என் மலர்
நாகப்பட்டினம்
நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று நாகூர் அருகே மேலவாஞ்சூர் முட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் விசாரித்தபோது, அவர் திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது26) என்பதும், சாராய பாக்கெட்டுகளை சாக்கு மூட்டையில் கடத்தி செல்வதும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 120 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப் பட்டது.
அதேபோல் பனங்குடியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகை காமராஜ் நகரை சேர்ந்த ராஜேந்திரன் (49), காடம்பாடியை சேர்ந்த பாண்டியன் (32) ஆகியோர் என்பதும், 120 லிட்டர் சாராயத்தை கடத்தி செல்வதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், பாண்டியன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம் திருமருகல் தேவங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் சுப்பிரமணியன். இவர் காக்கழனி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சுப்பிரமணியன் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாகூரை அடுத்த ஒக்கூர் அருகே சென்றபோது நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு சுப்பிரமணியன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த சுக்கானூர் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக அளவுக்கு அதிகமான மணல் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சட்டத்திற்கு விரோதமாக மணல் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து ஒரே இடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1000 யூனிட் மணலை போலீசார் கைப்பற்றினர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றிய மணலின் மதிப்பு சுமார் ரூ.80 லட்சம் என கூறப்படுகிறது.
விசாரணையில் மணல் கடத்தலில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகர் சுக்கானூர் பாலு மற்றும் அவரது மகன் நவநீதகிருஷ்ணன் என்பது தெரிவந்தது. இதையடுத்து போலீசார் நவநீதகிருஷ்ணனை கைது செய்தனர். தப்பியோடிய பாலுவை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட மணலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
மயிலாடுதுறை:
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் 13 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முயற்சித்தது. மக்களின் போராட்டத்தால் மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடைகளை திறக்க முடியவில்லை.
இந்நிலையில் மயிலாடுதுறை நகரில் நேற்று 2 டாஸ்மாக் மதுபானக்கடைகள் அதிரடியாக திறக்கப்பட்டன. ஸ்டேட் பேங்க் ரோடு மற்றும் ரெயிலடி ஆகிய இடங்களில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு 4 டி.எஸ்.பிக்கள் தலைமையில், 6 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 100 போலீசாரின் பாதுகாப்புடன் விற்பனை தொடங்கியது.
ரெயிலடியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள கடைகளை அடைத்து போராட்டம் நடத்திய வணிகர்கள் மற்றும் பா.ம.க.வினர் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தி.மு.க.வினர் புதிய டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடவில்லை என்றால் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இன்று (1-ந் தேதி) முதல் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்தில் நேற்று முதலே பருவ மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக நாகை, திருப்பூண்டி, தலைஞாயிறு, வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. வேதாரண்யத்தில் அதிக பட்சமாக 38.20 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.இந்த மழை தற்போது நடவு செய்யப்பட்டுள்ள சம்பா பயிருக்கு பயனை தரும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
வேதாரண்யம்- 38.20
திருப்பூண்டி-26.60
சீர்காழி-25.20
நாகப்பட்டினம்-18.20
மணல்மேடு-8.20
இதேபோல் திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் நகரில் இன்று காலை லேசான தூறல் மழை பெய்தது.
தஞ்சை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை கும்பகோணத்தில் தூறல் மழை பெய்தது.
இன்று காலை நாகை, வேதாரண்யம் மற்றும் மல்லிபட்டினம், ஆகிய பகுதிகளில் கடல் சீற்றமாக இருந்தது. மேலும் கடல் அலைகள் பல அடிகளுக்கு எழுப்பியப்படி இருந்ததால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. #Northeastmonsoon #Fishermen
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு காவல் சரகத்திற்குட்பட்ட தகத்தூர் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மகன் செந்தில் (வயது 28). இவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். செந்தில் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பூச்சிமருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த செந்தில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து வாய்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாபாய் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த செந்திலுக்கு சூர்யா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
வாய்மேடு காவல் சரகத்திற்குட்பட்ட தாணிகோட்டம் சின்னதேவன் தெரு பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 34). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகாலெட்சுமி. இந்த நிலையில் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனையில் இருந்து கல்யாணசுந்தரம் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப் பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த மகேந்திரபள்ளி ஊராட்சி வெட்டாற்றங்கரையில் காத்தாயி அம்மன்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று வழக்கம் போல் பூஜை முடிந்ததும், இரவு பூஜாரி கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் நள்ளிரவு மர்மநபர்கள் கோவில் மதில் சுவர் வழியாக ஏறிகுதித்து கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுவிட்டனர். இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் அப்பகுதி மக்கள் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலிலும் மர்ம நபர்கள் புகுந்து நேற்று இரவு உண்டியல் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். இரண்டு கோவில்களிலும் ரூ.50 ஆயிரம் வரை பணம் திருட்டு போய் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய புகாரின் பேரிலும் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாகவும், 200-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். வருடத்திற்கு 1500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி சீர்காழி அரசு மருத்துவமனையில் ஆண்கள் வார்டில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளிக்கு மருத்துவமனையில் பெண் துப்புரவு பணியாளர் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. அந்த நோயாளிக்கு பெண் துப்புரவு பணியாளர், குளுக்கோஸ் பாட்டில் உடலில் ஏற்றுவதற்காக நரம்பு ஊசியை அவரே செலுத்தி குளுக்கோஸ் பாட்டில் செலுத்துவது தெரிகிறது. இந்த காட்சியை நோயாளியை காண வந்த நபர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.
