என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை
    X

    சேலம், நாமக்கல் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை

    • மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
    • கோடை மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாநகரில் நேற்று மாலை 6 மணியளவில் சூறாவளி காற்றுடன் மழை தொடங்கியது. இந்த மழை அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழையாக விடிய, விடிய பெய்தது.

    இதே போல சேலம் புறநகர் பகுதிகளான சங்ககிரி, தம்மம்பட்டி, ஆனைமடுவு, வீரகனூர், ஓமலூர் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    ஏற்காட்டில் நேற்று சாரல் மழை பெய்தது. மேலும் மேக கூட்டங்கள் அங்குள்ள மரங்களை தழுவி சென்றது கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. சுற்றுலா பயணிகள் இயற்கையின் அழகை ரசித்து வருகிறார்கள். சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலையும் மழை தூறியபடியே இருந்தது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 53 மி.மீ. மழை பெய்துள்ளது. சங்ககிரி 50.4. மி.மீ., சேலம் மாநகர் 16, ஏற்காடு 4, வாழப்பாடி 2, ஆனைமடுவு 16, ஆத்தூர் 10.2, கெங்கவல்லி 10, ஏத்தாப்பூர் 4, வீரகனூர் 39, நத்தக்கரை 7, எடப்பாடி 4, மேட்டூர் 2.2, ஓமலூர் 23, டேனீஸ்பேட்டை 11 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 251.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இதே போல நாமக்கல் மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, நாமக்கல் உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மேலும் இந்த கோடை மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக சேந்தமங்கலத்தில் 65 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. எருமப்பட்டி 20, குமாரபாளையம் 24, மங்களபுரம் 4, மோகனூர் 11, நாமக்கல் 51.3, பரமத்தி வேலூர் 33, புதுச்சத்திரம் 25, ராசிபுரம் 27, திருச்செங்கோடு 46.2, கலெக்டர் அலுவலகம் 34, கொல்லி மலை 59 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 399.9 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×