என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அறந்தாங்கி விவசாயியிடம் சோப்பு வாங்கினால் கார், மோட்டார் சைக்கிள் வழங்குவதாக கூறி, 2 பேர் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சிலட்டூரை சேர்ந்தவர் தங்கராசு (வயது 45), விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபோது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த காந்தீஸ்வரன் (32), பேச்சிமுத்து (40) ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் தங்கராசுவிடம், நாங்கள் சோப்பு வியாபாரம் செய்கிறோம். எங்களிடம் சோப்பு வாங்கினால் அதில் ஒரு கூப்பன் இருக்கும். அந்த கூப்பனில் எந்த பொருள் உள்ளதோ, அதனை பரிசாக வழங்குவோம் என்றனர்.

    இதையடுத்து தங்கராசு, சோப்பு ஒன்றை வாங்கி, அதில் இருந்த கூப்பனை பிரித்து பார்த்தபோது அதில் ஸ்டவ் அடுப்பு இருந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த தங்கராசுவுக்கு, காந்தீஸ்வரனும், பேச்சிமுத்துவும் ஸ்டவ் அடுப்பை பரிசாக வழங்கினர். மேலும் அவரிடம், இந்த பரிசுக்கு மற்றொரு பரிசு உண்டு என்று தெரிவித்ததுடன், அதில் உங்களுக்கு மோட்டார் சைக்கிள் விழுந்துள்ளது என்றனர்.

    ஸ்டவ் அடுப்பை பரிசாக தந்ததால் மோட்டார் சைக்கிளையும் தந்து விடுவார்கள் என்று எண்ணிய தங்கராசுவிடம், 2 பேரும் மோட்டார் சைக்கிள் பெற வேண்டுமென்றால் அதற்கு வரியாக ரூ.10 ஆயிரம் நீங்கள் கட்ட வேண்டும். அதற்கான பணத்தை தந்தால் நாங்கள் நாளையே உங்களுக்கு மோட்டார் சைக்கிளை கொண்டு வந்து தருவோம் என்றனர்.

    அவர்களது பேச்சில் மயங்கிய தங்கராசு ரூ.10 ஆயிரத்தை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட 2 பேரும், பிறகு மறுநாள் தங்க ராசு வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது தங்கராசுவிடம், உங்களுக்கு மோட்டார் சைக்கிளை விட கார் பரிசாக தருகிறோம். ஏனென்றால் ஒருவருக்கு கார் பரிசு விழுந்துள்ளது. ஆனால் அவர் அதற்கான வரி ரூ.45 ஆயிரத்தை கட்ட முடியாது என்று கூறிவிட்டதால், அந்த காரை நாங்கள் உங்களுக்கு பரிசாக தருகிறோம். அதற்கு நீங்கள் வரியாக ரூ.45 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசியதால் தங்க ராசு, ரூ.45 ஆயிரத்தை 2 பேரிடமும் கொடுத்தார்.

    அதனை பெற்றுக்கொண்ட 2 பேரும் , நாளை உங்களுக்கு காரை பரிசாக தருகிறோம் என்று தெரிவித்து சென்றுவிட்டனர்.

    மறுநாள் தங்கராசுவை தொடர்பு கொண்டு பேசிய காந்தீஸ்வரன், பேச்சிமுத்து, நாங்கள் உங்களுக்கு பரிசாக தர காரில் வந்து கொண்டிருந்தோம். ஆனால் வழியில் சோதனை நடத்திய போலீசார், காருக்கான ஆவணங்களை கேட்டனர். புதிய கார் என்பதால் எங்களிடம் ஆவணங்கள் இல்லை.

