search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் பஸ்நிலையத்தில் பயணிகள் நள்ளிரவில் மறியல்
    X

    சூலூர் பஸ்நிலையத்தில் பயணிகள் நள்ளிரவில் மறியல்

    • கூடுதல் பஸ்கள் இயக்கக் கோரி.
    • பஸ்சில் ஏறும்போது பணத்தை யாரோ திருடி விட்டார்கள்.

    சூலூர்,

    பொங்கல் விடுமுறையை ஒட்டி பஸ் பயணிகளின் வசதிக்காக திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்கு சூலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

    நேற்று பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விடுமுறை அறிவித்ததால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை திடீரென ஒரே நாளில் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் அதிகரித்தது.

    இதனால் புதிய பஸ் நிலையத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியது. அப்போது திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய வழித்தடங்களில் சூலூரில் இருந்து பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படவில்லை எனக் கூறி அந்த ஊர்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள் திடீரென திருச்சி சாலையில், சூலூர் புதிய பஸ் நிலையத்தின் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசார் அங்கு மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் சம்பவ இடத்துக்கு சூலூர் போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகம் மற்றும் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஸ்ரீதரன், துணை மேலாளர் முத்து குமாரசாமி, நாகேந்திரன், வாசுதேவன் ஜெயபிரகாஷ், முத்துகிருஷ்ணன், உள்ளிட்டோர் வந்து பயணிகளுடன் பேச்சு வார்த்தை ஈடுபட்டனர்.

    சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மறியல் நடைபெற்றது. இதனால் திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால் பஸ்களை தற்காலிகமாக காரணம்பேட்டையில் இருந்து கோவைக்கு போலீசார் திருப்பி விட்டனர். கோவையில் இருந்து திருச்சி சாலை வழியாக சென்ற பஸ்கள் பாப்பம்பட்டி பிரிவு, செலக்கரச்சல் பல்லடம் வழியாக திருப்பி விடப்பட்டன.

    சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு சூலூர் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. மறியலின் போது பட்டுக்கோட்டையை அருகே உள்ள பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் அவரது 2 மகள்கள் பஸ்சில் ஏறும்போது அவர்களது பணத்தை யாரோ திருடி விட்டார்கள். இதனால் அவர்கள் போலீசிடம் புகார் தெரிவித்தனர்.

    அப்போது அங்கு இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகசுந்தரம் அவர்களுக்கு ரூ. 1000 கொடுத்து ஒரு பேருந்தில் ஏற்றி அவர்களை அனுப்பி வைத்தார். இதைப் பார்த்த அனைவரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×