என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி புஷ்கர விழாவில் கலந்து கொண்டு புனித நீராடினார்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை துலாகட்டத்தில் 144 ஆண்டுகளுக்கு பிறகு குருபெயர்ச்சியையொட்டி நடைபெறும் காவிரி மகாபுஷ்கர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழா வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடக்கிறது. இதில் கலந்து கொண்டு புனித நீராடினால் புண்ணியம் சேரும் என்று கூறப்படுகிறது. மேலும் மகாளய அமாவாசையையொட்டி இங்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு வாய்ந்தது என்பதால் விழாவையொட்டி நேற்று வரை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி புஷ்கர விழாவில் கலந்து கொண்டு புனித நீராடினார். அவருடன் சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் காமராஜ், வேலுமணி, செங்கோட்டையன், கருப்பண்ணன், ஓ.எஸ்.மணியன், சம்பத், எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன் பவுன்ராஜ், பாரதி உள்பட பலர் கலந்து கொண்டு நீராடினர். பின்னர் காவிரி புஷ்கர விழா சிறப்புமலர் நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் நூலை வெளியிட அதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்று கொண்டார்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜூலு, தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் ஆகியோர் தலைமையில் 1250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


    முன்னதாக முதல்வருக்கு நாகை மாவட்ட எல்லையான கொள்ளிடம் பாலம் அருகே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நாகை மாவட்ட அ.தி.மு.க சார்பில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் முதல்வருக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கலெக்டர் சுரேஷ்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பாரதிமோகன் எம்.பி., எம்.எல்.ஏ பாரதி, ஆகியோர் சால்வை அணிவித்தனர்.

    அப்போது பட்டர்ச்சாரியார்கள் சார்பில் முதல்வருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. அ.தி.மு.க. மகளிர் அணியினர் கைகளில் கும்பத்துடன் வரவேற்றனர்.
    பயிர்க் காப்பீட்டு தொகையை முழுமையாக வழங்கக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் 2016-17-ம் ஆண்டு பயிர் காப்பீடு பிரிமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீத காப்பீட்டு தொகை வழங்கக்கோரி நாகை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வேளாண்மை துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேளாண்மை துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திரண்டு வந்தனர்.

    ஆனால் அவர்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கும் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்கப்படாததால், விவசாயிகள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். எனவே சாலை மறியலை கைவிடுமாறு கேட்டு கொண்டனர். இதையடுத்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தனர்.

    நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபாலன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் சேரன் முன்னிலை வகித்தார். பயிர்க் காப்பீட்டு தொகை வழங்குவதில் குளறுபடி செய்துள்ள காப்பீட்டு நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், அமுதாராணி, ஜெயக்குமார் மற்றும் போலீசார், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விவசாயிகளுக்கு 2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு தொகை வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே 2016-17-ம் ஆண்டுக்கு பிரீமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    வேதாரண்யத்தில் ஆட்டோ மற்றும் காரை அடித்து சேதப்படுத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வடக்கு வீதியில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஆட்டோ நிறுத்தகத்தில் வேதை பன்னீர்(43) என்பவர் ஆட்டோ நிறுத்தி ஓட்டி வந்தார். அவரது நடவடிக்கை சரியில்லாததால் அங்கு ஆட்டோ நிறுத்தக்கூடாது என மற்ற ஆட்டோ ஓட்டுனர்கள் கூறியுள்ளனர். இதனால் அவர் வேறு இடத்திற்கு சென்றார்.

