என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கஜா புயலால் நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடும் சேதம் அடைந்துள்ளது. #GajaCyclone
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் கடந்த 16-ந்தேதி அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரை கடந்தது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    புயலால் மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள், டவர்கள் கீழே விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. கஜா புயல் வந்து சென்ற பின்னரும் இன்னும் டெல்டா பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.

    இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த வீடும் தப்பவில்லை. நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த வீடு நினைவு இல்லமாகவும், நூலகமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    கஜா புயலால் இந்த வீட்டின் முன்பகுதியில் இருந்த மரம் விழுந்து ஓடுகள் உடைந்தன. முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையும் சேதம் அடைந்துள்ளன. இது தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone
    நாகை மாவட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதி செய்யாததால் 26 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #Gajastorm #Storm

    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மாவட்டம் கடும் பேரழிவை சந்தித்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மரங்கள், வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மீனவர்களின் படகுகளும் சேதம் அடைந்துள்ளன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    பல கிராமங்களில் மக்கள் அடிப்படை வசதி செய்து கொடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். சாலையில் விழுந்த மரங்களை கூட அதிகாரிகள் வெட்டி அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகிறார்கள். பல கிராமங்களில் கிராம மக்களே வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர்.

    மேலும் புயல் பாதிப்பினால் மின்சாரமும் கடந்த 4 நாட்களாக இல்லாததால் கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. இதனால் உணவு, குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் வீடுகள் சேதம் அடைந்துள்ளதாலும் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் நிர்கதியாக உள்ளனர்.

    இதனால் பல கிராமங்களில் மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதி இல்லாதால் ஆத்திரம் அடைந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் நாகை மாவட்டத்தில் 26 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகை அருகே உள்ள பூவைத்தேடி, கண்ணித்தோப்பு, காமேஸ்வரம், ஈசனூர், ஆலங்குடி, ஓடாச்சேரி, மணக்குடி, முதலியப்பன்கண்டி, தாதன்திருவாசல், வேட்டைக்காரனிருப்பு, கரியாப்பட்டினம் உள்ளிட்ட 26 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

    இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத் துறைப்பூண்டி பகுதிகளிலும் மக்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். #Gajastorm #Storm

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சுற்றுப்பயணம் செய்து சேதப்பகுதிகளை பார்வையிட்டார். #GKVasan #Gajastorm

    நாகப்பட்டினம்:

    நாகை அக்கரைப்பேட்டை, வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய பகுதிகளில்புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதன்பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    நாகை அக்கரைப்பேட்டை ஊராட்சியில் மீனவர்களை சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்ட பாதகத்தையும், அவர்களுக்கு அரசு என்ன பணிகள் செய்ய வேண்டும் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டேன்.

     


    மீனவர்களை பொறுத்த வரையில் கடும் புயல் மழை காற்றின் காரணமாக ஏராளமான படகுகள் சேதம் அடைந்த நிலையில் வேதனையில் இருக்கின்றனர்.மீனவர்களின் வீடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

    வாழை,நெல்,தென்னை, முந்திரி உள்ளிட்ட பயிர்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும். புயலால் பலியான குடும்பங்களுக்கு நபர்களுக்கு தலா ரூ. 25 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும்.

    புயலால் வீடு வாசல் இழந்து நிற்கும் பொதுமக்கள், அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரையில் அரசு நிவாரண முகாம் அமைத்து அவர்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டும்.

    தமிழக அரசு மீட்பு பணியை முடுக்கி விட வேண்டும். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு அதுகுறித்த தகவல்களை கூற வேண்டும். அமைச்சர் சொல்கிற கருத்துக்களும் இங்கு பாதிக்கப்பட்ட மக்கள் சொல்லும் கருத்துகளும் வேறு மாதிரியாக உள்ளது. அதனால்தான் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதனால் தான் பொது மக்கள் அமைச்சர்களை திருப்பி அனுப்பும் நிலை உருவாகியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #GKVasan #Gajastorm

    மறுசீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவடையாததால் நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #Gaja
    கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இதனால் நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்ற கலெக்டர் அறிவித்துள்ளார்.

    மேலும் பள்ளிகள் இருக்கும் இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையாமல் இருந்தால், அந்தந்த பள்ளி நிர்வாகம் விடுமுறை விடலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    கஜா புயல் காரணமாக மூன்று நாட்கள் மின்சாரம் இல்லாததால் செல்போன் பவர் பேங்க், எமர்ஜென்சி லைட் அதிக அளவில் விற்பனையாகிறது. #Gaja #GajaCyclone
    கோரதாண்டவம் ஆடிய கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டது. புயல் - மழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததாலும், மின்கம்பங்கள் சாய்ந்ததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

    தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அனைத்து துறை ஊழியர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் அன்றாட தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் ஆகியவை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் கடந்த 3 நாட்களாக மின் இணைப்பு கிடைக்காமல் 100-க்கும் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

    தஞ்சையில் ஒரு சில இடங்களில் மின்சார கம்பங்கள் சீரமைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மின் ஊழியர்கள் மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஊழியர்கள் தஞ்சைக்கு வரவழைக்கப்பட்டு மின் கம்பங்கள் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கஜா புயலில் மின்சாரம் முழுமையாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் வீடுகள் 3 நாட்களாக இருளில் மூழ்கி உள்ளன. எப்போதும் மக்கள் கைகளில் இருக்கும் செல்போன்கள் சார்ஜ் போட வசதி இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கும் நிலை நீடித்து வருகிறது.

    தஞ்சை நகரத்தில் பெரும்பாலானவர்களின் செல்போன்கள் சார்ஜ் போட வசதி இல்லாமல் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் அவர்கள் செல்போன்களுக்கு சார்ஜ் செய்ய பவர் பேங்குகளை வாங்க கடைகளில் திரண்டனர்.

    செல்போன் வசதி இருந்தால் மட்டும் எந்த தகவல்களையும் மற்றவர்களுக்கு பரிமாற முடியும். மேலும் ஏதாவது ஆபத்து என்றால் கூட உதவிக்கு மற்றவர்களை அழைக்க முடியும் என்பதால் செல்போனில் சார்ஜ் வைத்திருப்பது இந்த தருணத்தில் அவசியமாக உள்ளது.

    இதையொட்டி தஞ்சை பர்மா பஜாரில் உள்ள கடைகளில் நேற்று மக்கள் அதிக அளவில் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் பவர் பேங்குகளை வாங்கி சென்றனர். பவர் பேங்குகளை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு கடைக்காரர்கள் அவர்களது செல்போனில் சார்ஜ் ஏத்தி விட்டும், அவர்கள் வாங்கி செல்லும் பவர் பேங்கில் சார்ஜ் முழுமையாக ஏத்தி விட்டும் விற்பனை செய்தனர்.

    இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, மக்கள் அவர்கள் பகுதியில் மின் இணைப்பு இல்லை என்பதால்தான் பவர் பேங்க் வாங்கி செல்கின்றனர். இதனால் எங்களால் முடிந்த உதவியாக அவர்கள் செல்போனுக்கும், வாங்கி செல்லும் பவர் பேங்குக்கும் சார்ஜ் நிரப்பி கொடுக்கிறோம் என்றனர்.

    இதேபோன்று மின்சாரம் இல்லாமல் பேட்டரியில் இயங்கும் எமர்ஜென்சி லைட்டுகளும் தஞ்சையில் அதிகமாக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
    கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் நிலைகுலைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆய்வு செய்தார். #TNDeputyCM #OPanneerselvam #GajaCyclone #GajaCycloneNagapattinam
    நாகப்பட்டினம்:

    தமிழ்நாட்டின் சில மாவட்டங்களை சின்னாபின்னப்படுத்திய கஜா புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. கிராமபுறங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. இதனால், விவசாயிகளுடைய வாழ்வாதாரமே சீர்குலைந்து விட்டது. அவர்கள் பயிரிட்ட பயிர்கள் வாழை, தென்னை பயிர்கள் எல்லால் புயல் காற்றால் முறிந்து சேதமாகி விட்டது.

    அதை எல்லாம் கணக்கிடுகின்ற பணி நடந்து கொண்டிருக்கின்றது. இந்த புயலால் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். அதுபோல் கால்நடைகள் ஆடு, மாடுகள் என 735 கால் நடைகளும் உயிரிழந்திருக்கின்றன.

    புயல் பாதித்த பகுதிகளை வரும் முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் செவ்வாய்கிழமை சென்று பார்வையிட உள்ளார்.

    இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆய்வு செய்தார். இங்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்திய அவர், கடுமையான சேதத்துக்குள்ளான பகுதிகளை சென்று பார்வையிட்டு வருகிறார். #TNDeputyCM #OPanneerselvam #GajaCyclone #GajaCycloneNagapattinam
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் இரவு - பகலாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #Gaja #GajaCyclone
    நாகப்பட்டினம்:

    கஜா புயலுக்கு நாகை மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கடலோர கிராமங்களில் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    நாகை மாவட்டத்தில் ‘கஜா’ புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தற்போது அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    முதற்கட்டமாக அனைத்து கிராமங்களுக்கும் செல்லும் பிரதான சாலைகளில் சாய்ந்து கிடக்கும் மரங்கள் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் மூலம் அகற்றப்பட்டுள்ளன. இதற்காக 151 நவீன மரம் அறுக்கும் எந்திரங்கள், 92 பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 28 லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகளுக்கு 2 ஆயிரம் பணியாளர்கள் இரவு, பகலாக பணிபுரிந்து வருகின்றனர்.

