search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீண்டும் தலை தூக்கும் கஞ்சா விற்பனை
    X

    மீண்டும் தலை தூக்கும் கஞ்சா விற்பனை

    • கீழக்கரையில் கஞ்சா விற்பனை மீண்டும் அதிகரித்துள்ளது.
    • போதை ஆசாமிகள் இருசக்கர வாகனம் வைத்திருக்கும் இளைஞர்களையே தேர்ந்தெடுக்கின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ஏர்வாடி பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், மீனவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.

    போதை ஆசாமிகள் இருசக்கர வாகனம் வைத்திருக்கும் இளைஞர்களையே தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களை போதை பொருட்களுக்கு அடிமையாக்கி சட்ட விரோத செயலுக்கு உடந்தை ஆக்குகின்றனர். ஆசை வார்த்தைகளை கூறி சட்டவிரோதமாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை கஞ்சா விற்பனையில் ஈடுபட வைக்கின்றனர்.

    போதை பொருள் வியாபாரிகளிடம் வைத்துள்ள நட்பால் சில மாணவர்கள் சக மாணவர்களையும் சீரழித்து வருகின்றனர். வேகமாக பரவி வரும் போதை கலாசாரத்தால் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

    மாணவர்களை குறிவைத்து நடக்கும் போதை பொருள், சட்ட விரோத விற்பனையால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

    தோட்டங்கள், கடற்கரை பகுதி, பெட்டிக் கடைகள் உள்ளிட்டவற்றை விற்பனை தலங்களாக போதை கும்பல் பயன்படுத்தி வருகிறது. மாணவ சந்ததியினர் போதைக்கு வாழ்வை சீரழித்து வருவது வேதனை தருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

    கஞ்சா விற்பனை, சட்ட விரோத மது விற்பனை குறித்து பொதுநல அமைப்புகள் போராட்டங்கள் மூலம் குரல் கொடுத்தும் போலீசாரின் காதில் விழாத நிலை உள்ளது. குறிப்பாக கடற்கரையோர பகுதிகளை தேர்ந்தெடுக்கும் போதை கும்பல் ஏர்வாடி, கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சட்டவிரோத வியாபாரத்தை அதிகரித்து வருகின்றனர். கஞ்சா விற்பனை எங்கு நடைபெறுகிறது? என்பதை போலீசார் அறிந்த நிலையில் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    வழக்கு என்பது கண்துடைப்பு நடவடிக்கையாக உள்ளது. இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்லாமல் இருப்பது கஞ்சா வியாபாரிகளுக்கு கூடுதல் துணிச்சலை அளித்துள்ளது.

    ராமநாதபுர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட தனிப்பிரிவு போலீசார் முழுமையான தகவலை எஸ்.பி. அலுவலகத்திற்கு தெரிவிப்பது கிடையாது. சில சமயங்களில் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொள்ள வரும் போது குறிப்பிட்ட நபர்களுக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டு உஷாராகி விடுகின்றனர்.

    கீழக்கரையில் டாஸ்மாக் கடை இல்லாததால் மதுபானம் வாங்கு திருப்புல்லாணி செல்ல வேண்டும். இதனால் கீழக்கரையில் சட்ட விரோத மதுபான விற்பனை சூடு பிடித்துள்ளது.

    புதிய பஸ் நிலையம் செல்லும் வழியில் மதுபானத்தை திறந்தவெளியில் அமர்ந்து குடிக்கின்றனர். இதனால் அந்த வழியாக பெண்கள் நடந்து செல்ல அச்சமடைகின்றனர்.

    இந்தப் போக்கு தொடருமானால் சட்டவிரோத செயல்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படும். எனவே போதை பொருள் விற்பனை கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை எடுத்து கீழக்கரை பகுதியில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×