    எனவே அதற்கு அபராதமாக ரூ.20 ஆயிரம் செலுத்திவிட்டு செல்லுங்கள் என்று இன்ஸ்பெக்டர் கூறுகிறார். நாங்கள் அவ்வளவு பணம் எடுத்துவரவில்லை. நீங்கள் அந்த பணத்தை தந்தால் நாங்கள் காரை கொண்டு வந்து விடுவோம். பணத்தை நேரில் வந்து கொடுத்தாலும் சரி அல்லது வங்கி கணக்கில் செலுத்தினாலும் சரி, உங்களுக்கு எப்படி வசதிபடுகிறதோ? அதுபோல் செய்யுங்கள் என்றனர். தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டது தங்கராசுவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    புகார்

    இதையடுத்து 2 பேரையும் கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்த அவர், இதுகுறித்து அறந்தாங்கி போலீசில் நேரில் சென்று புகார் செய்தார். உடனே போலீசார் தங்கராசுவிடம் நீங்கள் ரூ.20 ஆயிரத்தை கையில் எடுத்து சென்று கொடுங்கள். நாங்கள் பின்னால் வந்து மடக்கி பிடிக்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

    அதன்படி தங்கராசு ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு, காந்தீஸ்வரன், பேச்சிமுத்து ஆகியோர் நின்ற பகுதிக்கு சென்று பணத்தை கொடுக்க இருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சதுரங்கவேட்டை சினிமா படத்தில் பரிசு பொருள் வழங்குவதாக கூறி, ஒருவரின் ஆசையை தூண்டி பொதுமக்களிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும். அதுபோல் அறந்தாங்கி விவசாயியிடம் சோப்பு வாங்கினால் கார், மோட்டார் சைக்கிள் வழங்குவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காந்தீஸ்வரன், பேச்சிமுத்து மட்டுமின்றி இன்னும் சிலர் நெட்வொர்க் அமைத்து தமிழகம் முழுவதும் பரிசு பொருட்கள் தருவதாக பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகையை யொட்டி பணப்புழக்கம் அதிகம் இருக்கும் என்பதால் தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பல்வேறு அறிவுரைகள் கூறியும் பொதுமக்கள் பலர் மோசடி நபர்களிடம் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் நபர்களை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    திருச்சி அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு தெரிவித்ததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னமராவதி:

    திருச்சி சொக்கம்பட்டி அருகே உள்ள அயன் பொருவாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 39). இவரது மனைவி தமிழரசி (30). இவர்கள் கோயமுத்தூரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு வந்துள்ளது. இதனால் தமிழரசி கோபித்துக்கொண்டு பொன்னமராவதி அருகே கொன்னையம்பட்டியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து கடந்த 24ம்தேதி தமிழரசியை அழைத்து செல்ல கொன்னையம்பட்டிக்கு முருகேசன் வந்து கூப்பிட்டுள்ளார். ஆனால் தமிழரசி வரவில்லை. மீண்டும் கடந்த 25ம்தேதி தமிழரசியை அழைத்தபோது அவர் வராததால் மனமுடைந்த முருகேசன் தான்கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் முருகேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து முருகேசனின் தாய் சிவபாக்கியம், காரையூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஆலங்குடியில் ஆழ்குழாய் கிணற்றை சீரமைக்ககோரி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகேயுள்ள பெருங்கொண்டான் விடுதியில் குடிநீருக்காக ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லை. எனவே கிணற்றை சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கை  விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலை கூழையன் விடுதி பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல்அறிந்த சம்பட்டிவிடுதி போலீசார் மற்றும் புதுக்கோட்டை ஊராட்சி  ஒன்றிய துணை ஆணையர் சத்தியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
    குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் உமா மகேஸ்வரி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் உமா மகேஸ்வரி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி நீர் ஆதாரங்களை சீரமைத்து அதன் மூலம் மழைநீரை சேமித்து நிலத்தடி நீரை மேம்படுத்தவும், நீர் பயன்பாட்டை முறையாக ஒழுங்குபடுத்தவும், முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் குடிமராமத்து பணிகள் விவசாய பாசனதாரர்களின் பங்களிப்புடன் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் இன்றையதினம் குன்றாண்டார்கோவில் ஒன்றியம், கோவில் வீரக்குடி கிராமத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குமரமுத்தான்குளம் கண்மாய் பாசன வாய்க்கால் கட்டுமானப் பணியையும் மற்றும் தூர்வாரும் பணியையும், வத்தனாக்குறிச்சி கிராமத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வத்தனாக் குறிச்சி பெரியகுளம் பாசன வாய்க்கால் கட்டுமானப் பணியையும் மற்றும் தூர்வாரும் பணியையும் என மொத்தம் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    ஆய்வின் போது பாசன வாய்க்கால் கட்டுமான பணிகளை தரமாக மேற் கொண்டு விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர் களுக்கு உத்தர விடப்பட்டுள் ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.

