என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மின்வாரிய மேற்பொறியாளர் அலுவலகம் முன்பு, புதுக்கோட்டையில் கடந்த 15 வருடங்களாக பணிபுரிந்து வரும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், குறைந்த பட்ச ஊதியம் ரூ.380 வழங்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் சுந்தர வடிவேலு தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். #Tamilnews
    கீரனூர் அருகே தென்ன திரையன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயம் அடைந்தனர்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள தென்னதிரையன்பட்டியில் உள்ள ஆலடிக்கருப்பர் கோவில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெறப்பட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினர். இதைத்தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

    ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர், சிவகங்கை, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 863 காளைகள் அழைத்து வரப்பட்டன. இந்த காளைகளை கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதேபோல் மாடுபிடி வீரர்களை டாக்டர் குழுவினர் பரிசோதனை செய்ததில் 243 வீரர்கள் ஜல்லிக்கட்டுக்கு தகுதி பெற்றனர்.

    ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனை யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளைகள் சீறிப்பாய்ந்து வந்தன. இதில் சில காளைகளை வீரர்கள் அடக்கினர். சில காளைகள் தன்னை பிடிக்க வந்த வீரர்களை கொம்பால் முட்டிதூக்கி வீசின. இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் வீரமணி (வயது 26), தங்கராஜ் (33), பாஸ்கர் (26), தர்மதுரை (25), செல்வம் (21) உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் 4 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளிகாசு, குத்துவிளக்கு, சைக்கிள், குக்கர், பீரோ, கட்டில், சில்வர் பாத்திரங்கள் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை கீரனூர், குளத்தூர், தென்னதிரையன்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள், இளைஞர்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு மந்திரமூர்த்தி, கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுரு தலைமையில் போலீசார் செய்திருந்தனர். 
    கந்தர்வக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அடுத்த கோமாபுரம் அண்ணாநகரில் கடந்த சில நாட்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாரை சரிசெய்ய வேண்டும் என பலமுறை அதிகாரியிடம் மனு கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை கந்தர்வக்கோட்டை - திருச்சி சாலையில் கோமாபுரம் பஸ் நிறுத்தம் அருகே காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த கந்தர்வக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, மண்டல துணை தாசில்தார் ராமசாமி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Tamilnews
    புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் செந்தில்குமாரை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி பகுதியில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி, சிலையை உடைத்ததாக அப்பகுதியை சேர்ந்தவரும், சத்தீஸ்கரில் மத்திய பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் செந்தில் குமாரை சஸ்பெண்டு செய்து மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் அவரது நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்த உள்ளனர். அதன் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
    புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் சிக்கியது பற்றி பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைந்துள்ளது புதுக்கோட்டை விடுதி கிராமம். இங்குள்ள குளம் அருகே பெரியாரின் முழு உருவ சிலை கடந்த 2013 ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியால் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த சிலையை திராவிடர் கழகத்தினர் பராமரித்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று காலை பார்த்த போது பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டு துண்டாக கிடந்தது. மேலும் பெரியாரின் கையில் இருந்த தடியும் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் சிலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுத்தனர். சம்பவ இடத்தில் திராவிட கழகத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர்.

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா பெரியார் குறித்து சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து வேலூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது. தமிழகத்தின் சில இடங்களில் பெரியார், அண்ணா சிலைகள் அவமதிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் , ராகுல்காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் சிலையை உடைத்த மர்நபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஆலங்குடி புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த மத்திய ரிசர்வ் படை தலைமைக்காவலர் செந்தில்குமார் (வயது40) என்பவர் உடைத்திருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் ஆலங்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி கலைநிலா, 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, செந்தில்குமாரை போலீசார் புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.


    பெரியார் சிலையை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் குமார் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி பகுதியை சேர்ந்தவர். சத்தீஸ்கார் மாநிலத்தில் 150-வது பட்டாலியனில் தலைமை காவலராக பணியாற்றி வந்த இவர், 5 நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

    மது பழக்கத்துக்கு அடிமையான இவர் நேற்று முன்தினம் இரவு 1மணிக்கு புதுக்கோட்டை விடுதியில் பெரியார் சிலை அருகே உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் மது கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இல்லையென்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரகளையில் ஈடுபடவே, ஊழியர்கள் அவருக்கு மதுபாட்டில்களை கொடுத்துள்ளனர். அதனை வாங்கி குடித்த அவர், போதையில் அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார்.

    அப்போது பெரியார் சிலை மீது ஏறிய அவர், போதை மயக்கத்தில் சிலையின் தலையை கல்லால் தாக்கியுள்ளார். இதில் தலை துண்டானது. இதனால் பயந்து போன அவர், அங்கிருந்து வீட்டிற்கு சென்று விட்டார்.

