என் மலர்
சேலம்
- அ.தி.மு.க. ஓட்டு எங்கும் போகவில்லை. எங்களுக்குதான் தான் கிடைத்து இருக்கிறது.
- தி.மு.க. அமைச்சர் ரகுபதிக்கும் அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம். அ.தி.மு.க.வை பற்றி பேச அவருக்கு அருகதை கிடையாது.
சேலம்:
சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து இருக்கிறது. இந்த தேர்தல் குறித்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் பல விமர்சனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த தருணத்தில் உங்களை நான் சந்தித்து பேசுகிறேன்.
தேர்தல் பிரசாரத்தை பொறுத்தவரைக்கும் அ.தி.மு.க.வை சேர்ந்த நான் ஒருவர் மட்டும் தான் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் செய்தேன். அதுபோல் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அ.தி.மு.க. கூட்டணி பலம் இல்லை, தி.மு.க கூட்டணி பலத்தில் போட்டியிடுகிறது என விமர்சனம் செய்கிறார்கள். அ.தி.மு.க. இந்த தேர்தலில் 2019 பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 1 சதவீத வாக்குகள் கூடுதலாக பெற்றி இருக்கிறோம். இது அ.தி.மு.க.வுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறோம்.
அ.தி.மு.க. ஓட்டுக்கள் எதிர்கட்சிக்கு சென்று விட்டது என சொல்கிறார்கள். அ.தி.மு.க. ஓட்டு எங்கும் போகவில்லை. எங்களுக்குதான் தான் கிடைத்து இருக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தான் கூடுதல் வாக்குகள் பெற்று இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் அமோக வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்கும்.
கேள்வி: அ.தி.மு.க.வுக்கு ஒரு சில தொகுதிகளில் டெபாசிட் கிடைக்கவில்லையே?
பதில்: ஒரு சில தொகுதிகளில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. அவை கொஞ்சம் காலத்தில் சரி செய்யப்படும்.
கே: பா.ஜ.க. கூட்டணி இருந்திருந்தால் வெற்றி கிடைத்து இருக்குமா?
ப: கூட்டணி இருந்திருந்தால், போயிருந்தால், அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. 2014, 2019, 2024-ல் கூட்டணி மாறி மாறி அமைப்பாங்க. அந்தந்த தேர்தலில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கட்சி கூட்டணி அமையும். 1992-ல் தி.மு.க. 2 இடங்களில் வெற்றி பெற்றது. 1996-ல் அ.தி.மு.க. 4 இடங்களில் வெற்றி பெற்றது. ஆகவே தி.மு.க. அழிந்து போச்சா, அ.தி.மு.க. அழிந்து போச்சா அதெல்லாம் கிடையாது. தி.மு.க. கடந்த காலங்களில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. எனவே மாறி மாறி தான் ஆட்சிக்கு வருவாங்க.
ஆகவே அ.தி.மு.கவுக்கு பின்னடைவு என்பது திட்டமிட்டு பரப்புகின்ற ஒரு பொய்யான செய்தி.
கே: சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கூட்டணிக்கு சேர்த்து இருந்தால்?
ப: இதற்கு மேல் அதை பற்றி பேசி என்ன பிரயோசனம். அரசியலில் வேண்டும் என்று திட்டமிட்டு எல்லோரும் சேர்ந்து ஒரு குழப்பத்தை விளைவித்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பிரிந்து போன பிறகு தான் 1 சதவீதம் ஓட்டுகள் கூடுதலாக கிடைத்து இருக்கிறது.
கே: இனிவரும் காலங்களில் அ.தி.மு.க செயல்பாடு?
ப: இந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்கும்.
தி.மு.க. அமைச்சர் ரகுபதிக்கும் அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம். அ.தி.மு.க.வை பற்றி பேச அவருக்கு அருகதை கிடையாது. அவர் அ.தி.மு.க. வேட்டியை மாற்றி கட்டி போனவர். அவரை அடையாளம் காட்டிய கட்சி அ.தி.மு.க., வேண்டும் என்றே திட்டமிட்டு அவர் அ.தி.மு.க. பற்றி பேசுகிறார்.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க. கூட்டணி விலகி விட்டது. அண்ணாமலையின் கனவு இந்த தேர்தலில் நனவாகவில்லை. அந்த விரக்தியில் அவர் பேசுகிறார். பா.ஜ.க.வுக்கு தனிப்பெருபான்மை கிடைக்காததற்கு தமிழ்நாட்டில் அந்த கட்சியில் உள்ள தலைவர்களை போல் பல தலைவர்கள் இருப்பார்கள். அதனால் தான் அந்த கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.