    நார்த்தாமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலையை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 40). தொழிலாளி. இவரது நண்பர் துவரவயலை சேர்ந்த பழனிச்சாமி (35). இவர்கள் இருவரும் பொம்மாடிமலையில் இருந்து நார்த்தாமலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். நார்த்தாமலை கூட்டுறவு வங்கி அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சின்னத்தம்பி, பழனிச்சாமி ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் அந்த வழியாக நடந்து சென்ற ஜன்னத்பேகம் என்ற பெண் மீதும் கார் மோதியதில் அவரும் படுகாயமடைந்தார்.

    இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் ஜன்னத்பேகத்தை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சின்னத்தம்பி, பழனிச்சாமி ஆகிய 2 பேரின் உடலைகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு கார் டிரைவர் கீழக்குறிச்சியை சேர்ந்த செல்லத்துரை மகன் முருகேசனை (32) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டையில் குடிநீர் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை தெகுநாதபுரம் ஆதி திராவிடர் காலணியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து உடனடியாக குடிநீர் வழங்கவும், வடிகால் வசதி ஏற்படுத்தித்தரவும் வலியுறுத்தி தெகுநாதபுரம், புதுவிடுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

    போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ், கறம்பக்குடி காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதவள்ளி, உதவி மின் பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் பேச்சுவர்த்தை நடத்தினர். உடனடியாக மின்மாற்றியை சரி செய்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வது என்றும், வாய்க்கால் தூர்வாரப்பட்டு கழிவுநீரை வெளியேற்றுவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
    அன்னவாசல் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட வயலோகம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக கோகிலா என்பவர் பணியாற்றி வந்த நிலையில், அவர் தற்போது தொடர் பணி விடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் வயலோகம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு, தற்காலிகமாக கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க வில்லை எனவும், இதனால் அலுவலகம் திறக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சாதி, வருமானம், இருப்பிட சான்றுகளும், முதல் திருமண சான்று, முதல் பட்டதாரி சான்று, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்பட இணையம் வழியாக வழங்கப்படும் சான்றிதழ் வினியோகம் பெருமளவு முடங்கியுள்ளது. இதனால் சான்றிதழ் வழங்க காலதாமதம் ஆவதாக கூறி வயலோகம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதனையடுத்து வயலோகம் அருகே உள்ள புல்வயல் கிராம நிர்வாக அலுவலராக உள்ள ரமே‌‌ஷ் என்பவர் கூடுதல் பொறுப்பாக வயலோகம் கிராம நிர்வாக அலுவலகத்தை திறந்து தனது பணியை தொடங்கினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக அனைத்து வட்டாரங்களிலும் மழை பெய்து வருகிறது. இம்மழையினை பயன்படுத்தி விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி மற்றும் அரிமளம் வட்டாரங்களில் நேரடி நெல் விதைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள், தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,590 மெட்ரிக் டன் யூரியா, 3,860 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1,510 மெட்ரிக் டன் பொட்டா‌‌ஷ் மற்றும் 5,330 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உர விற்பனையாளர்கள் விற்பனை உரிமம் இன்றி உரம் விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மானிய விலையில் உள்ள உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் மட்டும் விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும் வண்ணம் பராமரிக்க வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் உரம் வாங்கும்போது உரிய ரசீது வழங்க வேண்டும். உர வரவு மற்றும் இருப்பு விவரங்கள் சரியாக பராமரிக்காமல் இருந்தால் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

    கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்பட்டால் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். விவசாயிகள் மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்டவாறு உரங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். இதனால் உரச்செலவை குறைக்கலாம். உரங்கள் விற்பனை முனையக் கருவி மூலம் விற்பனை செய்வதால் கட்டாயம் ஆதார் கார்டு கொண்டு செல்ல வேண்டும். உரம் வாங்கும் போது ரசீது தவறாமல் கேட்டு பெற வேண்டும். மேலும் உரம் குறித்த புகார்களுக்கு வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04322221666 தொடர்பு கொள்ளலாம். இதுதவிர அருகில் உள்ள தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள உர ஆய்வாளரை தொடர்பு கொள்ளலாம். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சம்பா பருவத்திற்கு தேவையான உரங்களை வாங்கி பயன்படுத்தி நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெற்று பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை அருகே கட்டிடம் கட்டும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சிப்காட் அருகே உள்ள முத்துடையான்பட்டியில் பழனிவேல் என்பவருக்கு சொந்தமான கல் உடைக்கும் கிர‌ஷர் உள்ளது. இங்கு புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு வரும் ஒரு பகுதியில் மண் குவிந்து இருந்தது. நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    கட்டுமான பணிகளை, பழனிவேல் மேற்பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் ஒரு பகுதியில் குவித்து வைக்கப்பட்டு இருந்த மண் சரிந்து, அங்கு நின்று கொண்டிருந்த கிர‌ஷர் உரிமையாளர் பழனிவேல் (வயது 60), காவேரிநகரை சேர்ந்த ராசு மனைவி செல்வி (50), மேலமுத்துக்காடு மூக்கையா மனைவி மாரிக்கண்ணு (37) புதுக்கோட்டை அடப்பன்வயல் ரவிச்சந்திரன் மகன் மணிகண்டன் (32) ஆகியோர் மீது விழுந்தது.

    இதில் கிர‌ஷர் உரிமையாளர் பழனிவேல் மண்ணுக்குள் புதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் மண்ணுக்குள் சிக்கிய செல்வி, மாரிக்கண்ணு, மணிகண்டன் ஆகியோரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே செல்வி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து மாரிக்கண்ணு மற்றும் மணிகண்டன் ஆகியோர் புதுக்கோட்டை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வெள்ளனூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் ஊராட்சிக்குட்ப்பட்ட தெற்கு கூழாட்ச்சி கொல்லை பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான ஆழ்துளை கிணற்றில் உள்ள மின் மோட்டார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழுதானதாக கூறப்படுகிறது. 

    இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அவர்கள் அதனை சரி செய்யாததால் அப்பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். தற்போது கொத்தமங்கலத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கபடுவதே இல்லை என்றும் இதனால் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கூட அரசின் பிரதிதிகள் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு மேல் குடிநீர் விநியோகம் இல்லாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கொத்தமங்கலம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் உடனடியாக பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
    பொன்னமராவதியில் டூவிலர் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டியை சேர்ந்த மெய்யப்பன் மகன் பாக்யராஜ்(வயது37).இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். சிற்பியான இவர் பொன்னமராவதி சென்று விட்டு தனது டூவிலரில் சொந்த ஊரான கட்டையாண்டி பட்டிக்கு செல்லும் போது எதிரே வந்த சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதியதில் பாக்யராஜ் படுகாயமடைந்தார். 

    உடனடியாக அவரை மீட்டு  அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் இறந்தார். இது குறித்து பொன்னமராவதி போலீசில் மனைவி புகார் செய்தார். 

    புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகன டிரைவர் நெற்குப்பை அருண் என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ஆலங்குடியில் முன்விரோதத்தில் தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகிறார்கள்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி கீழசுண்ணாம் புகாரதெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது50). கூலி தொழிலாளி. இவருக்கும் அதேபகுதி அம்பேத்கர்நகரை சேர்ந்த செல்வம் (28), பள்ளத்திவிடுதியை சேர்ந்த ராஜப்பன் (57) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 

    இந்நிலையில் சம்பவதன்று செல்வம் அவரது மனைவி பாலதர் ஷனி, ராஜப்பன் அவரது மகள் பிரதீபா ஆகிய 4 பேரும் சேர்ந்து முருகேசனை தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்ததார். உடனே அக்கம் பக்கத்தினர் முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து முருகேசன் ஆலங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து செல்வம், ராஜப்பன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாலதர்ஷினி, பிரதீபா ஆகியோரை தேடி வருகிறார்கள்.
    ×