search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளையாட்டு போட்டி சான்றிதழ்கள் மூலம்  கல்வி-வேலைவாய்ப்புகளில் சிறப்பு சலுகை - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேச்சு
    X

    விளையாட்டு போட்டிகளை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்து வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்த காட்சி.  

    விளையாட்டு போட்டி சான்றிதழ்கள் மூலம் கல்வி-வேலைவாய்ப்புகளில் சிறப்பு சலுகை - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேச்சு

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.
    • பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. போட்டியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார். கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் முன்னிலை வகித்தார்.

    இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி பேசியதாவது:- முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகளின் பரிசுத்தொகை இந்த ஆண்டு ரூ.25 கோடி வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.1,000-ம் வழங்கப்படும். மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. கபடி, சிலம்பம், தடகளம், கால்பந்து, கூடைபந்து, இறகுபந்து, மேசைப்பந்து, ஆக்கி, நீச்சல், கிரிக்கெட், கைப்பந்து போட்டிகள் உள்பட பல போட்டிகள் நடக்கிறது. மாவட்ட அளவில் தனிநபர் தடகள பிரிவில் முதலிடம் பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    இந்த போட்டிகளில் பெறும் சான்றிதழ்கள் மூலமாக கல்வி, வேலை வாய்ப்புகளில் சிறப்பு சலுகைகள் பெறலாம். போட்டியில் திறமையானவர்களை கண்டறிவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்த்து தொடர் பயிற்சிகள் வழங்கப்படும். மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×