என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் நேற்று இரவு கனமழை பெய்தது.வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருவதால் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
நேற்று இரவு புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திருமயம், கறம்பக்குடி, பெருங்களூர், ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட பெரும் பாலான பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. புதுக்கோட்டை மேல ராஜவீதியில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
நகரின் பெரும்பாலான பகுதிகளில் வாய்கால்கள் சரி செய்யபடாததால் சாலைகளில் மழை நீர் ஓடியதாலும், ஒருமணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த கன மழையால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தேரோடும் மேலவீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்.இவரது மனைவி புஷ்பம்(வயது70). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்.
காலையில் வீட்டின் பின்புறமாக சென்றபோது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். உடனே ஆலங்குடி தீயணைப்பு மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் கிணற்றில் விழுந்த புஷ்பத்தை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூதாட்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஷ்டம் என்பது அனைவருக்கும் வரும், அதை தாங்கிக் கொண்டு எப்படி நடந்து கொள்வது என்பது தான் முக்கியம். மருத்துவர்களைத் தேடி மக்கள் சென்ற நிலை மாறி, மக்களை தேடி மருத்துவர்கள் செல்ல வேண்டும் என்பதற்காக இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது.
தமிழக அரசு மத்திய அரசோடு இணைந்து முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
அதற்காக கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து அதன்படி, தற்போது மருத்துவ முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஒரு கோடியே 57 லட்சம் குடும்பங்கள் உள்ளனர். அதில் 37 லட்சம் குடும்பத்தினர் முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ளனர். இதில் ஏறத்தாழ 100 பேர் உயர்தர மருத்துவ சிகிச்சை பெற விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன் அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு ஒழிப்பு பணியில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று அங்கு டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு என்று சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன. முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சிலர் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் டெங்கு பாதிப்பு என்பது இதுவரை தமிழகத்தில் இல்லை. தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 அ.தி.மு.க. அதிக வாக்குகள் பெற்று உள்ளது. மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தான் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பின்னடைவை சந்தித்தது.
தமிழக அரசின் சாதனைகள் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றோடு பிரசாரத்தில் ஈடுபட்டு, நடக்கவுள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானபேர் விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கறம்பக்குடி அரசு மருத்துவமனை, மழையூர், ரெகுநாதபுரம், வானக்கன்காடு, பாப்பாபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கறம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் வசிக்கும் தி.மு.க. வட்ட பிரதிநிதி போஸ்குமார் (வயது 40) என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் போஸ்குமாருக்கு ரத்த பரிசோதனை செய்ததில், அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போஸ் குமார் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கறம்பக்குடி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள். இதனால் பருவமழை தொடங்கும் காலத்தில் சுகாதாரத்துறை சார்பில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது வழக்கம். இதேபோல இந்த ஆண்டும் சுகாதாரத்துறையினர், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது. இருப்பினும் வேகமாக பரவும் காய்ச்சல் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே காய்ச்சலை கட்டுப்படுத்த கறம்பக்குடி பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். மேலும் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், மீமிசல், மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள்.
இந்தநிலையில் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலவலக அனுமதியுடன் 80 விசைப்படகுகளில் 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த விஜயேந்திரன் (வயது 48) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் மற்றும் ராமு (49), சின்னையன் (40), ஜேசு (39) உள்பட 5 பேர் சென்றனர். அவர்கள் 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் வந்தது. அதிலிருந்த கடற்படையினர், இது இலங்கைக்கு சொந்தமான கடல் பரப்பு, இந்த பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பலமுறை எச்சரித்தும் நீங்கள் ஏன் இங்கு மீன் பிடிக்கிறீர்கள் என்று கேட்டனர்.
பின்னர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி அந்த படகில் இருந்த மீனவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் படகில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலையுயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்ட இலங்கை கடற்படையினர் படகையும் சிறைப்பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
அங்குள்ள காங்கேசன் துறைமுகம் அலுவலகத்தில் தங்க வைப்பட்ட மீனவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரிய வரும்.
நேற்று இலங்கை சிறையில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 2 மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் 5 மீனவர்களை கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா சேவகன் தெருவை சேர்ந்தவர் பெரியதம்பி (வயது 71). இவர் தனது மனைவி சின்ன பொண்ணு மற்றும் பேரக்குழந்தைகள்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
தனக்கு சொந்தமான நிலத்தை அவரது உறவினர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருவதாகவும், அதனை மீட்டு தருமாறும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட முறை மனுக்கள் அளித்துள்ளார். அந்த மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடும்பத்துடன் மண்எண்ணையுடன் வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு தனது உடம்பில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்த காவல் துறையினர் அவரிடம் இருந்து மண்எண்ணையும், அவர் குடும்பத்தையும் மீட்டு காவல் துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பின்னர் திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். அவர் கொண்டு வந்த மனுவில் தனக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களை கொண்டு கிராம உதவியாளரின் தந்தை தனது பெயரையும், அவரது தந்தை பெயரையும் சேர்த்து கூட்டு பட்டாவாக கொடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
போலீசார் சோதனையை மீறி கடந்த ஜூன் மாதமும் குறைதீர் கூட்டத்திற்கு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீ குளிக்க முயன்றனர். மீண்டும் இதேபோன்று சம்பவம் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்க வேண்டும் என மனு கொடுக்க வந்தவர்கள் கூறினர்.