நான் முதலமைச்சரானபோது என்னன்னவோ தகவல்கள் வந்தது. மூன்று மாதம் இருப்பாரா, நான்கு மாதம் இருப்பாரா என்றனர். ஆனால் நான்காண்டு ரெண்டு மாதம் சிறப்பான ஆட்சி தந்தோம். பிறகு கட்சி இரண்டாகும் என அவதூறு பிரசாரம் செய்தனர். அ.தி.மு.க. தலைவர் காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி தொடர்ந்து தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து வந்தோம். வெற்றி வரும்வரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். வெற்றி பெற்ற பின்னர் தமிழகத்தை மறந்து விடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்பதால்தான் தனித்துப் போட்டியிட்டோம்.
ஆட்சி அதிகாரம் வேண்டுமென்றால் தேசிய கட்சியுடன் நாங்கள் சேர்ந்து இருப்போம். தமிழ்நாட்டு உரிமையை காக்க வேண்டும். தமிழ்நாட்டு உரிமையை காக்கவும் உரிமைகள் பறி போகும்போது தடுக்கவும் பாராளுமன்றத்தில் சுதந்திரமாக செயல்படவும் அ.தி.மு.க. இந்த முடிவை எடுத்தது.
தி.மு.க. கூட்டணி என்ன சாதிப்பார்கள் என பார்க்கத்தானே போகிறோம். பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு செல்வீர்களா என்று கேட்டதற்கு அதை பற்றி இன்னும் சிந்திக்கவில்லை என்றார்.
தொடர்ந்து ஜெயக்குமார் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேராது எனக் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, (கூட்டணியில் சேராதென ஏற்கனவே தான் பேட்டி அளித்த வீடியோவை எடப்பாடி பழனிசாமி காண்பித்தார்) முன்பே நாங்கள் இது குறித்து தெரிவித்துவிட்டோம். அது பற்றி தான் ஜெயக்குமார் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார், என்றார்.
தொடர்ந்து நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது வேட்பாளர்களுக்கு உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் நேரத்தில் எங்களுடன் கூட்டணி அமைத்த அந்த கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்களித்த பொதுமக்களுக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தே.மு.தி.க. மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கூறி உள்ளனரே என்ற கேள்விக்கு, மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என கேட்டு இருக்கிறார்கள். நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள் என்றார்.
பின்னர் அ.தி.மு.க. நிர்வாகிகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தந்ததாக கூறுகிறார்கள் என்று கேட்டதற்கு, அப்படி இல்லை அப்படி இருந்தால் எப்படி ஒரு சதவீதம் வாக்கு அதிகரித்திருக்கும். இந்த தேர்தலில் ஒரு சதவீதம் கூடுதலாக அ.தி.மு.க. வாக்குகள் பெற்றிருக்கிறது அவதூறு பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- தென்மாவட்டங்களில் அ.தி.மு.க.வை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த பல்வேறு தரப்பினர் முயற்சி.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தி.மு.க. கூட்டணிக்காக ஸ்டாலின், உதயநிதி, திருமாவளவன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
* அ.தி.மு.க. கூட்டணியில் நான் மட்டுமே மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தேன்.
* கடந்த தேர்தலை விட அ.தி.மு.க.விற்கு கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளது.
* 2019-ல் தி.மு.க. வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 33.52, 2024-ல் பெற்ற வாக்குகள் 26.93.
* கடந்த தேர்தலை விட சுமார் 6 விழுக்காடு வாக்குகளை தி.மு.க. குறைவாக பெற்றுள்ளது.
* 2019 தேர்தலை விட 2024 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வாக்குகளும் 6 சதவீதம் அளவிற்கு குறைந்தது.
* தென்மாவட்டங்களில் அ.தி.மு.க.வை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த பல்வேறு தரப்பினர் முயற்சி.
* எஸ்.பி.வேலுமணிக்கும் எனக்கும் பிரச்சனை என திட்டமிட்டு பொய் பரப்பி குழப்பம் விளைவிக்க முயற்சி.
* அமைச்சர் ரகுபதிக்கு அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- பாராளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு.
