என் மலர்
செய்திகள்

மணமேல்குடி அருகே கட்டுமாவடியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
மணமேல்குடி அருகே உள்ள கட்டுமாவடியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணமேல்குடி:
மணமேல்குடி அருகே உள்ள கட்டுமாவடியில் நாட்டுப்படகு மீன்பிடி தளம் உள்ளது. இங்கிருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் வழக்கம்போல் நேற்று முன்தினம் மீன்பிடித்து விட்டு, இரவு தங்களது படகுகளை கரையோரத்தில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க வந்தபோது, கடல்நீர் சுமார் 200 மீட்டர் வரை உள்வாங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பாசிகள், கடல் சிற்பிகள் மற்றும் சேறு, சகதியுமாக காணப்பட்டது. தொடர்ந்து மீன்வர்கள் கரை தட்டி நின்ற தங்களது நாட்டுப்படகுகளை கடலுக்கு தள்ளி சென்று மீன்பிடிக்க சென்றனர். கட்டுமாவடி பகுதியில் கடல் திடீரென உள்வாங்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து நாட்டுப்படகு மீனவர் கணேசபுரம் ராஜசேகர் கூறுகையில், தற்போது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி கொண்டல் காற்று வீசுவதால் அதிகமான கடல் நீர் கரைக்கு வெள்ளம்போல் வரும். இல்லையென்றால் கடல் நீர் உள்வாங்கும். கொண்டல் காற்று கடலில் வீசுவது நின்று விட்டால் கடல் நீர் இயல்பு நிலைக்கு மாறும். இது அடிக்கடி நடைபெறும் நிகழ்வு தான். இதனால் பயப்பட தேவையில்லை என்றார். #tamilnews
Next Story