    புயலில் சிக்கி சாய்ந்துள்ள மரங்களை அகற்றவும், சேதமடைந்துள்ள மின் கம்பங்களை மாற்றிடவும் தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலோர கிராமங்களில் வீடுகள், மரங்கள், பொதுமக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களின் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    புயலால் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து கிராமங்களுக்கும் நடமாடும் மருத்துவக்குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஜெனரேட்டர்கள் மூலம் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மின் இணைப்பு வழங்க பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினர்.
    மரங்கள் முறிந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆங்காங்கே கிராம மக்கள் குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    வங்க கடலில் உருவான கஜா புயல் நேற்றுமுன்தினம் அதிகாலை நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையை கரையை கடந்தது. கஜா புயல் 120 கிலோ மீட்டர் பலத்த காற்றுடன் வீசியதால் டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்டு சென்றது. குறிப்பாக நாகை, வேதாரண்யம், திருவாரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது.

    டெல்டா மாவட்டங்களில் 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாலைகளிலும், தெருக்களிலும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. மேலும் தென்னை, வாழை, கரும்பு, வெற்றிலைக்கொடி, சம்பா பயிர்கள் முற்றிலும் சேதமானது. மேலும் செல்போன் டவர்கள் விழுந்து சேதமானதில் தொலைதொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சுமார் 50 ஆயிரம் மின்கம்பங்கள் விழுந்ததால் டெல்டா மாவட்டங்களில் கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் கிடக்கிறது.

    கஜா புயலால் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வீடுகளை இழந்து ஆயிரக்கணக்கான மக்கள் ரோட்டில் வசிக்கும் நிலை உள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் சுமார் 90 ஆயிரம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது குடிநீர், உணவு, மின்சாரம் எதுவுமே கிடைக்காததால் கிராம மக்கள் அதிகளவில் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

    இதற்கிடையே டெல்டா மாவட்டங்களில் கிராமங்களுக்கு செல்லும் எல்லா வழிகளிலும் மரங்கள் முறிந்து கிடப்பதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே கிராம மக்கள் குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் வழங்க கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக நாகை, வேதாரண்யம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், விழுந்தமாவடி, திருவோணம், மன்னார்குடி ஆகிய இடங்களில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நாகை சாமந்தான்பேட்டை, நாகூர் பட்டினச்சேரி உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நாகை பகுதியில் உள்ள அன்னை சத்யா காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 300-க்கும் மேற்பட்டவர்கள் இவர்களுக்கு உணவு, குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படவில்லை என கிராம மக்கள் கூறினர்.

    இந்த நிலையில் உணவு, குடிநீர் கிடைக்காத விரக்தியில் மீனவ கிராம மக்கள் நாகை- காரைக்கால் சாலையில் தெற்குபால் பண்ணைச்சேரி பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

    வேதாரண்யம் தாலுகாவில் 54 ஊராட்சிகளில் 60 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காஜ புயலால் சுமார் 25 ஆயிரம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தனி தீவுபோல் காட்சியளிக்கும் வேதாரண்யத்தில் இன்று வரை எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. இதனால் குடிநீர், அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். குழந்தைகளும், பெண்களும் பட்டினியால் தவித்து வருகின்றனர். மேலும் விறகுகளும் ஈரமாக இருப்பதால் சமையல் செய்யவும் வழியில்லாமல் உள்ளனர்.


    நாகை-  காரைக்கால் சாலையில் மீனவ கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டபோது எடுத்தபடம்

    வேதாரண்யம், வேட்டை காரனிருப்பு, தலைஞாயிறு, வானவன் மகாதேவி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், ஆறுக்காட்டுத்துறை, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மந்த கதியில் நடப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் ஆவேசம் அடைந்த மக்கள் ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை. மேலும் சாப்பாடு இல்லாமல் பசி பட்டினியால் குழந்தைகளுடன் தவித்து வருகிறோம். எந்த உதவியும் கிடைக்காமல் கடந்த 3 நாட்களாக அவதிப்பட்டு வருகிறோம். கடும் குளிரிலும் சாலைகளிலும் படுத்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    பட்டுக்கோட்டை நகரில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் 3-வது நாளாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தஞ்சை மாவட்டத்திலேயே பட்டுக்கோட்டையில்தான் கஜா புயலால் சேதம் அதிகமாக உள்ளது. குறிப்பாக 4 லட்சத்தும் மேற்பட்ட தென்னை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