    தற்போது மீண்டும் வேதை பன்னீர் வேதாரண்யம் வடக்கு வீதி, ஆட்டோ நிறுத்தகத்தில் தனது ஆட்டோவை கொண்டு வந்து நிறுத்தினார். இதனால் இவருக்கும், மற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பன்னீர் இதற்கு காரணம் குமரேசன் (52) என்பவர்தான் எனக் கூறி அங்கு நிறுத்தியிருந்த காமராஜ் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவையும், குமரேசனுக்கு சொந்தமான கார் கண்ணாடியையும் அடித்து சேதப்படுத்தியதோடு அங்குள்ள ஒருவர் மீது மண்ணெண்ணையை ஊற்றியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து குமரேசன் வேதாரண்யம் போலீஸில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் வழக்குபதிவு செய்து, வேதை பன்னீரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கர விழாவில் புனித நீராட வருகிற 20-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கர விழாவில் புனித நீராட வருகிற 20-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி துலாக்கட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    புஷ்கர விழாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் பல லட்சம் பக்தர்கள் புனித நீராட திரண்டதால் துலாக்கட்டம் பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. காவிரி ஆற்றில் இன்று அல்லது நாளை மயிலாடுதுறை பகுதிக்கு தண்ணீர் வந்துவிடும் என்பதால் தண்ணீர் வந்தால் பக்தர்கள் பாதுகாப்பாக எவ்வாறு நீராட அனுமதிப்பது என்பது குறித்தும், வரும் 20-ந்தேதி எடப்பாடி பழனிசாமி புனித நீராட வருவதாலும், அன்று மகாளய அமாவாசை என்பதாலும் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் வி.ஐ.பி. வந்து செல்வதற்கான பாதைகள், கூட்டம் அதிகமாக இருந்தால் எவ்வாறு பாதுகாப்பை பலப்படுத்துவது? என்பது குறித்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி வரதராஜுலு நேற்று நேரில் ஆய்வு செய்தார். தஞ்சை சரக டிஐஜி லோகநாதன், நாகை எஸ்.பி. சேகர் தேஷ்முக், டி.எஸ்.பி .கலிதீர்த்தான் ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் நாகை எஸ்.பி. சேகர் தேஷ்முக் கூறியதாவது:-

    மயிலாடுதுறையில் காவிரிபுஷ்கரம் விழாவில் புனிதநீராட பக்தர்கள் சராசரியாக தினமும் வந்து சென்றதால் பெரிய அளவில் நெரிசல் ஏற்படாமல் இருந்தது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்கள் மிக அதிக அளவில் ஒரே நேரத்தில் திரண்டதால் கூட்டம் அதிகமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவிரியில் மயிலாடுதுறை பகுதிக்கு தண்ணீர் இன்று (18-ந்தேதி) வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்ணீர் வந்தால் நெரிசல் இன்றியும், பக்தர்கள் பாதுகாப்பாக நீராடி செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

    வரும் 20-ந்தேதி தமிழக முதல்வர் வரும் அன்று மகாளய அமாவாசையையொட்டி கூட்டம் அதிகமாக இருந்தால் எவ்வாறு போக்குவரத்தை சரிசெய்வது, காவிரிதுலாக்கட்டத்தில் பக்தர்கள் நெரிசலின்றி நீராடி செல்வதற்கான பாதுகாப்பு குறித்து ஆலோசித்து வருகிறோம். ஞாயிற்றுக்கிழமையான நேற்று மதியம் 2 மணி வரையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி சென்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மயிலாடுதுறை துலா கட்டத்தில் காவிரி மகாபுஷ்கர விழாவையொட்டி இன்று 7-வது நாளாக ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 24 மணி நேரமும் பக்தர்கள் நீராட வசதி செய்யப்பட்டுள்ளது.
    வேதாரண்யம் அருகே அடகு கடையில் 25 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் வாய்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு மேற்கு பவர் ஹவுஸ் அருகில் அடகு கடை நடத்தி வருபவர் ராதாகிருஷ்ணன் (வயது 62). இவர் நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட கொள்ளையன் நள்ளிரவு கடையில் போடப்பட்டிருந்த 4 பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று உள்ளான்.

    பின்னர் அங்கு நகை வைக்க லாக்கரை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டான். இன்று காலை அக்கம் பக்கத்தில் உள்ள கடைகாரர்கள் அடகு கடையில் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு கடை உரிமையாளர் ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து கடைக்கு வந்த ராதாகிருஷ்ணன் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இதுபற்றி அவர் வாய்மேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடையில் உள்ள காமிராவை பார்வையிட்டனர். அது செயல்படவில்லை. உடனே பக்கத்து கடையில் உள்ள காமிராவில் பார்த்தபோது இரவு 1 மணியளவில் மர்ம நபர் முகத்தை துணியால் மறைத்து கொண்டு வந்து அடகு கடையில் கொள்ளையில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது.

    மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையனின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. மோப்ப நாய் மூலம் துப்பு துலங்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த கொள்ளை தொடர்பாக வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வாய்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யம் அருகே குடும்ப தகராறில் மாமனாரை தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம், நாகக்குடையான் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (45). இவரது மகள் சுசீலாவை அதே ஊரைச் சேர்ந்த முருகையன் மகன் கனகராசன் (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம்.

