என் மலர்
செய்திகள்

கீரனூரில் பேருந்துகள் உரசியதில் பள்ளி மாணவனின் கை நசுங்கியது
கீரனூர்:
கீரனூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. இதனால் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க செல்கின்றனர்.
இவ்வாறு சாலை ஓரங்களில் பைக்குகள் நிறுத்தப்படுவதால் திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் பஸ்ஸ்டாண்டின் உள்ளே செல்லும் வரை கடும் போக்குவரத்து நெரிசல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் பேருந்து ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதே போல் பேருந்து நிலையத்தின் உட்புறத்திலும் பயணிகள் காத்திருக்கும் பகுதி மற்றும் நடைமேடை பகுதிகளில் தரைக்கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளால் சாலை மற்றும் பேருந்து நிலையத்திற்கு வரும் பஸ்கள் அனைத்தும் பெரும்பாலும் மோதுவது போல் சென்று வருகின்றன. பேருந்தில் இருக்கும் பயணிகள் விபத்து ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்துடனயே பஸ்சில் பயணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மோச குடியை சேர்ந்த முருகேசன் மகனும் பள்ளி மாணவனுமான மணிகண்டன் (வயது 7), காவேரி நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தனது பாட்டியுடன் பேருந்தில் ஏறினான். பின்னர் ஜன்னல் ஓரம் உள்ள இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்த்த படி இருந்தான்.
கீரனூர் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு, பஸ் புறப்பட்டு வெளியே வந்தது. அப்போது எதிரே தேவக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் இரு பேருந்துகளும் திடீரென ஒன்றையொன்று உரசிக்கொண்டன.
அப்போது சிறுவன் மணிகண்டன் கதறி அழுதான். பேருந்தில் இருந்த பயணிகள் பார்த்த போது, உரசிக் கொண்டு நின்ற பேருந்துகளின் நடுவே சிக்கி கை நசுங்கி இருந்தது. பின்னர் சிறுவனை மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சாகுல் அமீது, குளித்தலையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews






