என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #GajaStorm
    நாகப்பட்டினம்:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசை மற்றும் அதன் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதால் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  
     
    இந்நிலையில் கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    புயல் கரை கடக்கும்போது கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

    ஏற்கனவே, கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால், தஞ்சை உள்ளிட்ட 7  மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    நாகூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத் திறனாளி இறந்தார்.
    நாகூர்:

    நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள தெற்கு பால்பண்ணைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய மகன் ராஜவேல் (வயது39). இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு வேம்பு (30) என்ற மனைவியும், அனுஸ்கா (7) என்ற மகளும் உள்ளனர்.

    ராஜவேல் பூக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை தூக்கத்தில் இருந்து எழுந்த ராஜவேல் கழிவறைக்கு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வேம்பு, கழிவறை அருகே சென்று பார்த்தபோது ராஜவேல், அங்கு உள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது தெரியவந்தது. இதனால் பதறி போன வேம்பு மற்றும் உறவினர்கள் நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி ராஜவேலை மீட்டனர். அப்போது கிணற்று நீரில் மூழ்கி ராஜவேல் இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் அங்கு சென்று அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    கஜா புயலை எதிர்கொள்ள நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவுள்ளனர். #Gaja #GajaCyclone
    நாகப்பட்டினம்:

    தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 10-ந் தேதி உருவானது. இதையடுத்து தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    கஜா புயல், நாகைக்கும் சென்னைக்கும் இடையே கரையை கடக்கும் என முதலில் கூறப்பட்டது. தற்போது கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே திசை மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாகைக்கு 850 கிலோ மீட்டர் தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழையுடன் கூடிய காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் காரணமாக தஞ்சை , நாகை, திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக நாகை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் வருகிற 15-ந் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடல் சீற்றம் காரணமாக நாகை துறைமுகத்தில் இன்றும் 2-ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கலெடர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் புயல் மற்றும் மழை பற்றி தகவல்களை அறிய 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலை எதிர்கொள்ள நாகை மாவட்டத்தில் அனைத்துதுறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்கும்படி கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    நாகை மாவட்டத்தில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 9 பல்நோக்கு பேரிடர் மையங்களும், 22 புயல் பாதுகாப்பு மையங்களும் , பள்ளி- கல்லூரிகள், சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 627 கட்டிடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    தீயணைப்பு துறை மூலம் தலா 10 பேர் அடங்கிய 9 குழுக்களும், காவல் துறை மாநில பேரிடர் பயிற்சி காவலர்கள் 10 பேர் வீதம் 8 குழுக்களும் தயார் நிலையில் உள்ளனர். தமிழ்நாடு மின்வாரிய துறை சார்பில் 6 ஆயிரம் மின்கம்பங்களும், மீன்வளத்துறை சார்பில் 54 படகுகளும் தயார் நிலையில் உள்ளன.

    மேலும் மாவட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் மணல் மூட்டைகளும், 56 மரம் அறுக்கும் கருவிகளும், 90 பொக்லைன் எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.

    அதுமட்டுமின்றி தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் நாகை மாவட்டத்திற்கு வரவுள்ளனர். அவர்கள் இன்று மாலை நாகைக்கு வந்து அதன் பின்னர் பல்வேறு குழுக்களாக பிரிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Gaja #GajaCyclone
    குத்தாலம் அருகே உறவினர்கள் தரக்குறைவாக பேசியதால் அரசு பஸ் கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் மேல தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. சீர்காழி அரசு போக்குவரத்து பணி மனையில் தற்காலிக கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவரது தங்கைக்கு திருமணம் நடந்தது. அப்போது அவரது உறவினர் , மணிகண்டனை குறித்து தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த மணிகண்டன், நேற்று திரு குளம்பியம் என்ற இடத்துக்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி பாலையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேளாங்கண்ணியில் உள்ள லாட்ஜியில் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். அதிகாரிகள் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி முதலிப்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் விவேக்(வயது 25). இவர் மணிமுத்தாறில் உள்ள சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் விவேக் தங்கி இருந்தார். நீண்ட நேரமாக அறை கதவு திறக்கப்படவில்லை.

