என் மலர்
சேலம்
- கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- கறிக்கோழிகள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதால் விலை உயர்ந்துள்ளது.
சேலம்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, திருப்பூர் கோவை உள்பட நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கறிக்கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த கோழிப்பண்ணைகள் மூலம் தினசரி 30 லட்சத்திற்கும் அதிகமாக கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தநிலையில் கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து பண்ணை கொள்முதல் விலை ஒரு கிலோ 147 ரூபாயாக தற்போது உயர்ந்துள்ளது . இதனால் சேலம், நாமக்கல் மாவட்ட கறிக்கோழி விற்பனை சில்லரை கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி 260 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேவையை விட குறைந்த அளவே பொதுமக்கள் இறைச்சி வாங்கி செல்கிறார்கள்.
இந்த விலை உயர்வு குறித்து கறிக்கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் கடந்த மாதம் வீசிய வெப்ப அலையால் அதிக அளவில் கறிக்கோழிகள் இறந்தன. இதனால் கறிக்கோழிகள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதால் விலை உயர்ந்துள்ளது. விரைவில் உற்பத்தி அதிகரித்து விலை குறையும் என்றனர்.
இதனிடையே 520 காசுகளாக இருந்த முட்டை விலை நேற்று நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. சில்லரை கடைகளில் 650 காசுகளுக்கு விற்கப்படுகிறது. முட்டைக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 98 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
- இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்று முன்தினம் 1,432 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் சரிந்து 795 கன அடியானது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 389 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் குடிநீர் தேவைக்காக 2 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 47.31 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு மேலும் சரிந்து 47.04 அடியானது.
இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- வழக்கமாக மே மாத இறுதியில் கர்நாடகா மற்றும் கேரளாவில் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும்.
- இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சேலம்:
மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை திகழ்கிறது. அணையை நம்பி பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக குறுவை சாகுபடிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும், இந்த தண்ணீர் திறப்பு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை மற்றும் நீர் இருப்பை பொறுத்து மாறுபடும். மேட்டூர் அணைக்கு நீர்பிடிப்பு பகுதிகளாக கர்நாடகா மற்றும் கேரளா மாநிலம் முக்கிய பகுதியாக உள்ளது .
வழக்கமாக மே மாத இறுதியில் கர்நாடகா மற்றும் கேரளாவில் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும். அப்போது அங்கிருந்து காவிரியில் வரும் தண்ணீர் கரை புரண்டு ஓடி ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடையும். அணையின் நீர் இருப்பு 100 அடிக்கு மேல் இருக்கும்பட்சத்தில் அணைக்கு நீர்வரத்தும் திருப்தியாக இருந்தால் மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.
ஆனால் நடப்பாண்டில் நேற்று 1,432 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 795 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரியில் 2 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.31 அடியாக உள்ளது.
இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி மழை தொடங்கினாலும் இனி வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காவிரியின் குறுக்கே உள்ள கர்நாடக அணைகள் நிரம்பி பின்னர் தான் மேட்டூர் அணைக்கு வந்தடையும். இதனால் வருகிற 12-ந் தேதிக்குள் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டுமா, டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? தற்போது விவசாய பணிகளை தொடங்கலாமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
- ஏற்காட்டில் இன்று 47-வது மலர் கண்காட்சி கடந்த 22-ம் தேதி தொடங்கியது.
- இந்த கண்காட்சி தொடர்ந்து வருகிற 26-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நிலவி வரும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.
இதையடுத்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கோடை விழா மலர் கண்காட்சி நடைபெறும். இந்த மலர் கண்காட்சியை தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் கண்டு ரசித்து செல்வார்கள்.
ஏற்காட்டில் இன்று 47-வது மலர் கண்காட்சி கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சி தொடர்ந்து வருகிற 26-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மலர் கண்காட்சியையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு இன்று வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
- கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
- ஏற்காட்டில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது.
ஏற்காடு:
ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி 3-வது நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை காண திரண்டு வந்தனர்.
தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து சீதோசன நிலை மிகவும் குளுமையாக மாறி உள்ளது.
இதனால் ஏற்காட்டில் குளிர் அதிகமாக காணப்படுகிறது தற்போது கோடை விழா மலர் கண்காட்சி நடைபெற்று வருவதால் இந்தகால சூழ்நிலையை இங்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.
பூத்துக் குலுங்க மலர்களையும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள உருவங்களையும் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். ஏற்காட்டில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. சுற்றுலா பயணிகள் பனிமூட்டத்தை போட்டோ எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.
- கோகுல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சுகமதியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி வினோபாஜி நகரை சேர்ந்தவர் கோகுல் (30), ஆட்டோ டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த சுகமதி (24) என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு சஞ்சனாஸ்ரீ (6), ரிஷ்மிகா (2) என 2 குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமில் விஷம் கலந்து சுகமதி கொடுத்து கொன்று விட்டு அவரும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று சுகமதி வீட்டில் இருந்து வெளியில் வராததை அறிந்த அவரது தந்தை பாபு அங்கு சென்று பார்த்த போது சுகமதி மற்றும் அவரது குழந்தைகள் இறந்து கிடந்தனர்.
இதற்கிடையே அங்கு வந்த தேவூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கோகுல் சொந்தமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் வாங்கி உள்ளார். இதற்காக 40 ஆயிரம் ரூபாய் சுகமதியின் தந்தை பாபுவிடம் வாங்கியதாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மகளிர் சுய உதவிக்குழுவில் கோகுல் தம்பதி கடன் வாங்கினர். அந்த பணத்தை தனது தந்தையிடம் வாங்கிய கடனுக்கு கொடுக்குமாறு சுகமதி கேட்டுள்ளார். ஆனால் அதனை கொடுக்க கோகுல் மறுத்தார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.
பின்னர் கோகுல் கோபித்து கொண்டு அருகில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு சென்று அங்கேயே கடந்த ஒரு மாதமாக தங்கி விட்டார். பின்னர் சுகமதி பல முறை கோகுலிடம் பேச முயன்றும், அவர் போனை எடுக்க வில்லை. மேலும் கோகுல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சுகமதியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவங்களால் மனம் உடைந்த சுகமதி வாழ்க்கையில் வெறுப்படைந்து குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து கோகுல் மீது தற்கொலைக்கு தூண்டியதாகவும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை பிரிவிலும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நேற்றிரவு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா ? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சுகமதி மற்றும் அவரது குழந்தைகளின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது.
- பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோர்ட்டில் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- பணம் கொடுத்த சேந்தமங்கலத்தை சேர்ந்த தொழில் அதிபர் இறந்து விட்டதாக சாபீர் கூறியதால் அவர் உண்மையாக இறந்து விட்டாரா? என்பது குறித்தும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் சாபீர் (32), பிரபல ரவுடியான இவர் மீது கஞ்சா வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் சேலம் வீராணம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அம்மாப்பேட்டை போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா வைத்திருந்த 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், ரவுடி சாபீரும் கஞ்சா விற்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் நேற்று சாபீர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது. அனைத்தையும் எண்ணிய போது 1000 ரூபாய் நோட்டுகள் 7400-ம், 500 ரூபாய் நோட்டுகள் 5000-ம் என 99 லட்சம் மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட செல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர்.
அப்போது பிரபல ரவுடியான சாபீர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறினார். மேலும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த தொழில் அதிபர் பணத்தை மாற்றி தருமாறு கூறி தன்னிடம் கொடுத்தார். ஆனால் அதனை மாற்ற முடியாத நிலையில் பணம் கொடுத்தவர் இறந்து விட்டார்.
