என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள தாண்டீஸ்வரத்தில் சத்குரு சம்ஹாரமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அது போல் இந்தாண்டு திருவிழாவையொட்டி இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் இலுப்பூர் குவாட்டுப்பட்டியை சேர்ந்த முத்து(வயது25) என்பவரின் ஜல்லிக்கட்டு காளையும் பங்கேற்றது.
போட்டி தொடங்கியதும் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இதில் சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் பாய்ந்து சென்றன.
முத்து தனது காளையை அவிழ்த்து விடுவதற்கு முன்பாக வாடிவாசல் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த மற்றொரு காளை, முத்துவை, முட்டி தூக்கி எறிந்தது. இதில் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே முத்து பலியானார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
கீரனூர்:
கீரனூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. இதனால் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க செல்கின்றனர்.
இவ்வாறு சாலை ஓரங்களில் பைக்குகள் நிறுத்தப்படுவதால் திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் பஸ்ஸ்டாண்டின் உள்ளே செல்லும் வரை கடும் போக்குவரத்து நெரிசல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் பேருந்து ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதே போல் பேருந்து நிலையத்தின் உட்புறத்திலும் பயணிகள் காத்திருக்கும் பகுதி மற்றும் நடைமேடை பகுதிகளில் தரைக்கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளால் சாலை மற்றும் பேருந்து நிலையத்திற்கு வரும் பஸ்கள் அனைத்தும் பெரும்பாலும் மோதுவது போல் சென்று வருகின்றன. பேருந்தில் இருக்கும் பயணிகள் விபத்து ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்துடனயே பஸ்சில் பயணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மோச குடியை சேர்ந்த முருகேசன் மகனும் பள்ளி மாணவனுமான மணிகண்டன் (வயது 7), காவேரி நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தனது பாட்டியுடன் பேருந்தில் ஏறினான். பின்னர் ஜன்னல் ஓரம் உள்ள இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்த்த படி இருந்தான்.
கீரனூர் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு, பஸ் புறப்பட்டு வெளியே வந்தது. அப்போது எதிரே தேவக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் இரு பேருந்துகளும் திடீரென ஒன்றையொன்று உரசிக்கொண்டன.
அப்போது சிறுவன் மணிகண்டன் கதறி அழுதான். பேருந்தில் இருந்த பயணிகள் பார்த்த போது, உரசிக் கொண்டு நின்ற பேருந்துகளின் நடுவே சிக்கி கை நசுங்கி இருந்தது. பின்னர் சிறுவனை மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சாகுல் அமீது, குளித்தலையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கரிசகாடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவரது மனைவி பானுமதி (45). இவர்களது மகன்கள் மணிகண்டன், தினேஷ், குணா. இவர்கள் அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.
முருகனுக்கு 6 சகோதரிகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக முருகன் பலரிடம் கடன் வாங்கியிருந்தார். அதனை பல நாட்கள் ஆகியும் அவரால் அடைக்க முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் கடன் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
இதன் காரணமாக சொத்தை விற்று கடனை அடைக்க முடிவு செய்தார். இதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்றிரவு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகன் அரிவாளால் பானுமதியை வெட்டினார். இதில் அவர் பலத்த வெட்டுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
இதையடுத்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்த முருகன், உயிருக்கு போராடிய மனைவியை மீட்டு கார் மூலம் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சென்றதும் பானுமதிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனிடையே முருகன் மயங்கி விழவே, அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை முருகன் இறந்தார்.
பானுமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து சென்னை வந்த பிரதமர் மோடி, எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மத்திய நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார். அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முன்வர வேண்டும்.
ஆனால் மத்திய அரசின் எடுபிடியாக செயல்பட்டு வரும் பழனிசாமி அரசு, இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாது. எனவே எதிர்க்கட்சிகள் விவசாய இயக்கங்களோடு ஒருங்கிணைந்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி பேரியக்கத்தை நடத்த வேண்டும்.
இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க முயல்வது கண்டனத்திற்குரியது. வட மாநிலங்களில் இந்தி தெரியாத தமிழக மாணவர்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர். சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மொழி பிரச்சினையால் நடக்கும் கொலை, தற்கொலைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் சமீபகாலமாக தலித் குடும்பங்கள் மீது கொலை வெறி தாக்குதல்கள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இந்த வழக்குகளை திசை திருப்பும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரெங்கராஜன் தலைமையிலான குழு சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்த உள்ளது.