    நேற்று காலை பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். போலீசார் சிலையை உடைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற செந்தில்குமார், பொது மக்களுடன் சேர்ந்து போலீசார் நடத்தும் விசாரணையை பார்த்து கொண்டிருந்துள்ளார்.

    இந்தநிலையில் அங்குள்ள டாஸ்மாக் பார் ஊழியர்களிடம் விசாரணை நடத்திய போது, நள்ளிரவு ஒருவர் மது கேட்டு தகராறில் ஈடுபட்டதை தெரிவித்துள்ளனர். இதனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீசார், யாரென்று கண்டு பிடிப்பதற்காக டாஸ்மாக் பாரில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிடவே, அப்பகுதியில் ரிசர்வ் படை போலீஸ்காரர் செந்தில் குமார் சுற்றி திரிந்தது தெரிய வந்தது.

    இதனிடையே போலீசாரிடம் சிக்காமல் இருக்க செந்தில்குமார் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு சென்ற போலீசார், செந்தில்குமாரை விசாரணைக்காக ஆலங்குடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி, எஸ்.பி.செல்வராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், குடிபோதையில் பெரியார் சிலையை உடைத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். #Tamilnews
    புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பாக, சி.ஆர்.பி.எப். வீரர் செந்தில்குமார் என்பவரை போலீசார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைந்துள்ளது புதுக்கோட்டை விடுதி கிராமம். இங்குள்ள குளம் அருகே பெரியாரின் முழு உருவச் சிலை கடந்த 25-4-2013 அன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார்.

    நேற்றிரவு சில மர்ம நபர்கள் பெரியார் சிலையின் தலையை உடைத்து தனியாக துண்டித்தனர். மேலும் பெரியாரின் கையில் இருந்த தடியும் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது. துண்டிக்கப்பட்ட தலை அதே பகுதியில் வீசப்பட்டு கிடந்தது. இன்று காலை அங்கு வந்தவர்கள் சிலை உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அவர்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அரசின் உத்தரவுப்படி உடைக்கப்படும் தலைவர்களின் சிலைகள் உடனடியாக சீரமைத்து பராமரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பெரியாரின் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஆலங்குடி அருகில் பெரியார் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பாக சி ஆர் பி எப் வீரர் செந்தில் குமார் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலை செய்து வருவதும், குடிபோதையில் சிலையை உடைப்பில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து செந்தில்குமாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை அருகே நள்ளிரவில் பெரியார் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டதையடுத்து அதிகாரிகள் உடனடியாக சிலையை சீரமைத்தனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைந்துள்ளது புதுக்கோட்டை விடுதி கிராமம். இங்குள்ள குளம் அருகே பெரியாரின் முழு உருவ சிலை கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந்தேதி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியால் திறந்துவைக்கப்பட்டது.

    அப்போதைய புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராவணன் தலைமையில் நடந்த இந்த விழாவை தொடர்ந்து திராவிடர் கழகத்தினர் தொடர்ந்து அந்த சிலையை பராமரித்து வந்தனர். பெரியார் நினைவு நாள், பிறந்தநாளன்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதிக்கு யாரோ மர்ம நபர்கள் பெரியார் சிலையின் தலையை உடைத்து தனியாக துண்டித்துள்ளனர். மேலும் பெரியாரின் கையில் இருந்த தடியும் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது.



    துண்டிக்கப்பட்ட தலை பகுதி அதே பகுதியில் வீசப்பட்டு கிடந்தது. இன்று காலை அங்கு வந்தவர்கள் சிலை உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அவர்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து வந்தனர்.

    மேலும் அங்கு பதட்டத்தை தவிர்க்கும் வகையிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.

    அரசின் உத்தரவுப்படி உடைக்கப்படும் தலைவர்களின் சிலைகள் உடனடியாக சீரமைத்து பராமரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி அதிரடியாக செயல்பட்ட அதிகாரிகள் காலை 8 மணிக்கு முன்னதாக உடைக்கப்பட்ட பெரியார் சிலையின் தலையை ஒட்டவைத்தனர். இருந்தபோதிலும் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா வின் பெரியார் குறித்த டுவிட்டர் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு வலுத்து வந்த நிலையில் வேலூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது. நேற்று முன்தினம் நாமக்கல் அருகே பெரியார், அண்ணா சிலைகள் அவமதிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தற்போது ஆலங்குடி அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. #tamilnews

    புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான புல் பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
    புதுக்கோட்டை: 

    புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட டி.வி.எஸ். கார்னர் பகுதியில் உள்ள மறுப்பிணி சாலையில் புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான புல் பண்ணை சுமார் 60 ஏக்கரில் உள்ளது. இந்த புல்பண்ணையில் புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பாய்ச்சப்படுகிறது. இந்த புல் பண்ணையில் இருந்து புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் தங்களது வீடுகளில் உள்ள கால்நடைகளுக்கு புல்களை வாங்கி செல்கின்றனர். இவர்களுக்கு 3 கிலோ எடை கொண்ட புல்கட்டு ரூ.6–க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த புல் பண்ணை மூலம் புதுக்கோட்டை நகராட்சிக்கு ஆண்டிற்கு ரூ.30 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. இந்த புல் பண்ணையில் சுமார் 12–க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் புல் பண்ணையில் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    தொடர்ந்து தீ மள மளவென பரவியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

    தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், நகராட்சி பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் பணியில் நகராட்சி தண்ணீர் லாரியும் ஈடுபடுத்தப்பட்டது. இருப்பினும் புல்கள் பண்ணையில் உள்ள சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து இருந்த புற்கள் தீயில் கருகியது. இந்த தீ விபத்து குறித்து புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் கணேஷ்நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை அருகே சொத்து தகராறில் தாயை கொன்ற மகன், துண்டித்த தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மறவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி ராணி(வயது 50). இவரது மகன் ஆனந்த்(23), கட்டிட தொழிலாளி.

    இந்தநிலையில் ஆனந்த் தனக்குரிய சொத்தை பிரித்து தருமாறு பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் மறுத்து விட்டனர். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று காலையும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆனந்தை, அவரது தாய் கண்டித்துள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த ஆனந்த், தாய் என்றும் பாராமல் ராணியை சரமாரி அரிவாளால் வெட்டினார். மேலும் ஆத்திரம் தீராத அவர், ராணியின் தலையை தனியாக துண்டித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதையடுத்து துண்டித்த தாயின் தலையுடன் கறம்பக்குடி போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆனந்த் சரணடைந்தார். இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் ஆனந்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை, கரூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்தநிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டத்தின் சில இடங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    இன்று அதிகாலை மாவட்டத்திற்குட்பட்ட கோட்டைப்பட்டினம், மீமிசல் ஆகிய பகுதிகளில் ஒரு மணிநேரம் வரை மழை பெய்தது. இதே போல் அறந்தாங்கியிலும் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    கரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.கரூர் நகரில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    மாயனூர்-15, பால விடுதி-18.03, பஞ்சப் பட்டி-10.3, கிருஷ்ணராயபுரம்-10, அரவக்குறிச்சி-0.8.

    திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. #tamilnews

    மணமேல்குடி அருகே உள்ள கட்டுமாவடியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    மணமேல்குடி:

    மணமேல்குடி அருகே உள்ள கட்டுமாவடியில் நாட்டுப்படகு மீன்பிடி தளம் உள்ளது. இங்கிருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் வழக்கம்போல் நேற்று முன்தினம் மீன்பிடித்து விட்டு, இரவு தங்களது படகுகளை கரையோரத்தில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றனர்.

    இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க வந்தபோது, கடல்நீர் சுமார் 200 மீட்டர் வரை உள்வாங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பாசிகள், கடல் சிற்பிகள் மற்றும் சேறு, சகதியுமாக காணப்பட்டது. தொடர்ந்து மீன்வர்கள் கரை தட்டி நின்ற தங்களது நாட்டுப்படகுகளை கடலுக்கு தள்ளி சென்று மீன்பிடிக்க சென்றனர். கட்டுமாவடி பகுதியில் கடல் திடீரென உள்வாங்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து நாட்டுப்படகு மீனவர் கணேசபுரம் ராஜசேகர் கூறுகையில், தற்போது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி கொண்டல் காற்று வீசுவதால் அதிகமான கடல் நீர் கரைக்கு வெள்ளம்போல் வரும். இல்லையென்றால் கடல் நீர் உள்வாங்கும். கொண்டல் காற்று கடலில் வீசுவது நின்று விட்டால் கடல் நீர் இயல்பு நிலைக்கு மாறும். இது அடிக்கடி நடைபெறும் நிகழ்வு தான். இதனால் பயப்பட தேவையில்லை என்றார். #tamilnews
    அறந்தாங்கி அருகே ஆழ்துளை கிணற்றில் பழுது ஏற்பட்டதால் குடிநீர் 2 மாதமாக கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி ஒன்றியம், ராஜேந்திரபுரம் ஊராட்சி எருக்கலக்கோட்டையில் 250 வீடுகளில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆழ்துளை கிணற்றில் பழுது ஏற்பட்டதால் கடந்த 2 மாதங்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலை இருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலை எருக்கலக் கோட்டையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏவும், அறந்தாங்கி வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளருமான மெய்ய நாதன் பொதுமக்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். மறியலில் ஈடுபட்டவர்களுடன் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கை விட்டனர். #tamilnews
    ×