என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கனவு பலிக்காததால் அண்ணாமலை விமர்சிக்கிறார்- எடப்பாடி பழனிசாமி
- அ.தி.மு.க. ஓட்டு எங்கும் போகவில்லை. எங்களுக்குதான் தான் கிடைத்து இருக்கிறது.
- தி.மு.க. அமைச்சர் ரகுபதிக்கும் அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம். அ.தி.மு.க.வை பற்றி பேச அவருக்கு அருகதை கிடையாது.
சேலம்:
சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து இருக்கிறது. இந்த தேர்தல் குறித்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் பல விமர்சனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த தருணத்தில் உங்களை நான் சந்தித்து பேசுகிறேன்.
தேர்தல் பிரசாரத்தை பொறுத்தவரைக்கும் அ.தி.மு.க.வை சேர்ந்த நான் ஒருவர் மட்டும் தான் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் செய்தேன். அதுபோல் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அ.தி.மு.க. கூட்டணி பலம் இல்லை, தி.மு.க கூட்டணி பலத்தில் போட்டியிடுகிறது என விமர்சனம் செய்கிறார்கள். அ.தி.மு.க. இந்த தேர்தலில் 2019 பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 1 சதவீத வாக்குகள் கூடுதலாக பெற்றி இருக்கிறோம். இது அ.தி.மு.க.வுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறோம்.
அ.தி.மு.க. ஓட்டுக்கள் எதிர்கட்சிக்கு சென்று விட்டது என சொல்கிறார்கள். அ.தி.மு.க. ஓட்டு எங்கும் போகவில்லை. எங்களுக்குதான் தான் கிடைத்து இருக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தான் கூடுதல் வாக்குகள் பெற்று இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் அமோக வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்கும்.
கேள்வி: அ.தி.மு.க.வுக்கு ஒரு சில தொகுதிகளில் டெபாசிட் கிடைக்கவில்லையே?
பதில்: ஒரு சில தொகுதிகளில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. அவை கொஞ்சம் காலத்தில் சரி செய்யப்படும்.
கே: பா.ஜ.க. கூட்டணி இருந்திருந்தால் வெற்றி கிடைத்து இருக்குமா?
ப: கூட்டணி இருந்திருந்தால், போயிருந்தால், அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. 2014, 2019, 2024-ல் கூட்டணி மாறி மாறி அமைப்பாங்க. அந்தந்த தேர்தலில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கட்சி கூட்டணி அமையும். 1992-ல் தி.மு.க. 2 இடங்களில் வெற்றி பெற்றது. 1996-ல் அ.தி.மு.க. 4 இடங்களில் வெற்றி பெற்றது. ஆகவே தி.மு.க. அழிந்து போச்சா, அ.தி.மு.க. அழிந்து போச்சா அதெல்லாம் கிடையாது. தி.மு.க. கடந்த காலங்களில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. எனவே மாறி மாறி தான் ஆட்சிக்கு வருவாங்க.
ஆகவே அ.தி.மு.கவுக்கு பின்னடைவு என்பது திட்டமிட்டு பரப்புகின்ற ஒரு பொய்யான செய்தி.
கே: சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கூட்டணிக்கு சேர்த்து இருந்தால்?
ப: இதற்கு மேல் அதை பற்றி பேசி என்ன பிரயோசனம். அரசியலில் வேண்டும் என்று திட்டமிட்டு எல்லோரும் சேர்ந்து ஒரு குழப்பத்தை விளைவித்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பிரிந்து போன பிறகு தான் 1 சதவீதம் ஓட்டுகள் கூடுதலாக கிடைத்து இருக்கிறது.
கே: இனிவரும் காலங்களில் அ.தி.மு.க செயல்பாடு?
ப: இந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்கும்.
தி.மு.க. அமைச்சர் ரகுபதிக்கும் அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம். அ.தி.மு.க.வை பற்றி பேச அவருக்கு அருகதை கிடையாது. அவர் அ.தி.மு.க. வேட்டியை மாற்றி கட்டி போனவர். அவரை அடையாளம் காட்டிய கட்சி அ.தி.மு.க., வேண்டும் என்றே திட்டமிட்டு அவர் அ.தி.மு.க. பற்றி பேசுகிறார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க. கூட்டணி விலகி விட்டது. அண்ணாமலையின் கனவு இந்த தேர்தலில் நனவாகவில்லை. அந்த விரக்தியில் அவர் பேசுகிறார். பா.ஜ.க.வுக்கு தனிப்பெருபான்மை கிடைக்காததற்கு தமிழ்நாட்டில் அந்த கட்சியில் உள்ள தலைவர்களை போல் பல தலைவர்கள் இருப்பார்கள். அதனால் தான் அந்த கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.
நான் முதலமைச்சரானபோது என்னன்னவோ தகவல்கள் வந்தது. மூன்று மாதம் இருப்பாரா, நான்கு மாதம் இருப்பாரா என்றனர். ஆனால் நான்காண்டு ரெண்டு மாதம் சிறப்பான ஆட்சி தந்தோம். பிறகு கட்சி இரண்டாகும் என அவதூறு பிரசாரம் செய்தனர். அ.தி.மு.க. தலைவர் காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி தொடர்ந்து தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து வந்தோம். வெற்றி வரும்வரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். வெற்றி பெற்ற பின்னர் தமிழகத்தை மறந்து விடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்பதால்தான் தனித்துப் போட்டியிட்டோம்.
ஆட்சி அதிகாரம் வேண்டுமென்றால் தேசிய கட்சியுடன் நாங்கள் சேர்ந்து இருப்போம். தமிழ்நாட்டு உரிமையை காக்க வேண்டும். தமிழ்நாட்டு உரிமையை காக்கவும் உரிமைகள் பறி போகும்போது தடுக்கவும் பாராளுமன்றத்தில் சுதந்திரமாக செயல்படவும் அ.தி.மு.க. இந்த முடிவை எடுத்தது.
தி.மு.க. கூட்டணி என்ன சாதிப்பார்கள் என பார்க்கத்தானே போகிறோம். பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு செல்வீர்களா என்று கேட்டதற்கு அதை பற்றி இன்னும் சிந்திக்கவில்லை என்றார்.
தொடர்ந்து ஜெயக்குமார் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேராது எனக் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, (கூட்டணியில் சேராதென ஏற்கனவே தான் பேட்டி அளித்த வீடியோவை எடப்பாடி பழனிசாமி காண்பித்தார்) முன்பே நாங்கள் இது குறித்து தெரிவித்துவிட்டோம். அது பற்றி தான் ஜெயக்குமார் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார், என்றார்.
தொடர்ந்து நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது வேட்பாளர்களுக்கு உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் நேரத்தில் எங்களுடன் கூட்டணி அமைத்த அந்த கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்களித்த பொதுமக்களுக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தே.மு.தி.க. மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கூறி உள்ளனரே என்ற கேள்விக்கு, மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என கேட்டு இருக்கிறார்கள். நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள் என்றார்.
பின்னர் அ.தி.மு.க. நிர்வாகிகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தந்ததாக கூறுகிறார்கள் என்று கேட்டதற்கு, அப்படி இல்லை அப்படி இருந்தால் எப்படி ஒரு சதவீதம் வாக்கு அதிகரித்திருக்கும். இந்த தேர்தலில் ஒரு சதவீதம் கூடுதலாக அ.தி.மு.க. வாக்குகள் பெற்றிருக்கிறது அவதூறு பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.






