அனைத்தும் முடிந்து ஒப்பந்தம் போடும் நேரத்தில் இவ்வளவு பெரிய புராஜெக்ட் செய்கிறோம். உங்களை நாங்கள் எப்படி நம்புவது. பாதியில் பணியை விட்டு போய்விட்டால் என்ன செய்வது? எனவே வைப்புத் தொகையாக முன்பணம் செலுத்துங்கள் என தெரிவித்துள்ளார். இவரது பேச்சை கேட்டு நம்பிய கட்டுமான நிறுவனங்கள் உடனடியாக பணத்தை தயார் செய்து கட்டி உள்ளனர்.

    ஆனால் இவர்கள் கூறியபடி எந்த பணியும் நடைபெறவில்லை. ராஜசேகர் குறிப்பிட்ட இடத்தில் பணி செய்ய முயன்றபோது அது வேறு நபரின் இடம் என்பது தெரியவந்தது. பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து 2 ஆண்டுகளாக பணம் கேட்டு வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து ராஜசேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோடிக்கணக்கான மோசடி பணத்தை கவிதா மற்றும் சென்னையை சேர்ந்த மதிமந்திரம் என்ற 2 பேரிடமும் ராஜசேகர் கொடுத்து வைத்திருப்பதாகவும் அவற்றை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

    கடந்த செப்டம்பர் மாதம் 17-ந்தேதி சிறுவனை கடத்தி சென்ற கட்டுமான கான்ட்ராக்டர் ராகேஷ் தூக்கிட்டு தற்கொலை‌ செய்து கொண்ட சம்பவமும் இந்த ராஜசேகரால் தான் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜசேகரிடம் பணத்தை கொடுத்துவிட்டு தனது தங்கை திருமணத்திற்கு பணம் இல்லாமல் பணத்தை கேட்டு வந்துள்ளார். ராஜசேகர், சிவகுமார், கவிதா என 3பேரும் சேர்ந்து ஏமாற்றியதால் குழந்தையை கடத்தி சென்றுள்ளார். பின்னர் போலீசாருக்கு பயந்து ராகேஷ் தூக்கிட்டு தற்கொலை‌ செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×