    இதையடுத்து லாட்ஜ் ஊழியர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறையில் இருந்த மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு விவேக் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதையடுத்து வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தூக்கில் பிணமாக தொங்கிய விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட விவேக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 1½ மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு விவேக், வேளாங்கண்ணிக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் விவேக் கடைக்கு சென்று புதிய புடவை ஒன்று வாங்கி அதில்அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விவேக் அதிகாரிகளின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டாரா? காதல் விவகாரமா? அல்லது குடும்ப பிரச்சினையா? என்று வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகையில் பணமதிப்பிழப்பு செய்த மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    நாகப்பட்டினம்:

    பணமதிப்பிழப்பு செய்த மத்திய அரசை கண்டித்து நாகை தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். நகர தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சந்தானமாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் துணை தலைவர் பன்னீர், வட்டார தலைவர்கள் சுப்பிர மணியன், செய்யதுபிக்கின் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பணமதிப்பிழப்பு செய்த மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நாகூர் நகர தலைவர் அப்துல் காதர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    நாகை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் 7-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
    நாகூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக நாகை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வந்தது.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு நாகை, வேளாங்கண்ணி, திருப்பூண்டி, கீழையூர், திருமருகல், கீழ்வேளூர், வாய்மேடு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையின் காரணமாக கீழ்வேளூர் தெற்கு நெம்மேலி பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    தண்ணீரை வடியவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது.

    தொடர் மழையாலும், கடல்சீற்றம் காரணமாகவும் கடந்த 6 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்தநிலையில் கடல் சீற்றம் காரணமாக நேற்று 7-வது நாளாக நாகை, செருதூர், காமேஸ்வரம், விழுந்தமாவடி, அக்கரைப்பேட்டை, சாமாந்தான்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்களது விசைபடகுகள் மற்றும் பைபர் படகுகளை கடுவையாற்று கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் அக்கரைப்பேட்டை மீன் இறங்குதளம் வெறிச்சோடி காணப்பட்டது. 
    நாகூர் அருகே சரக்கு வேன் மோதி பொறிவியாபாரி பரிதாபமாக இறந்தார். இதில் வியாபாரியின் மகன், மகள் படுகாயம் அடைந்தனர்.
    நாகூர்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அய்யனார் கோவில் பண்டக சாலை தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது50). பொறிவியாபாரி. இவரது மகன் சந்தோஷ்(12), மகள் நந்தினி(17). இந்தநிலையில் நேற்று காலை வேளாங்கண்ணியில் இருந்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஸ்ரீ வாஞ்சியம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக உதயகுமார் தனது மகன், மகளுடன் மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உதயகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ், நந்தினி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். மேலும் இறந்த உதயகுமார் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சரக்கு வேன் டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர். 
    நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீபாவளிக்கு முதல் நாளும், தீபாவளி அன்றும் ரூ.6 கோடியே 83 லட்சத்து 57 ஆயிரத்து 700-க்கு மது விற்பனை ஆகி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சாதாரண நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், பண்டிகை நாட்களிலும் மது விற்பனை வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கும்.

    தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை ஆகிய பண்டிகை நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 96 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தீபாவளி பண்டிகையையொட்டி தீபாவளிக்கு முதல் நாளும், தீபாவளி அன்றும் ரூ.6 கோடியே 83 லட்சத்து 57 ஆயிரத்து 700-க்கு மது விற்பனை ஆகி உள்ளது.

    5-ந் தேதி(தீபாவளிக்கு முதல் நாள்) பீர் வகைகள் ரூ.36 லட்சத்து 60 ஆயிரத்து 840-க்கும், மது வகைகள் ரூ.3 கோடியே 13 லடசத்து 52 ஆயிரத்து 70-க்கும் விற்பனை ஆகி உள்ளது.