    இதேபோல் அதிராம் பட்டினம் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரூராட்சி சார்பிலோ, அரசு சார்பிலோ எந்த உதவியும் வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் மீனவ கிராம மக்கள் ஈடுபட்டனர்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கஜா புயலால் பாதிக்கப்பட்ட தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்களும், மேலப்பாலம் பகுதியை சேர்ந்த துப்புரவு பணியாளர்களும் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மேலப்பாலம் அருகே கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. சுமார் ரூ.10 ஆயிரம் கோடி வரை சேதமாகி உள்ளதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே நாகை, திருவாரூர், தஞ்சை மாவட் டங்களில் எங்கு பார்த்தாலும் திடீரென மக்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மீட்பு பணிகள் ஒருபக்கம் நடந்து கொண்டு இருந்தாலும், அதிகமாக பாதிக்கப்பட்ட கிராம பகுதிகளுக்கு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். சில இடங்களில் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு மக்கள் போராட்டம் நடத்தும் நிலையும் இருந்து வருகிறது.
    கஜா புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நாகை மாவட்ட மீனவ கிராம மக்கள் நிவாரணம் வழங்க கோரி மறியலில் ஈடுபட்டனர். #GajaCyclone
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மாவட்டம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 44 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் புயலால் படகுகள் சேதமாகி வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    நாகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெற்கு பால்பண்ணை சேரி பகுதியில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த முகாமில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் முகாமில் சாமந்தன்பேட்டை பகுதி மீனவ கிராம மக்கள் தங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் சாமந்தன்பேட்டை பகுதி மீனவ கிராம மக்கள் திடீரென நாகை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பால்பண்ணை சேரி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த போராட்டம் குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    நேற்று முன்தினம் கஜா புயலால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளோம். இங்கு வந்து அதிகாரிகள், எங்களுக்கு குறைகளை கேட்பது இல்லை. புயலால் வீடுகள், படகுகள் சேதமாகி உள்ளது. தமிழக அரசு அதிகாரிகள், சேத விவரங்களை கணக்கெடுக்காமல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க முன்வராமல் உள்ளனர். இதை கண்டித்து மறியல் செய்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #GajaCyclone
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். #GajaCyclone #Stalin
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் காந்தி நகரில் புயல் பாதித்த பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    கஜா புயல் வரும் என மத்திய அரசு எச்சரித்திருந்ததால், ஓரளவுக்கு தமிழக பேரிடர் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது.

    புயல் ஏற்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்ததால் தமிழக அரசு ஓரளவு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அரசை பாராட்டினேன். தவறு நடந்தால் தட்டிக்கேட்கும், பாராட்டக்கூடிய வகையில் செயல்பட்டால் பாராட்டும் இயக்கம் திமுக.



    புயல் பாதித்த பகுதிகளை இன்று பார்வையிட்டேன். கஜா புயலால் எட்டு மாவட்டங்களில் அதிக பாதிப்பு அடைந்துள்ளது. 

    மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் மின் சீரமைப்பு பணியை விரைந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் வேகமாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்புகளை மேலும் குறைத்திருக்கலாம் என தெரிவித்தார். #GajaCyclone #Stalin
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள மீனவர்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். #GajaCyclone #DMK #MKStalin
    தரங்கம்பாடி:

    கஜா புயலால் தஞ்சை ,நாகை, திருவாரூர், மற்றும் கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.

    ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததில் பல கிராமங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. விவசாய பயிர்கள் தேசமாகி உள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலோர பகுதிகளில் விசைப்படகுகள் சேதமானதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நாகை மாவட்டத்திற்கு வந்தார்.


    நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் வந்தார். அவருடன் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு , முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோரும் வந்தனர்.

    அப்போது அங்கு தரங்கம்பாடி மீனவர்களிடம் அவர் குறைகளை கேட்டார். கஜா புயலில் எந்தளவுக்கு சேதம் ஏற்பட்டது? மேலும் புயலின் போது வீசியெறியப்பட்டு சேதமான படகுகளை அவர் பார்வையிட்டார்.

    சுமார் அரைமணி நேரம் அவர் மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அதன்பிறகு நாகை அக்கரைபேட்டைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பிறகு கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதிக்கு புறப்பட்டு சென்றார். #GajaCyclone #DMK #MKStalin
    கஜா புயல் தாக்கத்தின் காரணமாக நாகை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 94 நிவாரண முகாம்களில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #GajaCyclone
    நாகை:

    கஜா புயல் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    கஜா புயல் தாக்கத்தின் காரணமாக கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை மற்றும் திருவாரூரில் 94 நிவாரண முகாம்களில், 14,455 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    வேதாரண்யத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்களுக்கு தேவையான  உணவுப் பொருட்களை வழங்க உத்தரவிட்டார். முகாம்களில் இருப்பவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    நாகப்பட்டினத்தில் மட்டும், 10,692 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூரில் குடிசை பகுதியில் வசித்த மக்கள் நிவாரண முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். #GajaCyclone 
    ×