காஞ்சிபுரம் உத்திரமேரூர் பகுதியில் கருணை இல்லம் என்ற பெயரில் செயல்படும் தொண்டு நிறுவனத்தில் மர்மசாவுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இறந்தவர்களின் எலும்புகள் வெளிநாட்டில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சசிகலாவின் சகோதரர் திவாகரன் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்ட சிலை ஜெயலலிதா உருவம் கொண்டதாக இல்லை. ஓ.பன்னீர்செல்வம், அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்து வருகிறார்.
அ.தி.மு.க.வில் இருந்து மற்றொரு எம்.எல்.ஏ. நேற்று முன்தினம் வந்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்கள் பக்கம் வருவார்கள். தற் போது தமிழகத்தில் டி.டி.வி. தினகரனை விட்டால் வேறு தலைவர்கள் இல்லை. ஆனால் அவர் தற்போதுள்ள சூழ்நிலையை பயன்படுத்தி முதலமைச்சராக வர மாட்டார். வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று தான் முதல்- அமைச்சராக வருவார். எனக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. எங்கள் குடும்பத்திற்குள் எந்த பிரச்சினையும் இல்லை.

நான் டி.டி.வி.தினகரனை தொடர்ந்து ஆதரித்து வருகிறேன். ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை ஆணையத்தில் இருந்து சம்மன் வந்தால், நான் ஆஜராகி எனக்கு தெரிந்தவற்றை சொல்வேன். காவிரி பிரச்சினை தொடர்பாக அரசு சார்பில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்திற்கு மு.க. ஸ்டாலினை அழைப்பதற்கு இருந்த துணிச்சல், டி.டிவி.தினகரனை அழைப்பதற்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலாவுடன் சேர்ந்து ஏப்ரல் மாதத்தில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளது பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, இது சட்டம் சம்பந்தப்பட்டது, சாத்தியமா என்று தெரியவில்லை என்றார். #tamilnews
புதுக்கோட்டையில் தடிகொண்ட அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஒரு அமைப்பு ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதனை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இன்று அந்த இடத்தை பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 38ஆயிரத்து 635 கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவில்களுக்கு சொந்தமாக 29 கோடி சதுர அடி நிலம் உள்ளது.
ஆனால் இவற்றை முறையாக இந்து சமய அறநிலையத்துறை பராமரிக்காமல் இருப்பதால் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இவற்றை முறையாக பராமரிப்பு செய்து இருந்தாலே வருடத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வந்திருக்கும்.

தமிழக அரசு சார்பில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தால் எந்த பயனும் ஏற்பட போவது கிடையாது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே தானாக மத்திய அரசு நீதி மன்ற தீர்ப்பை நிறைவேற்றும். காவிரி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததற்கு தி.மு.க. தான் காரணம்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்பதற்கு தற்போது ஆங்காங்கு கைது செய்யப்பட்டு வரும் தீவிரவாதிகளே சாட்சி. மற்ற மாநிலங்களில் தீவிரவாத செயல்கள் செய்வதற்கு தமிழகத்தை பயிற்சி மையமாகவும் திட்டமிடுதலுக்கும் மாவோயிஸ்ட்டுகள் மற்றும் சில பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன.
ஒரு சில அமைப்புகள் தற்போது பிணங்களை கடத்தி விற்பனை செய்தும் மனித உறுப்புகளை திருடியும் வருகின்றன. இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு அடுத்தப்படியாக பா.ஜ.க. முன்னேறி வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் மம்தா பானர்ஜி ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளை மூடி வருகிறார்.
நடிகர் கமல் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதை நான் வாழ்த்துகிறேன். ஆனால் இந்த கட்சியால் எந்த பயனும் ஏற்பட போவது கிடையாது. ஒருவேளை பலன் ஏற்படும் என்றால் அது தி.மு.க.வைத்தான் பாதிக்கும். மற்ற கட்சிகளை பாதிக்காது.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews






