என் மலர்
புதுக்கோட்டை
ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையின் சார்பில் அக்டோபர் மாதம் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை வன உயிரின வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாவட்ட அளவில் ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம்.
வழக்கம்போல் இந்த ஆண்டு வன உயிரின வார விழாவை முன்னிட்டு, வன உயிரின பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகள் மற்றும் வினாடி-வினா போட்டிகள் நேற்று புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் தண்ணீருக்கு கீழே வாழ்க்கை என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும், சுற்றுச் சூழல் காடுகள் மற்றும் வன விலங்குகள் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டியும், மனித வனவிலங்கு மோதல்கள் மற்றும் தணிப்பு என்ற தலைப்பிலும் பேச்சுப்போட்டியும் நடைபெற்றது.
இதில் எல்.கே.ஜி. முதல் 4-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டியும், 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றது. இதேபோல கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார் பார்வையிட்டார். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 635 கலந்து கொண்டனர்.
இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதேபோல போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் வனச்சரக அலுவலர்கள் சதாசிவம், சங்கர், வனவர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டிருந்தது அதிர்ச்சி அளிக்கிறது. கல்வி காவி மயமாவதை இந்த சம்பவம் உறுதிபடுத்துகிறது. இதுபோன்ற கேள்வி கேட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடப்புத்தகத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வினா எழுப்பும்படியான பாடத்திட்டத்தை நீக்க வேண்டும்.

ராம்ஜெத்மலானியின் இழப்பு அரசியல் மற்றும் சட்டத்துறைக்கு பேரிழப்பு. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். தமிழக முதல்வர் வெளிநாட்டு பயண முடித்துக்கொண்டு திரும்பி வந்து அவர் தொழிலில் முதலீடு எவ்வாறு பெற்று உள்ளார் என்ற அறிக்கையை பொறுத்தே அது குறித்து விமர்சனம் செய்ய முடியும்.
சிதம்பரத்தை போன்று ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறிவருவது, அது அவர்களுடைய ஆசையாக இருக்கலாம். ஆனால் அந்த ஆசை நிறைவேறாது. இஸ்ரோ விஞ்ஞானிகள் படைத்திருப்பது மிகப்பெரிய சாதனைதான். சந்திரயான்-2 பின்னடைவு சந்திப்பதற்காக விஞ்ஞானிகள் கலங்க வேண்டியதில்லை தொடர்ந்து முயற்சிகளை விஞ்ஞானிகள் செய்யவேண்டும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையிலிருந்து போஸ்நகர் வழியாக மணிப்பள்ளம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதைக் கண்டித்தும், புதிய தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தியும் கடந்த 17.6.2019 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், சாலையில் பரப்பப்பட்ட சரளைக் கற்களால் வாகனம் ஓட்ட முடியாமலும், அந்தப் பகுதியில் தூசி படர்ந்ததாலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனைத் தொடர்ந்து சாலையை உடனடியாக சீரமைக்ககோரி இந்திய ஜனநாயக வாலிபர்சங்கத்தின் சார்பில் நேற்று போஸ் நகரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் தலைமை வகித் தார். நகரச்செயலாளர் எஸ்.பாபு, பொருளாளர் டேவிட், துணைச் செயலாளர் ஜெகன், சிபிஎம் நகரக்குழு உறுப்பினர் ஆர்.சோலையப்பன், சிஐடியு சார்பில் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து கோட்டாட்சியர் சண்முக நாதன் தலைமையில், நெடுஞ்சாலை துறை உதவிக் கோட்டப் பொறியாளர் சரவணன் முன்னிலையில் பேச்சுவார்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடனடியாக சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஆலங்குடி:
திருவரங்குளம் ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேப்பங்குடி கிளை கூட்டம் நடைபெற்றது. அடைக்கலம் தலைமை வகித்தார். கிளை செயலாளர் சங்கர்கணேஷ் அறிக்கை சமர்ப்பித்தார். ஒன்றிய செயலாளர் சொர்ணகுமார், துணை செயலாளர் செல்வராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் குமார் ஆகியோர் பங்கேற்று கூட்டத்தை நடத்தினர்.