- தேர்தலில் வெற்றி, தோல்விகள் மாறி மாறி தான் வரும், அரசியல் பின்னடைவு இல்லை.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழகத்தில் 8 முறை வந்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
* பா.ஜ.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் கூட்டணி பலத்தோடு தேர்தலை எதிர்கொண்டன.
* பா.ஜ.க. கூட்டணிக்காக மோடி, ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
* 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 18.80 சதவீத வாக்குகள் பெற்றது.
* 2014-ல் பெற்ற வாக்குகளை விட 2024 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி குறைவாக வாக்குகள் பெற்றது.
* தேர்தலில் வெற்றி, தோல்விகள் மாறி மாறி தான் வரும், அரசியல் பின்னடைவு இல்லை.
* பாராளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு.
* 2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை.
* 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.
* 2026-ல் தனிப்பெரும்பான்மையுடன் அதி.மு.க. ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- ‘மருதமலை’ திரைப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியை நினைவு கூரும் வகையில் டிப்-டாப் நபர் புகார் கொடுக்க வந்தது தெரியவந்தது.
- டிரைவரின் புகார் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
தனது 2-வது மனைவி மகனுடன் மாயமானது குறித்து புகார் கொடுக்க வந்த டிரைவர் அவளுக்கு நான் 3-வது கணவர் என்று கூறியதால் அவரை விசாரித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைசுற்றி கிறங்கி போனார்.
நடிகர் வடிவேலு பட நகைச்சுவை காட்சி போன்று நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சேலம் அருகே கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு பேண்ட், சட்டை அணிந்த டிப்-டாப் வாலிபர் ஒருவர் ஒருவித தயக்கத்துடன் வந்தார். அவரிடம் அங்கு பணியில் இருந்த போலீசார் விசாரித்த போது, தனது மனைவி மற்றும் 5 வயது மகன் மாயமாகி விட்டதாகவும் புகார் கொடுக்க வந்துள்ளதாகவும் கூறி உள்ளார்.
பின்னர் அவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் புகார் மனுவை அளித்துள்ளார். இந்த புகார் குறித்து அவர் விசாரித்த போது அவருக்கு தலைசுற்றலே வந்து விட்டது என்று கூறலாம்.
ஆம். நடிகர்கள் அர்ஜூன், வடிவேலு நடித்த 'மருதமலை' திரைப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியை நினைவு கூரும் வகையில் அந்த டிப்-டாப் நபர் புகார் கொடுக்க வந்தது தெரியவந்தது. அந்த பட நகைச்சுவை காட்சியில் போலீஸ் நிலையத்துக்கு தம்பதியாக வந்தவர்களிடம் ஏட்டுவான நடிகர் வடிவேலு விசாரிக்கும் போது, இவர் தான் என் முதல் கணவர், இவர் எனக்கு முறைப்படி தாலிகட்டிய கணவர் என்று அந்த பெண் பட்டியலிட்டு ஏட்டு வடிவேலுவை கிறுகிறுக்க வைப்பார்.
அதேபோல் தான் புகார் கொடுக்க வந்தவரிடம் விசாரித்த போது, அவர் டிரைவர் என்பதும், தனது 2-வது மனைவியும், 5 வயது மகனும் மாயமாகி விட்டதாக கூறி இருந்தார். இதில் என்ன 2-வது திருமணம் தானே என்று யோசிக்க தொடங்கினால், காணாமல் போன பெண்ணுக்கு வந்த டிரைவர் 3-வது கணவராம். இப்போது அந்த சப்-இன்ஸ்பெக்டர் வடிவேலு பாணியில் சற்று தவித்து தான் போனார்.
இருப்பினும் அந்த டிரைவரின் புகார் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பெண் மற்றும் அவரது மகனை தேடி வருகின்றனர். தனது 2-வது மனைவியை காணவில்லை என அந்த பெண்ணின் 3-வது கணவர் புகார் கொடுத்தது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
- அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
மேலும் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், தேனி, ராமநாதபுரம், வேலூர், தென்சென்னை, புதுச்சேரி ஆகிய 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இதனால் தொண்டர்கள், நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் சேலம் வடக்கு தொகுதியை தவிர மற்ற 10 சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வசம் உள்ளது. அப்படி இருந்தும் சேலம் பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றிருந்தார்.
