search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரவுடி மீது மதுரை கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் வழக்கு
    X

    ரவுடி மீது மதுரை கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் வழக்கு

    • ரவுடி மீது மதுரை கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    • நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற 3-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    மதுரை

    மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 50). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை ஐகோர்ட்டில், "எஸ்.எஸ். காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக மனுத்தாக்கல் செய்தார்.

    இந்தநிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் சார்பில் வக்கீல் குருதாஸ், மதுரை மாவட்ட கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மதுரை சோமசுந்தரம் குடியிருப்பு போலீஸ் நிலையத்தில் பூமிநாதன் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அவர் எல்லிஸ்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கு என்கவுன்டர் செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். அவரின் நற்பெயருக்கு தேவையற்ற முறையில் களங்கம் விளைவிக்கப்பட்டு உள்ளது.

    அவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தியவர், பிரபல குற்றவாளி ஆவார். அவர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். எல்லீஸ்நகர் ரவிக்குமார் மீது எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையம் மட்டுமின்றி திலகர் திடல், கோ.புதூர், நத்தம், ஆலங்குளம், சின்னாளப்பட்டி, திருமங்கலம் நகர், அம்பத்தூர், திண்டுக்கல் மேற்கு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வரும் ரவிக்குமார் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

    மதுரை எல்லிஸ் நகர் தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பில் குடும்பத்துடன் இருந்து வருகிறார். ரவிக்குமார் என்ற டாக் ரவி என்பவருக்கும், ஜெயபாண்டி தரப்பினருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை மூலம் தகவல்கள் வந்ததால் கடந்த மாதம் 25-ம் தேதி ரவிக்குமார் என்ற டாக் ரவியை, போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து ஜெயபாண்டி கூட்டாளிகள் ஏதாவது குற்றசெயலில் ஈடுபடலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுரை வழங்கினார். ரவுடி பட்டியலில் இருப்பவர்களை இன்ஸ்பெக்டர் மற்றும் அதிகாரிகள் எந்த நேரத்திலும் அழைத்து விசாரிக்கலாம் என்று தமிழ்நாடு காவல்துறை உத்தரவு உள்ளது.

    ரவிக்குமாருக்கு எதிராக உள்ள அபாயங்களை கூறி எச்சரிக்கும் பொறுப்பும், கடமையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதனுக்கு உள்ளது. இதனை அவர் உரிய முறையில் மேலதிகாரிகளின் ஆணைப்படி செய்துள்ளார். ஆனால் ரவிக்குமார் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு அடிப்படையில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    இந்திய தண்டனை சட்ட பிரிவின்கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றத்தை ரவிக்குமார் செய்துள்ளார். எனவே பூமிநாதன் மீது குற்றச்சாட்டு சுமத்தியவர் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளாரா? என்பதை கண்டறிய விசாரணை மேற்கொண்டு, அவ்வாறு குற்றம் புரிந்திருந்தால், அதனை எழுத்துப்பூர்வமாக மதுரை நீதித்துறை நடுவர் எண்-6 நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இந்த மனு அனுமதிக்கப்படாவிட்டால், நீதி வழங்குதலில் பெரும் பிழை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உருவாகும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த மனு நீதிபதி மாலதி முன்பு விசாரணைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற 3-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×