    இந்நிலையில் சுசீலா 7 மாத கர்ப்பவதியாக இருப்பதால் வளைகாப்பு இட்டு, தகப்பனார் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். கடந்த 12-ந் தேதி நள்ளிரவு சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று சுசீலாவை அனுப்பி வைக்கும்படி கனகராசன் கேட்டுள்ளார். அப்போது காலையில் அழைத்து செல்லுங்கள் என்று அவர் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கனகராசன் மாமனார் சுப்பிரமணியனை தரக்குறைவாக பேசி வீடு புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி, அவரையும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சுப்பிர மணியன் வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்குபதிவு செய்து கனகராசனை கைது செய்தார்.

    நதிகளை இணைத்தால் காவிரியில் நிரந்தரமாக தண்ணீர் ஓட வழிவகுக்கும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மூத்த தலைவரும், ராஜ்ய சபா எம்.பியுமான இல.கணேசன் கூறினார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மூத்த தலைவரும், ராஜ்ய சபா எம்.பியுமான இல.கணேசன் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

    பாரத நாட்டின் பாரம்பரியத்தில் தீர்த்தவாரி உற்சவம் முக்கியத்துவம் வாய்ந்தது. கும்பமேளா, மகாமகம் போன்று காவிரி மஹா புஷ்கரம் விழாவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவுக்காக செயற்கையாக தண்ணீர் வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஓரிரு நாட்கள் முன்னதாக மேட்டூரில் தண்ணீர் திறந்திருந்தால் விழா இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். காவிரி நதியில் தண்ணீர் நிரந்தரமாக ஓடுவதற்கு நதி நீர் இணைப்பே சிறந்த வழியாகும். மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா நதிகளோடு காவிரி மற்றும் தாமிரபரணி உள்ளிட்ட ஏனைய நதிகளை இணைப்பதன் மூலம் தமிழகத்தில் விவசாயம் செழிப்படையும்.

    பெட்ரோ கெமிக்கல் திட்டம் காங்கிரஸ், திமுக ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டதாகும். அதைத் தான் தற்போதைய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இருப்பினும் இத்திட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என்றால் அரசு அதனை பரிசீலிக்கும். சேது சமுத்திர திட்டத்தை கொள்கை ரீதியாக அறிவித்தவர் வாஜ்பாய். ராமர் பாதத்திற்கு சேதமில்லாமல் சேது சமுத்திர திட்டம் அமுல்படுத்தப்படும்.


    சாரணர் பயிற்சிக்கு தேவை தேசபக்தி, கட்டுப்பாடு. ஹெச்.ராஜாவுக்கு உள்ள தேச பக்தி, கட்டுப்பாடு வேறு எந்த உறுப்பினருக்கு இருக்கிறது என தெரியவில்லை. குற்றம் சாட்டுபவர்கள் ஆத்ம சோதனை செய்து பார்க்கவேண்டும். தமிழக அரசின் செயல்பாடே இனிதான் தொடங்கும். இப்போது ஆட்சியை பற்றியும், மக்களை பற்றியும் கவலைப்படுவதற்கு அவர்களுக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது. முழுநேரம் செயல்படுவார்கள் என நம்புகிறேன். தி.மு.க. செயல் தலைவர் கருணாநிதியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. பக்குவமாக பேசவேண்டும். கெடு கொடுக்கிறேன் என்பது ஒரு எதிர்கட்சி தலைவர், ஆளுநரை பார்த்து சொல்லக்கூடிய வி‌ஷயம் அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், மாநில விவசாய அணி செயலாளர் கோவி.சேதுராமன், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட பொது செயலாளர் நாஞ்சில்பாலு, நகர தலைவர் மோடி கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    வேதாரண்யம் அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த முதியவர் கடிதம் எழுதிவைத்து விட்டு மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையைச் சேர்ந்தவர் அவுலியா முகமது (53). இவர் குடும்பத்துடன் தோப்புத்துறையில் வசித்து வருகிறார்.

    இவர் வேளாங்கண்ணியில் செல்போன் கார்டு விற்கும் கடை வைத்துள்ளார். தினசரி தோப்புத்துறையிலிருந்து வேளாங்கண்ணி சென்று இரவு 10 மணிக்கு வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. கடந்த 4-ந் தேதி கடைக்கு சென்றவர் ஊர் திரும்பவில்லை.

    அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. கடையை திறந்து பார்க்கும் போது அங்கிருந்த கடிதத்தில் தனக்கு அதிக கடன்கள் இருப்பதாகவும், வட்டிக்கு பணம் வாங்கி பிறருக்கு கொடுத்த கடன் வராததாலும், தன் மகள் கல்யாணம் சமீபத்தில் நடைபெறவுள்ளதால் எப்படி நடத்துவது என்று தெரியாமல் செல்வதாக எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அவரது மனைவி செய்துல்அரபா வேதாரண்யம் போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தேவபாலன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து சென்னைக்கு காரில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணியளவில் அதிகாரிகள் காரைக்கால் மார்க் துறைமுகம் அருகே உள்ள சோதனை சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 10 கிலோ தங்கம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்தனர். காரும் கைப்பற்றப்பட்டது.

    இதனை வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தமாவடியை சேர்ந்த மகாலிங்கம், டிரைவர் உள்பட 2 பேர் கடத்தி சென்றது தெரிய வந்தது. அவர்களை அதிகாரிகள் நாகை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த தங்கம் விழுந்தமாவடியில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்து கண்டு பிடிக்கப்பட்டது. அங்கு யாருக்கு கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தண்டாவளத்தில் இரும்பு ராடை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி செயலில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி ரெயில் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரெயில் பாதையில் தண்டவாளத்தின் குறுக்கே லெவல் கிராசிங் அருகே 15 அடி நீள இரும்பு ராடு வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த இரும்பு ராடு கட்டு கம்பியால் இரு புறமும் கட்டப்பட்டு இருந்தது. இதனால் இன்று காலை 4.30 மணிக்கு சீர்காழி வந்த உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னல் கிடைக்காமல் சீர்காழி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரெயில்வே ஊழியர்கள் சென்று பார்த்த போது தண்டவாளத்தில் இருந்த இரும்பு ராடை கண்டுபிடித்து அதனை அகற்றினர். அதன் பிறகு 20 நிமிடம் தாமதாக உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. மற்ற ரெயில்களும் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    தண்டாவளத்தில் இரும்பு ராடை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி நடைபெற்று இருப்பது தெரியவந்தது. இந்த சதி செயலில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழா கோலாகலத்துடன் இன்று தொடங்கியது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நீராடினர்.
    காவிரி புஷ்கரம் என்பது குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறும் குருபெயர்ச்சி காலத்தில் கொண்டாடப்படும் விழா புஷ்கர காலங்களில் காவிரியில் நீராடுவதால் பிதுர் தோ‌ஷம், நதி தோ‌ஷம் நீங்கி வறுமை, பஞ்சம் அகன்று செழுமையடைந்து உலகம் சுபிட்சம் பெருகும். மேலும் மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணங்கள் கொடுத்து பாவங்களை போக்கி கொள்ளலாம்.

    144 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி புஷ்கரம் இன்று (12-ந்தேதி) தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த 12 நாட்களில் காவிரி துலா கட்டத்தில் புனித நீராடினால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் நீராடிய பலன்கள் கிடைக்கும்.

    கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகள் தங்கள் பாவங்களை போக்கி கொண்டன என்பது ஐதீகம். இத்தலம் காசிக்கு இணையான தலமாக கருதப்படுகிறது. அதனால் காவிரி புஷ்கரம் விழாவிற்காக பக்தர்கள் புனித நீராடுவதற்காக ரி‌ஷப தீர்த்த மண்டபத்தை சுற்றி 100 மீட்டர் நீளத்தில் நீர்தேக்கம் அமைக் கப்பட்டுள்ளது. நீர்தேக்கத் தில் உள்ள பழங்கால கிணறுகள் 12-ம் சீரமைக் கப்பட்டு போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

    புஷ்கரம் விழாவை காலை 5.30 மணிக்கு காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமி கள் கொடியேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள், ஆதீனகர்த்தர்கள், மடாதிபதிகள் காவிரி துலா கட்ட புஷ்கரத்தில் நீராடினர்.

    திருவாடுதுறை ஆதீனத் திற்கு சொந்தமான அபயாம் பிகை சமேத மயூரநாதர் சுவாமி, அறம் வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேதவதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் காவிரி துலாக் கட்டத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது.

    இதைத்தொடர்ந்து பொது மக்கள் காவிரி துலா கட்டத்தில் அமைக்கப்பட்ட நீர்தேக்கத்தில் புனித நீராடினர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நீராடினர்.



    விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இன்று காலை 9 மணிக்கு துறவியர்கள் மாநாடு நடந்தது. இதில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான துறவிகள் கலந்து கொண்டனர். மாலை 3 மணிக்கு ஆன்மீக ஊர்வலம் நடக்கிறது. 5 மணிக்கு 40-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு ஆதீனகர்த்தர்கள் முன்னிலையில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் விருது வழங்குகின்றனர்.

