என் மலர்
செய்திகள்

அறந்தாங்கி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
அறந்தாங்கி அருகே ஆழ்துளை கிணற்றில் பழுது ஏற்பட்டதால் குடிநீர் 2 மாதமாக கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி ஒன்றியம், ராஜேந்திரபுரம் ஊராட்சி எருக்கலக்கோட்டையில் 250 வீடுகளில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆழ்துளை கிணற்றில் பழுது ஏற்பட்டதால் கடந்த 2 மாதங்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலை இருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலை எருக்கலக் கோட்டையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏவும், அறந்தாங்கி வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளருமான மெய்ய நாதன் பொதுமக்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். மறியலில் ஈடுபட்டவர்களுடன் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கை விட்டனர். #tamilnews
Next Story






