search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மர்ம விலங்கை பிடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
    X

    இருக்கூர் அருகே சுற்றித் திரியும் மர்ம விலங்கை பிடிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம். 

    மர்ம விலங்கை பிடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

    • இருக்கூர் அருகே உள்ள செஞ்சுடையாம்பாளையம் போயன்தோட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்ராஜா. இவரது மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த பசுங்கன்று குட்டியை, மர்ம விலங்கு கடித்து கொன்றது.
    • அப்போது உடனடியாக இப்பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தை புலி என கருதப்படும் மர்ம விலங்கை பிடித்து வனபகுதியில் விடுவித்து, மக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, இருக்கூர் அருகே உள்ள செஞ்சுடையாம்பாளையம் போயன்தோட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்ராஜா. இவரது மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த பசுங்கன்று குட்டியை, மர்ம விலங்கு கடித்து கொன்றது.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த இருக்கூர் கிராம நிர்வாக அலுவலர் வேனுகோபால், நாமக்கல் வனவர்கள் சந்திரசேகர், பிரியங்கா ஆகியோர் மர்ம விலங்கின் கால் தடங்களை பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் கன்றுகுட்டியை சிறுத்தை புலி தாக்கி இருக்கலாம் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்தில் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில், செந்தில் ராஜாவின் தோட்டத்திற்கு அருகில் குடியிருக்கும் ராஜ்குமார் என்பவர் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்த்து வரும் நாயை, மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து, இருக்கூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், இன்று காலை பரமத்தி-ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் உள்ள பிரிவு சாலையின் குறுக்கே அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது உடனடியாக இப்பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தை புலி என கருதப்படும் மர்ம விலங்கை பிடித்து வனபகுதியில் விடுவித்து, மக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    மறியல் குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரமத்தி வேலூர் சேகர் எம்.எல்.ஏ, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வனத்துறை அதிகாரி சந்திரசேகர் தலைமையான குழுவினர் மற்றும் பரமத்திவேலூர் போலீஸ் டி.எஸ்.பி கலையரசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மர்ம விலங்கை விரைவில் பிடித்து அச்சத்தை போக்குவதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இருபுறமும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு பேருந்துகள், லாரிகள், கார்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×