இதனால் அந்த பணத்தை தனது வீட்டிலேயே வைத்திருந்ததாகவும் கூறினார். இதையடுத்து சாபீரை கைது செய்த போலீசார் 99 லட்சம் மதிப்பிலான அந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோர்ட்டில் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் பணம் கொடுத்த சேந்தமங்கலத்தை சேர்ந்த தொழில் அதிபர் இறந்து விட்டதாக சாபீர் கூறியதால் அவர் உண்மையாக இறந்து விட்டாரா? என்பது குறித்தும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
- அவரது உடலுக்கு அனைத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆறகளூரை சேர்ந்த வையாபுரி மனைவி ராஜம்மாள் (வயது 84).
இவர் 1980-ல் அப்போதைய தலைவாசல் சட்டமன்ற தொகுதியில் (தற்போது கெங்கவல்லி) காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984-ல் மீண்டும் வெற்றி பெற்றார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். 1989-ல் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தபோது ஜெயலலிதா அணியில் தலைவாசல் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் வயது முதிர்வு, உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
- ஏற்காடு, வாழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி, சங்ககிரி உள்பட மாவட்டம் முழுவதும் மழை கொட்டியது.
- நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, மங்களபுரம், பரமத்தி வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மே மாத தொடக்கத்தில் வீசிய வெப்ப அலையால் பொதுமக்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கி நாளில் இருந்து சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து தினமும் பரவலமாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மதியம், இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. ஏற்காடு, வாழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி, சங்ககிரி உள்பட மாவட்டம் முழுவதும் மழை கொட்டியது.
இதன் காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. மேலும் மலைப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையும் இருந்தது.
சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 116 மி.மீ. மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சேலம்-6.5, ஏற்காடு-21.6, வாழப்பாடி-3, ஆனைமடுவு-18, ஆத்தூர்-15., கெங்கவல்லி-2, ஏத்தாப்பூர்-4, வீரகனூர்-12, நத்தக்கரை-13, சங்ககிரி-10, எடப்பாடி-7, மேட்டூர்-6.8, ஓமலூர்-12.5. டேனிஷ் பேட்டை-4.8. மாவட்டம் முழுவதும் மொத்தம் 252.4 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது.
சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது பச்சை புற்கள் அதிகளவில் முளைக்க தொடங்கியதால் கால்நடைகளுக்கு தீவனங்களும் கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதே போல் நாமக்கல் மாவட்டத்திலும் எருமப்பட்டி, மங்களபுரம், பரமத்தி வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
எருமப்பட்டி-5, குமாரபாளையம்-11.2, மங்களபுரம்-28, மோகனூர்-25, நாமக்கல்-7, பரமத்திவேலூர்-5.5, புதுச்சத்திரம்-15.2, ராசிபுரம்-7, சேந்தமங்கலம்-12, திருச்செங்கோடு-6, கலெக்டர் அலுவலகம்-11.5, கொல்லிமலை செம்மேடு-29. மொத்தம் மாவட்டம் முழுவதும் 162.4 மி.மீ. மழை பெய்துள்ளது.
- வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த செந்தமிழ் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டார்.
- தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் அன்னதானப்பட்டி கண்ணகி தெருவை சேர்ந்தவர் செந்தமிழ் (50). இவர் பிளாஸ்டிக் கம்பெனியில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு ஹாலோ பிளாக் கல்லால் கட்டப்பட்டு சிமெண்ட் அட்டை போடப்பட்ட தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். கடந்த சில நாட்களாக சேலத்தில் பெய்து வரும் மழையின் காரமணாக இந்த ஹாலோ பிளாக்கால் கட்டப்பட்ட சுவர்கள் ஈரப்பதத்துடன் இருந்தது. நேற்று இரவும் மழை பெய்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் செந்தமிழ் வீடு மழையால் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த செந்தமிழ் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்து கட்டிட இடிபாடுகளை அகற்ற தொடங்கினர். மேலும் இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும், அன்னதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கட்டிட இடிபாடுகளுக்குள் செந்தமிழ் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோடை விழாவை முன்னிட்டு 2-வது நாளான இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர்.