    6-ந் தேதி(தீபாவளி அன்று) பீர் வகைகள் ரூ.60 லட்சத்து 80 ஆயிரத்து 700-க்கும், மது வகைகள் ரூ.2 கோடியே 72 லட்சத்து 64 ஆயிரத்து 90-க்கும் விற்பனை ஆகி உள்ளது.

    தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் ரூ.6 கோடியே 11 லட்சத்து 2 ஆயிரத்து 760-க்கு விற்பனை ஆனது. இந்த ஆண்டு ரூ.6 கோடியே 83 லட்சத்து 57 ஆயிரத்து 700-க்கு விற்பனை ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.72 லட்சத்து 54 ஆயிரத்து 940 அதிகம் ஆகும்.
    சீர்காழி அருகே விபத்தில் வங்கி ஊழியர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே கீழதென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.மயிலாடுதுறை அடுத்த மூங்கில் தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயபாலன் (24).

    இந்த நிலையில் நேற்று மாலை கார்த்திகேயன் , மோட்டார் சைக்கிளில் சட்ட நாதபுரம் ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே விஜயபாலன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அப்போது திடீரென 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காயம் அடைந்த விஜயபாலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயபாலன் இறந்தார்.

    இந்த விபத்து பற்றி சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் பலியான கார்த்திகேயனுக்கு திருமணமாகி மனைவியும் 8 வயதில் மகனும் உள்ளனர்.

    காரைக்காலில் இருந்து ஆம்னி பஸ்சில் கடத்தி வரப்பட்ட 2500 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் - கண்டக்டர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள நண்டலாறு சோதனை சாவடியில் பொறையார் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ் மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது காரைக்காலில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு ஆம்னி பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது அதில் 10 மூட்டைகள் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. 10 மூட்டைகளிலும் 2500 பாக்கெட் சாராயம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து வேளாங்கண்ணி, கருவேலன் காட்டை சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் சுப்பிரமணியன் (வயது 47). காரைக்கால் வருச்சிக்குடியை சேர்ந்த கண்டக்டர் முகமது ரியாசிதீன் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட தனியார் பஸ்சும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தீபாவளி பண்டிகையை யொட்டி சீர்காழியை சேர்ந்த சாராய வியாபாரிக்கு சாராய பாக்கெட்டுக்களை பஸ்சில் மறைத்து வைத்து கொண்டு வந்ததாக பஸ் டிரைவரும், கண்டக்டரும் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சாராய வியாபாரி கும்பலை சேர்ந்த மேலும் 2 பேரை கைது செய்தனர்.

    காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு ஆம்னிபஸ்சில் 10 சாராய மூட்டைகளை கடத்தி வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    நாகை மாவட்ட மீனவர்கள் இன்றும் 5-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

    நாகப்பட்டினம்:

    வடகிழக்கு பருவ மழை கடந்த 1-ந் தேதி தொடங்கியது.

    டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையடுத்து பரவலாக மழை பெய்து வருகிறது. 1-ந் தேதி முதல் 4-ந் தேதி முதல் மழை பெய்தது.

    நேற்று ஒரு சில இடங்களில் லேசாக மழை பெய்தது. நாகை. வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் கடந்த 4 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இதனால் மீனவர்கள் வருமானமின்றி தவித்து வந்தனர்.

    இதற்கிடையே நாளை (6-ந் தேதி) முதல் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதனால் நாகை மாவட்ட மீனவர்கள் இன்றும் 5-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மேலும் கரையோரங்களில் தங்களது விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதேபோல் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் உப்பள தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதை நம்பியுள்ள சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வருமானமின்றி அவதிப்பட்டு வருகிறார்கள்.

    தஞ்சை மாவட்டத்தில் மல்லிபட்டினம், சேதுபாவா சத்திரம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று 5 -வது நாளாக கடலுக்கு செல்ல வில்லை.

    ×