search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராசிபுரம் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    ராசிபுரம் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

    • ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் போலீசார், ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முகாமிட்டுள்ளனர்.
    • போலீசாரின் விசாரணைக்குப் பிறகு தான் மாணவர் தற்கொலைக்கான காரணம் தெரியவரும்.

    ராசிபுரம்:

    தேனி மாவட்டம், வெங்கடாஜலபுரத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் சதீஸ் (வயது 21). இவர் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி இ.சி.இ. இறுதியாண்டு படித்து வந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். மாணவர் சதீசும் நேற்று மதியம் சொந்த ஊருக்கு செல்வதற்காக கல்லூரி விடுதியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில் ராசிபுரம் அருகே உள்ள பாலப்பாளையம் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் அவரது கல்லூரி நண்பரான, சேலத்தை சேர்ந்த மாதேஸ் மகன் கலாநிதி (26) என்பவர் வீட்டுக்கு சென்றார். அங்கு இருவரும் சேர்ந்து போதைப் பொருள் உபயோகப்படுத்தியதாக கூறி புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், மாணவர்கள் இருவரும் போதை பொருள் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது. சம்பவ இடம் ராசிபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்டதாக இருந்ததால், சதீஸ் மற்றும் கலாநிதி ஆகியோரை ராசிபுரம் போலீசில் ஒப்படைத்தனர். ராசிபுரம் போலீசார் மாணவர் கலாநிதியின் பெற்றோரை அழைத்து பேசினர். மாணவர் சதீசுக்காக கல்லூரி ஆசிரியர்களை வரவழைத்து பேசினர். பின்னர் மாணவர்கள் இருவரையும் ராசிபுரம் போலீசார் எச்சரித்து அனுப்பி விட்டனர்.

    இந்நிலையில், நேற்று இரவு மாணவர் சதீஸ் மீண்டும் கல்லூரியின் விடுதிக்கு சென்று அவரது அறையில் தங்கி உள்ளார். மற்ற மாணவர்கள் யாரும் அவரது அறையில் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவர் சதீஸ் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி விடுதி வார்டன் கல்லூரி நிர்வாகத்திற்கும், புதுச்சத்திரம் போலீசாருக்கும் தகவல் தந்தார். போலீசார் விரைந்து வந்து சதீசின் உடலை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதீஸ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக சதீசின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் போலீசார், ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முகாமிட்டுள்ளனர். போலீசாரின் விசாரணைக்குப் பிறகு தான் மாணவர் தற்கொலைக்கான காரணம் தெரியவரும்.

    Next Story
    ×