கூட்டத்தில் படுமோசமான திருவரங்குளம் வேப்பங்குடி சாலையை செப்பனிட வேண்டும், அடிப்படை வசதிகள் இல்லாத மயானத்தை சரி செய்ய வேண்டும், ஆமை வேகத்தில் நடைபெறும் வேப்பங்குடி திருகட்டளை இணைப்புச்சாலையை துரிதப்படுத்த வேண்டும், வேப்பங்குடி கிராமத்தில் தனியாக போர் போட்டு குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10.9.2019 அன்று மாநில அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தில் உள்ள வெட்டுக்குளம் ஆக்கிரமிப் பால் முற்றிலும் மறைந்தது. குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக கறம்பக்குடி பகுதியில் கருத்தாயுதக்குழு என்ற அமைப்பு சார்பில் திடீரென பல்வேறு இடங்களில் வித்தியாசமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அதில், வேலைக்கு ஆட்கள் தேவை என்ற தலைப்பில், மதுரை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி, புதுக்கோட்டை மாவட்டம் குளந்திரான்பட்டு கிராம வெட்டுக் குளத்தை எப்படியாவது மத்திய புலனாய்வு துறை மூலமாவது கண்டுபிடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, இந்திய அரசியல் அமைப்பு விதிகளின்கீழ் பணிபுரிய உண்மையான அரசு பணியாளர்கள் தேவை என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.
மேலும் அதில் காலி பணியிடங்களானது மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் என்றும், அதற்கான தகுதி பொது அறிவு, சுயமரியாதை, தன்னொழுக்கம் என்றும், விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி 10.9.2019. விண்ணப்பங்களை தபாலிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ அனுப்பி வைக்கலாம்.
நேர்முக தேர்வுக்கு வரும் போது அமைச்சர், ஆளும் கட்சி பிரமுகர்கள், சிபாரிசு கடிதங்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இப்படிக்கு கருத்தாயுதக்குழு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள ஒரு போன் நம்பரையும் பிரசுரித்து இருந்தனர்.
இந்த போஸ்டர்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்டுத்தியதுடன், அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த போஸ்டர்களை ஒட்டியது அதே பகுதியை சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான துரை குணா என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குளந்திரான்பட்டு கிராம நிர்வாக அலுவலர், கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், துரை குணா மீது அரசு அதிகாரிகளை இழிவுப்படுத்தியது, அவதூறு பரப்பியது 170, 501 என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று மாலை அவரை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் துரை குணாவை புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.
முன்னதாக துரைகுணா நிருபர்களிடம் கூறுகையில், என் மீது போடப்பட்ட வழக்கு 3 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. நான் பிறக்கும்போதும் குளம் இல்லை. நான் சிறைக்கு போகும் போதும் குளம் இல்லை. நான் வெளியே வரும் போதாவது குளம் இருக்குமா? என்று பார்ப்போம். அரசுக்கு எதிராக யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று அரசு கருதுகிறது. நான் ஒரு எழுத்தாளர். நியாயம், நீதியை தட்டிக்கேட்பேன் என்றார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள அம்மையன்புரத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவரது மகன் முத்துக்கருப்பன் (வயது 35). தச்சுத்தொழிலாளி. இவருக்கு அஞ்சலை (34) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். முத்துக்கருப்பன் தினமும் கிடைக்கும் வருமானத்தில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, அஞ்சலையுடன் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 31-ந்தேதி முத்துக்கருப்பன் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலை, கணவரை கட்டிலில் தள்ளியுள்ளார். பின்னர் அஞ்சலை தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கினார். இந்நிலையில் இரவில் அவர், முத்துக்கருப்பனை பார்த்தபோது அவர் பேச்சு, மூச்சு இல்லாமல் கிடந்தார். மேலும் அவரை எழுப்பிய போது, அவர் எழவில்லை. இதையடுத்து முத்துக்கருப்பன் இறந்து கிடந்தது அஞ்சலைக்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அஞ்சலை, யாருக்கும் தெரியாமல் முத்துக்கருப்பனின் உடலை இழுத்துச்சென்று வீட்டருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு, ஒன்றும் நடக்காதது போல் வீட்டில் படுத்து தூங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று கிணற்றுக்குள் முத்துக்கருப்பன் பிணமாக கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, ஆலங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிணற்றுக்குள் இறங்கி முத்துக்கருப்பனின் உடலை கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அஞ்சலை தள்ளி விட்டதில் முத்துக்கருப்பன் இறந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அஞ்சலையை கைது செய்து புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதற்கிடையே தந்தையையும், தாயையும் பிரிந்த குழந்தைகள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. தொழிலாளியை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