செவிலியர் அல்லது மருத்துவர் செய்யவேண்டிய மருத்துவ உதவியை துப்புரவு பணியாளர் செய்யும் வீடியோ காட்சி தற்போது வைரலாக சீர்காழி பகுதியில் பரவி வருகிறது.
இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-
சம்பவத்தன்று நோயாளிக்கு டிரிப்ஸ் முடிந்து ரத்தம் வெளியேற பார்த்ததாகவும், அப்போது நோயாளியுடன் வந்த உறவினர்கள் கூறியதன் பேரில் அவசர உதவியாக துப்புரவு பணியாளர் டிரிப்ஸ் ஊசியை நீக்கி விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார். #SirkazhiGovtHospital
நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன் இல்ல திருமண விழா திருக்கடையூர் கலைஞர் அரங்கில் இன்று நடந்தது.
திருமண விழாவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
இன்று நடைபெறும் சீர்திருத்த திருமணம், தி.மு.க. ஆட்சிக்கு வராத காலத்தில் சட்டமாக்கப்படவிலலை. கடந்த 1967-ம் ஆண்டு அண்ணா தலைமையில் தி.மு.க. வெற்றி பெற்றது. அப்போது சட்டமன்றத்தில் முதல் தீர்மானமாக சீர்திருத்த திருமணங்களை சட்டமாக்கினார்.
அதை நினைவுகூர்ந்து தமிழர்கள் முறைபடியும், தமிழ் முறைப்படியும் இன்று சீர்திருத்த திருமணங்களை நடத்தி கொண்டிருக்கிறோம். கலைஞர் பிறந்த ஊர் திருக்குவளை என்றாலும் நாகை மாவட்டத்தில் தான் பிறந்தார்.
தி.மு.க. தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு கலைஞர் பிறந்த ஊரில் முதன் முறையாக சீர்திருத்த திருமணம் நடத்துவது பெருமை அளிக்கிறது.

18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகள் மற்றும் திருவாரூர், திருப்பரங்குன்றம் என 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த முதல்- அமைச்சர் எடப்பாடி தயார் என கூறுகிறார்.
உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாத எடுபிடி அரசு, 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த கூறுவது எந்த தகுதியும் இல்லை.
நீதிமன்றம் பல்வேறு காலக்கெடு கொடுத்தும் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை. சாக்குபோக்கு காரணங்களை கூறி தள்ளி வைத்து வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் தி.மு.க. தான் என்று பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
தி.மு.க. உண்மையிலேயே வழக்கு தொடர காரணம் சட்ட விதிகளின்படி இட ஒதுக்கீடு அனைத்தும், நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்று தான் தேர்தல் ஆணையம் மீது வழக்கு போட்டோம். உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் நாங்கள் தடுக்கவில்லை. இதற்கு பதில் சொல்ல வேண்டிய உரிமை தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. ஆனால் எடப்பாடி சொல்கிறபடி தேர்தல் ஆணையம் செய்கிறது. தலைமை செயலாளர் உள்ளாட்சி தேர்தலை நடத்த தேதி குறிப்பிடாமல் வெறுமனே அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி மக்கள் விரோதமாக செயல்பட்டு வருவதால் எடுபிடி அரசு என்று கூறியதால் என்மீது தமிழக அரசு 7 வழக்குகளை தொடர்ந்துள்ளது. இதை நான் சந்தித்து தான் வருகிறேன்.
மத்திய அரசுடன் சேர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருவதால் எடுபிடி அரசு என்று சொல்லாமல் எப்படி அழைப்பது?
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி மீது சி.பி.ஐ. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. வருகிற தேர்தல்களில் வெற்றி பெற்று ஊழலில் சம்பந்தப்பட்ட எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சிறைக்கு செல்வார்கள்.
தமிழகத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 100-க்கும் பாதிக்கப்பட்டு இறந்து கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசின் சுகாதார துறை எந்த கவனமும் செலுத்தாமல் உள்ளது. முடிந்தவரை எல்லாவற்றையும் கொள்ளையடித்து சுருட்டி கொள்வது என்று உள்ளனர்.