- ஏற்காட்டில் கடந்த ஒரு வார காலமாக மாலை நேரம் மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் சார்பாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 47-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தமிழக அரசு முதன்மை செயலாளர் அபூர்வா நேற்று தொடங்கி வைத்தார். இந்த விழா வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது.
தோட்டக்கலை துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு இயற்கை வளங்கள் மூலம் மின்சாரம் உருவாக்குவதை எடுத்துரைக்கும் வகையில் பிரம்மாண்ட காற்றாலை, பவளப்பாறைகள், நண்டு, சிற்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை போன்றவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் குழந்தைகளிடம் மரம் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் கார்ட்டூன் கதாபாத்திரங்களான டொனால்ட் டக், மிக்கி மௌஸ், டாம் அண்ட் ஜெர்ரி மரங்களை நடுவது போலவும், நீர் பாய்ச்சுதல் போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று 30,000-க்கும் மேற்பட்ட வண்ணமலர் தட்டிகளை கொண்டு மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஏற்காட்டில் விளையும் காபி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப சுவைத்து அந்த காபி ரகங்களை வாங்கி செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பூங்காவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வளைவை சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் செல்பி எடுத்தனர்.
இக்கோடை விழாவில் ஒவ்வொரு நாளும் ஓவியங்கள் உள்ளிட்ட அரிய புகைப்பட கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், செல்லப் பிராணிகள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், இளைஞர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
அதன்படி ஏற்காடு படகு இல்ல ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக நேற்று மாலையில் சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டி நடத்தப்பட்டது. இந்த படகு போட்டியில் பல்வேறு ஊர்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
பெண்கள் பிரிவில் முதல் பரிசை சென்னையை சேர்ந்த கரோலின் சில்வியா, கேத்தரின் ஆகியோரும் 2-ம் பரிசை ராசிபுரத்தை சேர்ந்த கஜலட்சுமி, கலைச்செல்வி, 3-ம் பரிசை சேலத்தை சேர்ந்த மலர்கொடி, யாழினி ஆகியோர் பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் முதல் பரிசை சேலத்தை சேர்ந்த பிரவீன், விஸ்வநாதன், 2-ம் பரிசு ராகுல், விக்கி, 3-ம் பரிசை திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கவுதம், சந்தோஷ் ஆகியோர் பெற்றனர்.
தம்பதியர் பிரிவில் முதல் பரிசை சென்னையை சேர்ந்த பானு-லியாஸ், 2-ம் பரிசை நாமக்கல்லை சேர்ந்த சீனிவாசன்-உஷா தேவி, 3-ம் பரிசை சேலத்தை சேர்ந்த மலர்கொடி-விஜயகுமார் ஆகியோர் தட்டி சென்றனர்.
கோடை விழாவை முன்னிட்டு 2-வது நாளான இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். இன்று மதியம் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி ஏற்காடு மான்போர்ட் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.
ஏற்காட்டில் கடந்த ஒரு வார காலமாக மாலை நேரம் மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்றும் இரவில் மழை கொட்டியது. இதனால் ஏற்காடு மிகவும் குளிர்ச்சியான நிலையில் காணப்படுகிறது. இது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குளிர்ந்த காற்றை சுவாசித்தப்படி கோடை விழாவை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.
- சேலத்திலிருந்து ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல பேக்கேஜ் வசதி
- இன்று முதல் மே 26 வரை இந்த சேவை நடைமுறையில் இருக்கும்.
சேலத்திலிருந்து ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சிறப்பு சுற்றுலா பேருந்து வசதியை போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்காட்டில் உள்ள கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை காட்சி முனை, பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், றோஸ் காட்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம், ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல ஒரு நபருக்கு பேருந்து கட்டணமாக ரூ.300/- வசூலிக்கப்படுகிறது.
இன்று முதல் மே 26 வரை தினமும் காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பெருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் புறப்பட்டு மாலை 7.00 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் நிறைவடையும்.
பயணிகள் இந்த வசதியை, அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம் வழியாகவும், www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலி மூலமாக முன்பதிவு செய்யலாம்.






