search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலியல் புகாருக்குள்ளான 3 பேரையும் கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது- மகளிர் ஆணையம் உத்தரவு
    X

    பாலியல் புகாருக்குள்ளான 3 பேரையும் கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது- மகளிர் ஆணையம் உத்தரவு

    • ரேவதி ராமச்சந்திரன் மற்றும் துணை இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜர் ஆனார்கள்.
    • மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையை அறிக்கையாக இன்று அல்லது நாளை அரசிடம் தாக்கல் செய்ய உள்ளேன்.

    சென்னை:

    கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது மாணவிகளிடம் அவர் எழுத்துப் பூர்வமாக பல்வேறு தகவல்களை திரட்டினார். மாணவிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு வசதியாக கலாஷேத்ரா இயக்குனரான ரேவதி ராமச்சந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

    இதனை ஏற்று ரேவதி ராமச்சந்திரன் மற்றும் துணை இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜர் ஆனார்கள். அப்போது கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகள் தெரிவித்துள்ள புகார்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது தொடர்பான ஆவணங்களை மகளிர் ஆணைய தலைவி குமரி கேட்டு உள்ளார். இருவரும் ஆஜராகிவிட்டு சென்ற பிகு மகளிர் ஆணைய தலைவி குமரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலாஷேத்ராவில் தங்களிடம் பாலியல் புகார் எதுவும் வரவில்லை என்று இயக்குனர் தெரிவித்தார். கல்லூரியில் மாணவிகள் நலனுக்காக அமைக்கப்பட்டு உள்ள கமிட்டியின் பணி என்ன? அது செயல்படுத்தப்படுவது எப்படி? என்பது தொடர்பாக ஆவணங்களை கேட்டு உள்ளேன். நாளை மறுநாள் யாரிடமாவது கொடுத்து அனுப்பினால் போதும் என்றும், நீங்கள் நேரில் வர தேவையில்லை என்றும் கூறியுள்ளேன். மாணவிகளுக்கு ஆன்லைன் தேர்வு பிடிக்கவில்லை. நேரடி தேர்வையே விரும்புகிறார்கள் என்று கலாஷேத்ரா இயக்குனரிடம் தெரிவித்தேன். அவர் அது தொடர்பாக நடவடிக்கை எடுத்து மாணவிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக கூறி இருக்கிறார்.

    பாலியல் புகாருக்கு உள்ளான 3 நபர்களையும் கலாஷேத்ராவுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளேன்.

    இதுவரை மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையை அறிக்கையாக இன்று அல்லது நாளை அரசிடம் தாக்கல் செய்ய உள்ளேன்.

    இவ்வாறு குமரி தெரிவித்தார்.

    Next Story
    ×