    விழாவில் சிறப்பு ஹோமம், வேதபாராயணம், திருமுறைகள், கவியரங்கம், மங்கல ஆரத்தி, கலசபூஜை, ஆன்மீக ஊர்வலம், சகஸ்ரநாம அர்ச்சனை, ஆன்மீக சொற்பொழிவு என பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    காவிரி புஷ்கர விழாவையொட்டி தஞ்சை மாவட்டம், அய்யாறப்பர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றின் புஷ்ய படித்துறை பகுதியில் மோட்டார் அமைக்கப்பட்டு பக்தர்கள் புனிதநீராட வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கும் ஏராளமான பக்தர்கள் இன்று புனித நீராடினர்.

    கும்பகோணத்தில் வருகிற 19-ந்தேதி முதல் காவிரி புஷ்கர விழா புனித நீராடல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த மகா புஷ்கர விழா ஸ்ரீரங்கத்தில் இன்று காலை தொடங்கியது. ஜீயர் சுவாமிகள் மற்றும் வேத விற்பன்னர்கள் காவிரியாற்றில் நீராடி புனிதநீரை எடுத்துக்கொண்டு யாகசாலையை வந்தடைந்த னர். பின்னர் 8 மணியள வில் கோபூஜை நடைபெற்றது. 9.15 மணி முதல் விஷ்வக்சேன இஷ்டி யாகம் தொடங்கியது. இந்த யாகத்தின் மூலம் காரிய சித்தி மற்றும் தடங்கல்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    இந்த யாகம் மற்றும் புனித நீராடல் நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி வடமாநில பக் ர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். காவிரி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் தேங்கியிருந்தா லும் அதில் பக்தர்கள் அனை வரும் உடலை நனைத்து தீர்த்தம் தெளித்து வழி பாடு நடத்தினர். வயது முதிர்ந்த பக்தர்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அமைக் கப்பட்டிருந்த தொட்டி போன்ற அமைப்பி லும், ஆழ் குழாயிலும் புனித நீராடினர்.
    தரங்கம்பாடி கடற்கரையில் காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரைக்கு ஏராளமான காதல் ஜோடிகள் வந்து செல்கின்றன. விடுமுறை நாட்கள் என்றால் காதல் ஜோடிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

    நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால் தரங்கம்பாடி கடற்கரைக்கு மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 3 காதல் ஜோடிகள் வந்தனர். அவர்கள் மறைவான பாறை இடுக்குகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது வாலிபர்கள் 5 பேர் அங்கு வந்தனர். அவர்கள் காதல் ஜோடிகளை மிரட்டினர். இதனால் 2 காதல் ஜோடி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    ஒரு காதல் ஜோடியை மடக்கி பிடித்த அக்கும்பல் அவர்களிடம் இருந்த செல்போனை பறித்து படம் எடுத்தனர். இதனை பெற்றோரிடம் காண்பித்து விடுவோம் என மிரட்டினர். பின்னர் காதல் ஜோடியிடம் இருந்து பணம், நகையை பறித்தனர். மேலும் அப்பெண்ணை சில்மி‌ஷம் செய்ததாவும் கூறப்படுகிறது. இது குறித்து காதலன் தனிப்பிரிவு போலீஸ் சரவணபவனுக்கு தகவல் கொடுத்தார்.

    இது தொடர்பாக பொறையாறு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் தரங்கம்பாடி கடற்கரைக்கு விரைந்து சென்றனர். அங்கு காதல் ஜோடியை மிரட்டிய பூம்புகார் அருகே உள்ள சந்திரபாடி மீனவ கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மகன் ரஞ்சித் (24), அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (24), ஆக்கூர் முக்கூட்டு பரமேஸ்வரன் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    பெருமாள் பேட்டை, தரங்கம்பாடியை சேர்ந்த வாலிபர்கள் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகளை மிரட்டி பணம், நகை பறிப்பது, சில பெண்களை சில்மி‌ஷம், செய்வது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.

    ஆனால் காதல் ஜோடிகள் இது வெளியே தெரிந்தால் அவமானம் என கருதி போலீசில் புகார் கொடுப்பதில்லை.இதனை பயன்படுத்தி வாலிபர்கள் அத்து மீறி நடந்து கொள்கிறார்கள். இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×