என் மலர்
சிவகங்கை
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஐந்து விலக்கு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை இருந்தது.
இந்த சிலை சேதமடைந்து காணப்பட்டதால் அதனை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இது தொடர்பாக நகராட்சி கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க. கவுன் சிலர் ஒருவர் சிலையை சீரமைக்கப்போகிறேன் என எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் போலீசார் தலையிட்டு சிலையை மீட்டு வைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ஐந்து விலக்கு பகுதிக்கு வந்தவர்கள் அந்த இடத்தில் எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அங்கிருந்த மார்பளவு சிலையை நள்ளிரவில் யாரோ அகற்றிவிட்டு முழு உருவச்சிலையை வைத்துள்ளனர். இதற்கு எந்த வித அனுமதியும் பெறப்படவில்லை.
பழைய சிலையை அகற்றிவிட்டு புதிய எம்.ஜி. ஆர். சிலை அமைக்கப்பட்ட விவகாரம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சியாமளா (வயது 27) இவர், சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.
அதில், எனக்கும் ஜெயக்குமார் என்பவருக்கும் 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அப்போது 40 பவுன் நகை, ரூ. 5 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டு எங்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் ஜெயக்குமார் மற்றும் உறவினர்கள் சித்ரவதை செய்தனர்.
மேலும் என்னை, பெற்றோர் வீட்டிற்கும் அனுப்பி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி விசாரணை நடத்தி ஜெயக்குமார், அவரது தந்தை காசிநாதன், உறவினர்கள் பானுமதி, ராமகிருஷ்ணன், ராமலிங்கம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கை தாலுகா சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன். இவரது மகன் ராஜகுரு (வயது 18). இவர், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் வயலுக்கு வந்தார். இவர்களுக்கு இடையே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அங்கு வந்த மருதுபாண்டியன் சமரசம் செய்ய முயன்றார்.
ஆனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருதுபாண்டியனை குத்தினார். மேலும் அவரிடம் இருந்த 2 1/2 பவுன் நகையையும் பறித்துச் சென்றதாக சிவகங்கை நகர் போலீசில் மருதுபாண்டியன் புகார் கொடுத்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை தேடி வருகிறார்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில் 38 துப்புரவு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அரசு விடுமுறை அளிக்க வேண்டும், துப்புரவு பணிக்காக புதிதாக பணியில் சேர்ந்த 7 பேருக்கு அலுவலக பணி வழங்காமல் துப்புரவு பணியை வழங்க வேண்டும்.
குப்பை அள்ளுவதற்கான உபகரணங்கள்- சீருடைகள் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தன. ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று துப்புரவு ஊழியர்கள் திடீரென பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 26 பேர் பங்கேற்றனர்.
சிவகங்கை:
சிவகங்கையில் உள்ள பெரியார் நகர், சி.பி. காலனியைச் சேர்ந்தவர் நீதிமான் (வயது 40). இவர் வாரச்சந்தை ரோட்டில் உள்ள ஓட்டலில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு நீதிமான் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டின் அருகே வந்தபோது அங்கு ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.
இதில் கீழே விழுந்த நீதிமானுக்கு முகத்திலும், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு நீதிமான் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிவகங்கை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:
காளையார்கோவில் அருகே உள்ள மறவமங்களம் வேத தெருவைச் சேர்ந்தவர் சங்குமுத்து. இவரது மகன் சரவணன் (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
சில நாட்களாக சரவணனுக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. மருத்துவரிடம் காண்பித்தும் குணமாகவில்லை.
இதையடுத்து சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சரவணன் சிகிச்சை பெற்றார். அங்கு நிலைமை மோசமானதால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாணவன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார்.
காளையார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மறவமங்கலம் கிராமத்தில் கழிவுநீரும், குப்பையும் தேங்கியுள்ளதால் நோய்கள் பரவி வருகின்றன.
அதனை தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 48). இவரது மகள் ரெயில் நிலையம் அருகே தொண்டி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரை அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவர்கள் கேலி, கிண்டல் செய்துள்ளனர். இது குறித்து அந்த மாணவி தந்தை கருப்பையாவிடம் கூறியுள்ளார்.