ஆலங்குடி:
ஆலங்குடி மேலநெம்ம கோட்டையைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 52). இவரும் ஆலங்குடி இந்திராநகர் முத்தையா மகன் முருகன் (40). இவர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் இருவரும் ஆலங்குடி சந்தப்பேட்டையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தாமரைச்செல்வன் உருட்டு கட்டையால் முருகனை பலமாக தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல்அறிந்ததும் ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தாமரைச் செல்வனை கைது செய்தனர்.
மாவட்டத்தில் கிராமங்களில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் கண்மாய்கள் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரப்பட்டு வருவதை போன்று நகர்புறங்களில் உள்ள குளங்களும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தூர்வாரப்பட்டு மேம்படுத்தப்படுகிறது. புதுக்கோட்டையில் உள்ள 46 குளங்களில், நகராட்சியின் கட்டுப்பாட்டில் 36 குளங்கள் உள்ளன. புதுக்கோட்டையில் உள்ள குளங்கள் மற்றும் நீர்வரத்து வாரிகள் தூர்வாரப்பட்டு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன.
குளங்களுக்கான பழமை வாய்ந்த வரத்துவாரிகள் கண்டறியப்பட்டு, அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நகராட்சியில் உள்ள அனைத்து குளங்களுக்கும் நகரின் பிற பகுதிகளில் பெய்யும் மழைநீர் வீணாகாமல் நேரடியாக குளங்களை வந்தடையும். இதன்பயனாக தற்போது பெய்துவரும் மழைநீர் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள குளங்களில் முழுவதுமாக சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
தற்போது நகராட்சியில் உள்ள குளங்களை தூர்வாரும் வகையில் 2017-18-ம் நிதியாண்டில் நீர்நிலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை நகராட்சிக்கு ரூ.14 கோடியே 90 லட்சம் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இந்த நிதியின்மூலம் நகராட்சியில் உள்ள காந்தி பூங்கா குளம், குமுந்தான் குளம், புதுஅரண்மனை குளம், மல்லான்குளம், இப்ராம்ஷா குளம், பழனியப்பா ஊரணி போன்ற பல்வேறு குளங்களை தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்தி நடைபாதை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல குளங்களுக்கு வரும் நீர்வரத்து வாய்க்கால்களை முழுவதுமாக சிமெண்டு தளங்களாக மாற்றும் பணி செயல்படுத்தப்படுகிறது. மேலும், வரத்துவாரிகள் 5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது.
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள குளங்களுக்கு வரும் 12 மழைநீர் வரத்து வாய்க்கால்கள் 6 ½ கிலோ மீட்டர் நீளத்திற்கு முழுவதுமாக சிமெண்டு தரைத்தளமாக அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. இதனால் மழைநீர் வீணாகாமல் குளங்களுக்கு வரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுதவிர மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவுடன் முழுமையாக இணைக்கப்படாமல் இருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பிரதமர் நரேந்திர மோடி முயற்சியால் ஒன்றாகியுள்ளது. நடக்காது என்று எதிர்க்கட்சிகள் கூறி வந்த ஒரு பிரச்சனையை மிக எளிதாக பிரதமர் முடித்து காட்டியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 1971-ல் இருந்து கவனித்து வருகிறேன்.
அரசியல் சட்டப்பிரிவு 21ஐ பற்றி பேச அவருக்கு எந்த தகுதியும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சாத்தான் வேதம் ஓதுவது போன்று அவருடைய பேச்சும், கருத்துக்களும் உள்ளன. வங்கி பணத்தை சூறையாடியது காங்கிரஸ்தான்.
ஊழலில் ஈடுபட்ட ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் டுவிட் செய்திருப்பது வேதனைக்குரியது. நாட்டில் உள்ள வங்கிகளையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்த முதல் குற்றவாளி ப.சிதம்பரம். விரைவில் அவரைப்போல தமிழகக்தின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவரும் கைதாக இருக்கிறார். அதற்கு முன்னதாக தங்களுடன் இலவச இணைப்பில் உள்ள அந்த கட்சியை தி.மு.க. கழற்றி விட்டால் அவர்களுக்கு நல்லது.
நீர் மேலாண்மையில் தனி கவனம் செலுத்த வேண்டும். போதுமான தடுப்பணைகளை கட்டவேண்டும் என்று தமிழக அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக முதல்வர் பழனிசாமி, இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
விவசாயிகள் என்ற பெயரில் நாட்டில் உள்ள பணக்காரர்கள்தான் வங்கிகளில் இருந்து நகைக்கடன் பெறுகின்றனர். உண்மையான விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக நகைக்கடன் வழங்குவதில் புதிய முயற்சியை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது. இதன் மூலம் உண்மையான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
தோளில் பச்சை சால்வை அணிந்திருப்பவர்களை எல்லாம் விவசாயிகள் என்று கூறக்கூடாது. விளை நிலத்தில் வியர்வை சிந்தி உழைப்பவர்களை மட்டுமே விவசாயிகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அகில இந்திய தலைமை யாரை அடையாளம் காட்டுகிறதோ, அவர் தான் தமிழக பா.ஜ.க. தலைவராக பதவி ஏற்பார். அவரை அனைவரும் ஏற்றுக்கொள்வோம். கட்சி நிர்வாகிகளுக்கு பதவி கொடுப்பது அகில இந்திய தலைமையின் முடிவு. இதில் பிற கட்சிகள் கருத்து சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






