search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பார்வை குறைபாடு உள்ளவர்கள் டிக்கெட் கவுண்டர், நடைமேடைக்கு செல்ல பிரெய்லி வரைபட வசதி
    X

    பார்வை குறைபாடு உள்ளவர்கள் டிக்கெட் கவுண்டர், நடைமேடைக்கு செல்ல 'பிரெய்லி' வரைபட வசதி

    • பிரெய்லி வரை படத்தில் ‘கியூ ஆர் கோடுகள்’ கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஸ்மார்ட் போனில் ஸ்கேன் செய்து தகவல்களை ஒலிக்கச் செய்து, போக விரும்பும் இடத்தின் வழியை தெரிந்துகொள்ளலாம்.
    • பார்வை குறைபாடு உடையவர்களுக்கு, நடைமேடைகளை பாதுகாப்பான இடமாக மாற்ற நடைமேடைகளின் ஓரத்தில் தொட்டு உணரும்படியான டைல்கள் பதிக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை கோட்டத்தில் முதல் முறையாக பார்வை குறைபாடுள்ள பயணிகளுக்கு உதவும் வகையில் பிரெய்லி வரைபடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இவற்றை 'பெருநிறுவன சமூக பொறுப்பு' திட்டத்தின் கீழ் சென்னை சென்ட்ரலில் ரேனால்ட் நிசான் நிறுவனமும், சென்னை எழும்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் நிறுவனமும் அமைத்து உள்ளன.

    இந்த வரைபட வசதி, பார்வை குறைபாடுள்ள பயணிகள், மற்றவர்கள் உதவியில்லாமல் தாங்களே ரெயில் நிலையத்திற்குள் தேவைப்படும் இடங்களுக்கு சென்று அதன் வசதிகளை பயன்படுத்திக்கொள்ள உதவும்.

    மேற்கண்ட ரெயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டுள்ள 3x3 அடி அளவுள்ள இந்த பிரெய்லி வரைபடம் அந்தந்த ரெயில் நிலையங்களின் மேற்பார்வையை அளிக்கும். மேலும் அடிப்படை வசதிகளை பட்டியலிட்டு, பயணிகள் போக விரும்பும் டிக்கெட் கவுண்டர்கள், நடைமேடைகள், பாதசாரி பாலங்கள் மற்றும் பல இடங்களை அடைய வழியை காட்டுகிறது.

    இந்த பிரெய்லி வரை படத்தில் 'கியூ ஆர் கோடுகள்' கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஸ்மார்ட் போனில் ஸ்கேன் செய்து தகவல்களை ஒலிக்கச் செய்து, போக விரும்பும் இடத்தின் வழியை தெரிந்துகொள்ளலாம்.

    பார்வை குறைபாடு உடையவர்களுக்கு, நடைமேடைகளை பாதுகாப்பான இடமாக மாற்ற நடைமேடைகளின் ஓரத்தில் தொட்டு உணரும்படியான டைல்கள் பதிக்கப்பட்டுள்ளன.

    பார்வை குறைபாடுள்ள பயணிகளின் பாதுகாப்புக்காக சென்னை கோட்டம் முழுக்க பாதசாரி பாலங்களின் படிக்கட்டுகளில் பிரெய்லி பொறிக்கப்பட்டுள்ள துருப்பிடிக்காத இரும்பிலான கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பார்வையற்ற பயணிகளுக்கு பிரெய்லி வரைபட பலகை சேவையை பின்வரும் காலங்களில் அரக்கோணம், காட்பாடி, செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய முக்கிய ரெயில் நிலையங்களில் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, அவர்களின் பயணத்தை பாதுகாப்பாகவும், இனிதாகவும் மாற்ற சென்னை கோட்டம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்று சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×