தி.மு.க. ஆட்சி அமையும். சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்படுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருமண விழாவில் இந்திய கம்யூ.செயலாளர் முத்தரசன், முன்னாள் மத்திய மந்திரி மணி சங்கர் அய்யர், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, மதிவாணன், பொன்முடி, முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். #DMK #MKStalin #LocalBodyElection
வேதாரண்யம்:
கோடியக்கரையில் மீன்பிடி சீசன் அக்டோபர் மாதம் துவங்கி மார்ச் வரை நடைபெறும். நாள்தோறும் 10 டன் முதல் 25 டன் மீன்கள் பிடிக்கப்பட்டு கோடியக்கரையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மேலும் கர்நாடகா, கேரளா, மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கோடியக்கரையில் ஒரே நாளில் 10 டன் மீன்கள், நண்டுகள் சிக்கின. கடந்த ஒரு வார காலமாக கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்களில் அதிக அளவில் காலா மீன்கள் கிடைக்கின்றன. நாள் ஒன்றுக்கு 5 முதல் 15 டன் வரை காலா மீன்களை மீனவர்கள் பிடித்து வருகின்றனர்.
மீனவர்களது வலையில் காலா, நண்டு, புள்ளி நண்டு. வாவல், ஷீலா, ஏமீன் டன் கணக்கில் கிடைக்கின்றன. இதனால் மீனவர்கள் மகிழ்சசி அடைந்தனர். வாவல் மீன்கள் ரூ.600க்கும் காலா ரூ.300க்கும், நீலக்கால் நண்டு ரூ.400க்கும், ஏமீன்கள் ரூ.250க்கும், சிறிய வகை இறால்கள் ரூ.100 முதல் 300 வரைக்கும், சிறிய ரக மீன்கள் ரூ.150க்கும் ஏலம் போனது. காலா மீன்கள் சென்றவாரம் கிலோ ரூ.500-க்கு விற்பனையானது. தற்சமயம் அதிகளவில் கிடைப்பதால் சரிபாதியாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
மீன் வியாபாரிகள் அதிகளவில் கிடைக்கும்.காலா மீன்களை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கு சிரமப்படுகின்றனர். இதே சீசன் இன்னும் 15 நாட்களுக்கு நீடிக்கும் என்று வியாபாரி சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தற்போது அதிக அளவில் காலா மீன் கிடைப்பதற்கு காலா மீன்கள் குஞ்சு பொறிப்பதற்காக ஆழ்கடல் பகுதியிலிருந்து அதிகளவில் வேதாரண்யம் சேற்று கடல் பகுதிக்கு வருவதே காரணம் ஆகும். பிடிபடும் அனைத்து மீன்களும் சினையுடனே காணப்படுகிறது என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.
வேதாரண்யத்தை அடுத்த மருதூரை சேர்ந்தவர் ராகவன். கார் டிரைவர். இவர் நேற்று தனது காரில் செட்டிபுலத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி எழிலரசி, அவரது மகள் வர்சினி, உறவினர் ராஜேஷ் ஆகியோரை ஏற்றிக்கொண்டு திருச்சி விமான நிலையம் சென்றார். அவர்கள் கரியாப்பட்டினம் பகுதியில் சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து காரின் மீது விழுந்தது. இதில் ராகவன் உள்பட 4 பேரும் காயமடைந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கரியாப் பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கரியாபட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ்(வயது 18). திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இவர் தெற்குகாடு செட்டிபுலத்தை சேர்ந்த பக்கிரிசாமி மகன் ஆவார். இவர் வேதாரண்யம் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார் என்பது விசாரணையில் தெரிவந்துள்ளது.
வேதாரண்யம் அடுத்த ஆதனூர் கிராமத்தில் இன்று மேம்படுத்தப்பட்ட துணை சுகாதார மையம் மற்றும் நலவாழ்வு மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
பின்னர் அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டார்.
இதையடுத்து அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அங்கு பொதுமக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதை கண்ட மத்திய மந்திரி மேடையில் ஏறாமல் பார்வையாளர் வரிசையில் அரசு அதிகாரிகளோடு அமர்ந்து கொண்டார்.
அப்போது அரசு விழாவிற்கு பொதுமக்களை அழைக்காமல் விழா நடத்துவது குறித்து அதிகாரிகளிடம் கூறி வேதனைப்பட்டார்.
பிறகு அதிகாரிகளிடம் விழாவிற்கு பொதுமக்கள் வந்தால் பேசுகிறேன். இல்லை என்றால் உடனே கிளம்பி விடுவேன் என்று கூறியதால் பரபரப்பு ஏற் பட்டது.
இதையடுத்து பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள், கிராமத்திற்கு சென்று மக்களை திரட்டி வர நடவடிக்கை எடுத்தனர். ஆனால் பெரும்பாலான அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வேலைக்கு சென்று இருப்பதால் கிராமம் வெறிச்சோடி இருந்தது. இதனால் அரசு அதிகாரிகள் வேன், கார்களில் சென்று கிராம மக்கள் திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 11 மணிக்கு சுகாதார மையம் திறப்பு விழாவுக்கு வந்த மத்திய மந்திரி தொடர்ந்து பொதுமக்கள் வருகைக்காக மேடை ஏறாமல் பார்வையாளர்கள் வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அதிகாரிகள், சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களை அழைத்து வந்தனர். இதையடுத்து சமரசமான மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மதியம் 1 மணிக்கு மேடையில் ஏறி பேசினார். #BJP #PonRadhakrishnan






