search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

    • மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது.
    • அணையின் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளதால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் ஏற்கனவே காவிரியில் வெளியேற்றப்பட்டு தமிழகத்திற்கு வருகிறது.

    இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தொடர்மழை பெய்வதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது.ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலையும் அதே அளவில் வந்தது. இதனால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

    வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் மற்றும் அருவிக்கு செல்லும் நடைபாதையும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மேலும் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கும் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அதன்படி அணையில் இருந்து இன்று காலை 1 லட்சத்து 25 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதில் 23 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாகவும், 1 லட்சத்து 2 ஆயிரம் கன அடி தண்ணீர் 16 கண் மதகான உபரி நீர் போக்கி வழியாகவும், 400 கன அடி தண்ணீர் கால்வாயிலும் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடுவதால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் காவிரியில் குளிக்கவும், துணி துவைக்கவும் தொடர்ந்து தடை நீடிக்கிறது. மேலும் நீர்வரத்து அதிகரித்து வருவதால் அதிகாரிகள் மீண்டும் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய்துறையினர் தண்ணீரில் சிக்குவோரை மீட்க தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி நீர் தேக்கத்தில் 17-வது நாளாக இன்றும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×