அதேபோல் கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் குறைந்த வாக்குகள் பெற்றிருந்தார்.
இதையடுத்து முதல் கட்டமாக சேலம், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (8-ந்தேதி) ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இதில் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதனால் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.
- மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
- கோடை மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக சேலம் மாநகரில் நேற்று மாலை 6 மணியளவில் சூறாவளி காற்றுடன் மழை தொடங்கியது. இந்த மழை அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழையாக விடிய, விடிய பெய்தது.
இதே போல சேலம் புறநகர் பகுதிகளான சங்ககிரி, தம்மம்பட்டி, ஆனைமடுவு, வீரகனூர், ஓமலூர் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
ஏற்காட்டில் நேற்று சாரல் மழை பெய்தது. மேலும் மேக கூட்டங்கள் அங்குள்ள மரங்களை தழுவி சென்றது கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. சுற்றுலா பயணிகள் இயற்கையின் அழகை ரசித்து வருகிறார்கள். சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலையும் மழை தூறியபடியே இருந்தது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 53 மி.மீ. மழை பெய்துள்ளது. சங்ககிரி 50.4. மி.மீ., சேலம் மாநகர் 16, ஏற்காடு 4, வாழப்பாடி 2, ஆனைமடுவு 16, ஆத்தூர் 10.2, கெங்கவல்லி 10, ஏத்தாப்பூர் 4, வீரகனூர் 39, நத்தக்கரை 7, எடப்பாடி 4, மேட்டூர் 2.2, ஓமலூர் 23, டேனீஸ்பேட்டை 11 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 251.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
இதே போல நாமக்கல் மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, நாமக்கல் உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மேலும் இந்த கோடை மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக சேந்தமங்கலத்தில் 65 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. எருமப்பட்டி 20, குமாரபாளையம் 24, மங்களபுரம் 4, மோகனூர் 11, நாமக்கல் 51.3, பரமத்தி வேலூர் 33, புதுச்சத்திரம் 25, ராசிபுரம் 27, திருச்செங்கோடு 46.2, கலெக்டர் அலுவலகம் 34, கொல்லி மலை 59 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 399.9 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
- விடிய, விடிய வரை சாரல் மழையாக பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது .
குறிப்பாக எடப்பாடி, நத்தக்கரை, வாழப்பாடி, ஆனைமடுவு, டேனீஸ்பேட்டை உள்பட பல பகுதகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
ஏற்காட்டில் நேற்றிரவு விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
சேலம் மாநரில் நேற்றிரவு 9 மணியளவில் தொடங்கிய மழை விடிய, விடிய வரை சாரல் மழையாக பெய்தது. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 19 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 7.7, ஏற்காடு 1.6, வாழப்பாடி 14, ஆனைமடுவு 10, ஆத்தூர் 4, தம்மம்பட்டி 8, ஏத்தாப்பூர் 5.4, கரியகோவில் 4, வீரகனூர் 4, நத்தக்கரை 13, சங்ககிரி 4.4, எடப்பாடி 19, மேட்டூர் 2.2, டேனீஸ்பேட்டை 10 மி.மீ. என மாவட்டம்முழுவதும் 107.3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 5 லட்சத்து 66 ஆயிரத்து 85 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனோஜ்குமார் 76 ஆயிரத்து 207 வாக்குகளும் பெற்றனர்.
சேலம்:
சேலம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. , அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 27 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 13 லட்சத்து 6 ஆயிரத்து 457 பேர் வாக்களித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டது.
இதில் தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 5 லட்சத்து 66 ஆயிரத்து 85 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேஷ் 4 லட்சத்து 95 ஆயிரத்து 728 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளர் அண்ணாதுரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 894 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனோஜ்குமார் 76 ஆயிரத்து 207 வாக்குகளும் பெற்றனர்.
இதில் நோட்டவுக்கு 14 ஆயிரத்து 894 பேர் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மேட்டூர் அணைக்கு நேற்று 89 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 286 கன அடியாக அதிகரித்துள்ளது.
- நேற்று 45.47 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 45.18அடியாக குறைந்தது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. தற்போது போதிய அளவில் மழை இல்லதாதால் மேட்டூர் அணைக்கு நேற்று 89 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 286 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை விட நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 45.47 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 45.18அடியாக குறைந்தது. நீர் இருப்பு 14.91 டி.எம்.சி.யாக உள்ளது.
- பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி பெய்து வருகிறது.
- அவ்வப்போது லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.
சேலம்:
தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சேலத்தில் பரவலாக மழை பெய்தது. நேற்று மதியம் வெயில் அடித்தது.
மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதனை தொடர்ந்து 6 மணிக்கு இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. பின்னர் சிறிது நேரம் மழை விட்டது.
அதன் பிறகு 2-வது முறையாக பெய்த கனமழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இந்த கனமழையால் கலெக்டர் அலுவலகம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, அன்னதானப்பட்டி அஸ்தம்பட்டி, 4 ரோடு, மேயர் நகர் உள்ளிட்ட நகரில் பல இடங்களில் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது.
ஓமலூர் மெயின் ரோடு உள்ளிட்ட பல சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. சேலம் புதிய பஸ்நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
தாழ்வான பலபகுதிகளில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மழை நின்ற பிறகு வீட்டிற்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றினர்.
சேலத்தில் அதிகபட்சமாக 86.4 மில்லிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, கரியகோவில், ஓமலூர், டேனீஷ்பேட்டை ஆகிய இடங்களில் மழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஏற்காடு - 37,
கரிய கோவில் - 58,
ஓமலூர் - 15,
டேனீஷ் பேட்டை - 3.2 என மாவட்டம் முழுவதும் 207.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
- கடந்த வாரம் பரவலாக கன மழை பெய்தது.
- கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக கன மழை பெய்தது. தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. மதியம் வெப்ப அலை வீசியது. இரவிலும் கடும் புழுக்கத்தில் மக்கள் தவித்தனர்.
இந்த நிலையில் ஏற்காட்டில் நேற்றிரவு 10.30 மணியளவில் தொடங்கிய மழை இடி, மின்னலுடன் 12 மணி வரை கன மழையாக கொட்டியது. 1 ½ மணி நேரத்திற்கும் மேல் பெய்த இந்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மழையை தொடர்ந்து இன்று காலை ஏற்காட்டில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. கோடை விடுமுறை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சனிக்கிழமையான இன்று காலை முதலே சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் அதிக அளவில் குவிந்திருந்தனர். அவர்கள் இயற்கை அழகை பார்த்து ரசித்து வருகிறார்கள்.
சேலம் மாநகரில நேற்றிரவு 11 மணிக்கு பலத்த காற்றுடன் தொடங்கிய மழை 12 மணி வரை சாரல் மழையாக பெய்தது. மழையை தொடர்ந்து மாநகரில் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது .
மழையை தொடர்ந்து சேலத்திலும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 34.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலத்தில் 11.2 மி.மீ., ஓமலூர் 2.2, டேனீஸ்பேட்டை 7 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 55 மி.மீ. மழை பெய்துள்ளது.
- பழச்சாறு தயாரித்து பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- குளிர்பானங்கள் அருந்துவதில் அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
வாழப்பாடி:
கோடைக்காலம் தொடங்கினாலே சுட்டெரிக்கும் வெய்யிலின் தாக்கத்தை தணித்துக் கொள்ள குளிர்பானங்கள் அருந்துவதில் அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான மக்கள் புட்டியில் அடைத்து விற்கப்படும் செயற்கை குளிர்பானங்களை வாங்கி பருகுவதை விட, இயற்கை பழச்சாறு அருந்துவதையே விரும்புகின்றனர்.
இதனால் கோடை காலத்தில் பழச்சாறு தயாரித்து அருந்துவதற்கேற்ற தர்பூசணி, வெள்ளரி, முலாம் பழங்களுக்கு இப்பகுதி மக்களிடையே ஆண்டுதோறும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
எனவே, திருவண்ணாமலை பகுதியில் அதிகளவில் விளைந்துள்ள முலாம் பழங்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், வாழப்பாடி பகுதி கிராமங்களுக்கு ஆட்டோக்களில் கொண்டு வந்து 4 கிலோ விலை ரூ.100 என விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த முலாம் பழங்களை மக்கள் விரும்பி வாங்கி பழச்சாறு தயாரித்து பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாழப்பாடி பகுதி கிராமங்களில் முலாம் பழங்கள் அமோகமாக விற்பனையாவதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் விற்பனைக்கு முலாம் பழம் கொண்டு வரப்பட்டுள்ளது.