உடனே அவர் தனது நண்பர் அருள் பாண்டியனுடன் சென்று மாணவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 மாணவர்களும் தனது நண்பர்கள் 2 பேரை அழைத்துக் கொண்டு மீண்டும் கருப்பையா, அருள் பாண்டியனிடம் மோதலில் ஈடுபட்டனர்.
அப்போது 4 பேரும் அருள்பாண்டியனை கத்தியால் குத்தியும், கருப்பையாவை அரிவாளால் வெட்டிவிட்டும் தப்பினர்.
இதில் படுகாயம் அடைந்த அருள்பாண்டியன் ஆபத்தான நிலையில் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 மாணவர்களையும் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 மாணவர்களும் மானாமதுரையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
திருப்புவனம் அருகே பூவந்தியில் உள்ள வட்டார மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும், அவர்களுடன் இருப்பவர்களுக்கும் உரிய அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும், காய்ச்சலுடன் வருவோருக்கு காலதாமதம் இன்றி ரத்த பரிசோதனை செய்து உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சலால் இறந்துபோன பூவந்தி சிறுவன் அமுதன் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி தலைமை தாங்கினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தண்டியப்பன், வீரபாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயராமன், சக்திவேல், அம்பலம், மகாலிங்கம், ராமு உள்பட பலர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்ட உரையாற்றினர்.
சிவகங்கை மாவட்ட பொதுமக்களை நோக்கி மாவட்ட நிர்வாகம் செல்லும் வகையில் ஒரு முன் முயற்சியாக சிவகங்கை மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்ய ஏதுவாக குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.), முகநூல் (பேஸ்புக்), கட்செவி (வாட்ஸ்-அப்) மற்றும் டுவிட்டர் ஆகியவற்றில் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் கீழ்க்கண்ட பொருள்கள் சார்ந்த குறைகளை மேற்கூறிய தள வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம். குடிநீர் வசதி, சுகாதாரம், குப்பை அகற்றுதல், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் வேளாண்மைத் துறை குறித்த தகவல்களைத் தெரிவித்து உடனடி நிவாரணம் பெறலாம். இந்த சேவையை நல்ல முறையில் பொதுமக்கள் பயன்படுத்துமாறு கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.
குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.), கட்செவி (வாட்ஸ்- அப்) மூலம் குறைகளை தெரிவிக்க வேண்டிய எண்: 89033 31077.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மகன் ஜீவானந்தம் (வயது38), கட்டிட தொழிலாளி.
இவர் காரைக்குடி அரியக்குடி பாரதிநகரைச் சேர்ந்த தனது உறவு பெண்ணுடன் பழகி வந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்த அந்த பெண், ஜீவானந்தம் உறவினர் என்பதால் நெருக்கமாக பழகினார். அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் இருந்தனர்.
இந்த நிலையில் ஜீவானந்தம் திடீரென திருமணத்திற்கு மறுத்தார். இதுகுறித்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் அந்த பெண் புகார் செய்தார்.
அதில், தன்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்து ஜீவானந்தம் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இருமுறை கர்ப்பம் அடைந்த தான் அதனை கலைத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது திருமணத்திற்கு ஜீவானந்தம் மறுப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து ஜீவனந்தம் கைது செய்யப்பட்டார்.
திருப்புவனம் அருகே மடப்புரம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவர் மேலூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு இவர் திருப்புவனத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது வைகை ஆற்று பாலத்தை அடுத்த வளைவு பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜாங்கம் சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள சவரக்கோட்டை பகுதியில் காரைக்குடி பர்மா காலனியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் கிளினீக் நடத்தி வந்தார். இவர் மருத்துவம் படிக்காமல் கிளினீக் நடத்தியதாக புகார் வந்தது.
இதையடுத்து சவரக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆல்வின்ஜேம்ஸ் அங்கு சென்று ஆய்வு நடத்திய போது நாகராஜன் பிளஸ்-2 படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆல்வின் ஜேம்ஸ் கொடுத்த புகாரின் பேரில் கல்லல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்தார்.
இதே போல் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்து கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த பாண்டி (49) என்பவர் மருத்துவம் படிக்காமல் கிளீனிக் நடத்தி வந்தார்.
இதுகுறித்து தேவகோட்டை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அதிகாரி ராமு கொடுத்த புகாரின் பேரில் திருவேகம்பத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியாமணி வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்தார்.






