search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீதிகளில் ஆறு போல ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்
    X

    வீதிகளில் ஆறு போல ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்

    • மதுரை பைக்காரா பகுதியில் வீதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆறு போல ஓடுகிறது.
    • துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    மதுரை

    பைக்காரா பகுதிகளில் வீதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆறு போல ஓடுவதால் பொதுமக்கள் நடமாட முடியாமல் பெரும் தவிப்பில் உள்ளனர்.

    மதுரை மாநகராட்சி 72-வது வார்டு பைக்காரா பகுதியில் உள்ள விவேகானந்தர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற வழி இன்றி வீதிகளில் ஆறு போல ஓடி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    வீதிகளில் நடந்து கூட செல்ல முடியாமல் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். கடும் துர்நாற்றம் வீசுவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் வீதிகளின் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு உருவாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    72-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பைக்காரா கருப்புசாமி பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இது சம்பந்தமாக உரிய அதிகாரிகளிடம் கவுன்சிலர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

    இது குறித்து கவுன்சிலர் கருப்புசாமி கூறியதாவது:-

    இந்த வார்டில் பல்வேறு இடங்களில் பாதாளசாக்கடை கழிவுநீர் வீதிகளில் ஆங்காங்கே பெருக்கெடுத்து ஓடுகிறது. சாக்கடைகளில் மலம் உள்ளிட்ட கழிவுகளும் வருவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மதுரை மாநகராட்சி நிர்வாகம் இந்த பகுதிகளில் விரைந்து செய்து தர வேண்டும். பல்வேறு இடங்களில் குடிநீரில் சாக்கடை கலப்பதாக புகார் எழுந்துள்ளன.

    இது தொடர்பாகவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நடவடிக்கை இல்லை.

    எனவே பொதுமக்களின் நலன் கருதி விரைவாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது பரவலாக மழையும் பெய்து வருவதால் மழை நீரும் சாக்கடை நீரும் கலந்து அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×